கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நச்சுக் காற்றைக் கசிய விட்டு
எச்சமாய் மக்களை வதைத்த முதலி
பெயரை மாற்றி மீண்டும் வந்தான்
நயமாய் வேலை தருகிறான் என்று
இணங்கும் பணியிலா இளைஞரைக் காட்டி
கணத்தில் போற்றும் அறிஞரும் அரசும்
வேலை யில்லோர் பலராய் இருப்பினும்
சோலை யாய்ச்சிலர் பெற்ற நலனைக்
காட்டி முதலியின் பெருமை அதுவென
நாட்டவும் செய்வர் நாணுதல் இல்லோர்.

(நச்சுக் காற்றைக் கசியவிட்டு, தலைமுறை தொடர மக்களை வதைக்கும் முதலாளி வர்க்கத்தினர், வேறு பெயரில் வந்து இங்கு தொழிலைத் தொடங்குகிறார்கள். அவர்கள் படித்த இளைஞர்கள் சிலருக்கு வேலையை அளிக்கிறார்கள். அவ்விளைஞர்கள் வேலையை ஏற்றுக் கொள்வதைச் சுட்டிக் காட்டி, முதலாளி வர்க்கத்தினரை (புனிதமானவர்களாக) முதலாளித்துவ அறிஞர்களும்,  அரசும் உடனே போற்றுகின்றனர். வேலையில்லாதோர் மிக மிகப் பலர் இருந்த போதும் மிக மிகச் சிலர் பெறும் செழுமையான நன்மைகளைக் காட்டி அதை முதலாளிகளின் பெருமையாக எடுத்து உரைத்து நிலை நாட்ட வருகிறார்கள் வெட்கமே இல்லாதவர்கள்.)

- இராமியா