கீற்றில் தேட...

*
இரவாகிப் படர்கிறேன்
கைப்பேசியில் நீ பந்தல் கட்டும்
உன் வார்த்தைகளின் நிழலுக்கடியில்
உட்கார்ந்திருக்கிறேன்

யாருமற்ற இந்தக் கிணற்றடிக் கல்லில்
என் மனதைத் துவைத்துக் கொண்டிருக்கிறது
உன் இடையறாப் பேச்சு

ஒவ்வொரு விண்மீன்களாய்
ஒளிக்கோடு கிழித்து வெளிச்சம் பதறும் இருளில்
மொட்டவிழும் மல்லிகை மணம் சொல்லுகிறது

பசலை
பசலை

கால் பெருவிரல் நகப் பூச்சு நிறம் மங்கி சிவக்கிறது
வெட்கத்தின் ரகசியத்தை

பின்னங்கழுத்து
காதுமடல்
நெற்றிப்பிறையென
துளித் துளியாய் வியர்வைக் கோர்க்கிறாய்

வேறெங்கிருந்தோ உனது இரவை வார்த்தைத் திரட்டி
அர்த்தம் துளைத்து ஊதி ஊதி மயக்கம் ஊட்டுகிறாய்

இடது கை ஆட்காட்டி விரல் சுரண்டும்
மணல் துகள் அத்தனையிலும் வட்டமாக உருள்கிறது
சத்தமின்றி நீயனுப்புன் முத்தச் சில்லுகள்

பனித்துளி குவியும் ஒரு புல்நுனியில்
சலனமின்றி திரள்கிறது என் உலகம்

*****

--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )