எண்ணம் முதலோ பொருளே முதலோ
உண்மை விளக்கும் தத்துவ ஞானம்
மாறுதல் கடமை மறந்தே இருக்க
வீறுகொண் டெழுந்தது மார்க்சிய ஞானம்
பொதுவில் யார்க்கும் நன்றே எனினும்
நிதியுடை முதலியை அழிக்கும் வெம்மையும்
தொழிற்செய் வினைஞரைப் போற்றும் தன்மையும்
செழிப்புற ஒருங்கே கொண்டத னாலே
விசித்திர நெருப்பு என்றிட லாமே?
(கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் ஆகிய இரண்டு தத்துவங்களும் (இவ்வுலகின்) உண்மைகளை விளக்க முயன்றனவே தவிர, (இவ்வுலகை) மாற்றி அமைக்க வேண்டும் என்ற கடமையை மறந்தே இருந்தன. (இந்நிலையில் மாற்றமே வளர்ச்சியின் அடிப்படை என்று) வீறு கொண்டு எழுந்த மார்க்சிய மெய்ஞ்ஞானமானது, பொதுவாக அனைவருக்கும் நன்மை பயப்பது தான் என்றாலும் செல்வம் படைத்த முதலாளிகளை அழிக்கும் வெம்மையையும், தொழில் செய்யும் உழைப்பாளர்களைப் போற்றும் தன்மையையும் செழுமையாக ஒருங்கே கொண்டுள்ளது. ஆகவே இந்த மெய்ஞ்ஞானத்தை விசித்திரமான நெருப்பு என்று கூறலாம் அல்லவா?)
- இராமியா