கடல்காற்றில் குளித்தபடி
காலாற நடைபயிலும்
காலை உலாவலில்
கவனத்தை ஈர்க்கிறது,
கடந்த நாட்களில்
கடற்கரையில் நடந்த
வாலிபர் கொலை
கண்ணெதிரே,
பல்லாயிர விழிகள் சாட்சியாய்,
நடைபயின்றவர்
குருதி கொப்பளிக்க
முகம், கழுத்து, மார்பெங்கும்
கத்தி அரிவாளால்
வெட்டிச் சிதைப்பட்டுத்
துடிதுடித்து மாண்ட
சுவடுகள்.
ஞாபகத் தடத்தில்
இரத்தமும் நிணச்சேறும்
உந்துவண்டியின்
உற்சாகப் பயணத்தில்
சாலைச் சந்திப்பில்
சரிந்து திரும்புகையில்
சட்டென நினைவுக்கு..
சில நாட்களுக்கு முன்
இதே சந்திப்பில் நடந்த
சாலை விபத்து
தாறுமாறான போக்குவரத்தில்
சாலைவிதிகளைத்
தொலைத்துவிட்டு
சர்வ சுதந்திரமாய்ச்
சகலரும் பயணிக்கையில்
பேருந்துச் சக்கரத்தில்
சிதைந்த சைக்கிளோட்டி
உருக்குலைந்த உடலை
மூடுவாரில்லாமல்..
ஞாபகத் தடத்தில்
இரத்தமும் நிணச்சேறும்
சாலைகள் தோறும்
விபத்துகளின் தடங்கள்
வழிகள் தோறும்
வன்முறையின் வண்ணங்கள்
வீட்டில் முடங்கி
செய்தித்தாள் பிரிக்கையில்
குண்டு வீச்சு, ராணுவத் தாக்குதல்
வன்முறை வெறியாட்டம்
விபத்துக்கள்..
பார்வைத் தடங்கள் தோறும்
இரத்தமும் நிணச்சேறும்
செய்தித்தாளை மடக்கிப் போட்டு
ஆசுவாசம் கொள்ள
தொலைக்காட்சி திறக்கையில்
கண்ணையும் தாண்டி
கவனத்தில் நிறையும்
காட்சிகளோடு
அங்கேயும் தவறாமல்
அதேதான்..
என்ன செய்ய!
ஞாபகத் தடங்கள் தோறும்
இரத்தமும் நிணச்சேறும்