மன்னனின் மனைவியை கனவில் தொட்டவன்
முச்சந்தியில் நிறுத்தப்பட்டான்
அந்தப்புரத்தில் நுழையாமல் கனவுக்குள் ஊடுருவ முடியாதே.
அந்தப்புரத்தில் அத்துமீறி நுழைந்ததாக முதல் குற்றச்சாட்டு
உறங்கிக் கொண்டிருந்த அரசியை உற்றுப் பார்த்ததாக இரண்டாம் குற்றச்சாட்டு
எந்த வழியாக கனவுக்குள் நுழைந்திருப்பான்
கண்களை திறந்து நுழைந்திருந்தால் அரசி கூச்சலிட்டிருப்பாள்
எதன் வழியாக நுழைந்தானென்று தெரியாமலே
பதிவாகி விட்டது மூன்றாம் குற்றச்சாட்டு
அரசியையும், அந்தரங்கத்தையும் அறியாத மனிதனுக்கு
இருபது இசையடிகள் கொடுக்கப்பட்டது
மக்கள் அரசியின் கனவில் அந்தரங்கமாக நுழைந்த மனிதன்
இவனென பேசிக் கொண்டார்கள்
தண்டனையிலிருந்து திரும்பியவன்
தனிமையின் கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டபோது
சட்டென்று உதித்தது
அரசியின் கனவில் நுழைவதற்கான ரகசிய வழி.
- கோசின்ரா