ஒரு பெண்ணிற்கு லதாவென்று
பெயர் சூட்டிவிட்டு
காதலிக்கத் தொடங்கினேன்
காதலிப்பதற்கு உடலைவிட
பெயர் முக்கியமாயிருந்தது
பெயர் கோபித்துக் கொள்வதில்லை
பொய் சொல்வதில்லை
பறவைகள் போலப் பறந்து
நம்மை பின் தொடர்வதில்லை
நிலா இல்லாத ராத்திரிகலில் பெயர்
முழுநிலா போல தோன்றும்
தனிமையிலிருக்கும் போது
மழை ஈரத்தை கூட்டிவரும்
ஓவ்வொரு முறை உச்சரிக்கும் போது
ஒரு பூ உடலுக்குள் மலரும்
பெண்ணைக் காதலிப்பதை விட
பெயரைக் காதலிப்பது சுலபமாக இருக்கிறது
அந்தப் பெயருக்கு எந்த உடலையாவது
பொருத்திக் கொள்ளலாம்
அதற்கு ஒப்பனைகள் தேவையில்லை
எப்போதும் வயதாவதில்லை
அது யாரையும் சந்தேகிப்பதில்லை
குறிப்பாக நம்மை வஞ்சிப்பதில்லை
பெயர் சில சமயம் இனிப்பாகத் தோன்றும்
சிறிய கவிதை போல காட்சி தரும்
லதா எனும் பெயர்
புதிய நகராமாக்கியிருக்கிறது எனக்குள்
அது ரயில் வண்டியாகி என்னை
புராதன நகரங்களுக்கு அழைத்துச் செல்கிறது
பெயர் என்பது ஒரு சமுத்திரமெனில்
மீனாக மாறிக் கொள்ளலாம்
பெயர் என்பது கவிதையெனில்
சொல்லாக ஒளித்துக் கொள்ளலாம்
பெயரை காதலிக்காதவர்கள்
ஒரு பெண்ணை காதலித்திருக்க முடியாது.
கீற்றில் தேட...
பெயரைக் காதலித்தல்
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்