கீற்றில் தேட...

*
காதலில்
நூற்றாண்டைக் கடக்க உதவுகிறது
ஒரு முத்தம்

பேச்சறுந்த வெயில் தினத்தை புறந்தள்ள உதவுகிறது
ஒரு அணைப்பு

அன்பின் மழையைத் தாண்டிப் போக விடுவதில்லை
ஒரு சிறிய கையசைப்பு

நினைவின் மௌனத்தை அடைகாக்கப் பணிக்கிறது
ஒரு கண்ணீர்த் துளி

பிரிவின் உருக்கத்தை உச்சரிக்க முடியாமல்
தவிக்கப் பண்ணுகிறது ஒற்றை உதடு துடிப்பு

இன்மையின் உயரத்திலிருந்து வீழவும்
இருப்பின் பள்ளத்திலிருந்து மீளவும்

திரும்பப் பெற்றுக் கொள்ள இயலாத
ஒரு துயரத்தைப் பெயர்க்கவும்

கரியச் சுவர் நிழலில் யாருமறியா வண்ணம்
படரும் கரும்பாசியென நழுவும்
ஒரு தருணத்தைத் தொட்டுணரவும்

உதவுகிறது

கைகுலுக்கல் இல்லாமல்
புன்னகை இல்லாமல்
சின்னஞ்சிறிய கடிதப் பரிமாறல் கூட இல்லாமல்
உருக்கொள்ளும்

ஒரு நிராகரிப்பு

******

--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )