கீற்றில் தேட...

வெந்நீர் ஆவியின் ஆற்றலை அடக்கிய
அந்நாள் முதலாய்  பாய்ச்சலில் அறிவியல்
உணவுடை உறைவிடம் நிறைவினும் மேலாய்க்
கொணர்ந்த நலன்கள் கணக்கில் அடங்கா
இயற்கை அறிவியல் மனிதனுக் களித்த
வியத்தகு ஆற்றல் போற்றற் குரியதே
தொடர்ந்த நிகழ்வாய் மனித உறவில்
படர்ந்த மாற்றம் கணக்கில் கொண்டு
புரட்சி அறிஞர் மார்க்சும் எங்கெல்சும்
முரணின்றி அளித்த சமூக அறிவியல்
இயற்கை அறிவினும் மேம்பட்ட தன்றோ

(வெம்மையான நீராவியின் ஆற்றலை அடக்கி ஆள ஆரம்பித்த நாள் முதலாய், பாய்ச்சலில் முன்னேறிய இயற்கை அறிவியல், உணவு, உடை, உறைவிடம் மட்டும் அல்லாது மற்ற நலன்களையும் தேவையை விட அபரிமிதமாக (உற்பத்தி செய்யும் திறனை) மனித குலத்திற்கு அளித்தது. இயற்கை அறிவியல் மனிதனுக்கு அளித்த இந்த வியத்தகு ஆற்றல் போற்றுதலுக்கு உரியதே. (ஆனால்) அதன் தொடர் நிகழ்வாய் (முதலாளி - தொழிலாளி என) மனித உறவில் ஏற்பட்ட மாற்றத்தைக் கணக்கில் கொண்டு, புரட்சி அறிஞர்கள் கார்ல் மார்க்சும், பிரடெரிக் எங்கெல்சும் (சுரண்டல் இல்லாத சமூகத்தை அமைக்க) அளித்த முரண் இல்லாத சமூக அறிவியல் இயற்கை அறிவியலினும் மேம்பட்டது அல்லவா?

- இராமியா