கீற்றில் தேட...

நீதிபதிகள் இல்லாததால் வழக்குகள் தேங்கி இருப்பதைப் போல
துயரங்கள் இருக்கின்றன உலகம் முழுவதும் தீர்க்கப்படாமல்

பூமிக்கு நிறைய கடவுள்கள் தேவைப்படுகிறார்கள்
முன்னெப்போதைப் போலல்லாமல் கடவுள்களின் தேர்வுக்குழுவில்
மதங்களுக்கு இனி அனுமதியில்லை.

ஒரே கடவுள் அவதாரங்கள் எடுக்கும்
பழைய முறை ரத்து செய்யப்படுகிறது.
கடவுளுக்கும் இனி வாரிசுரிமை கிடையாது.

கடவுள்களின் பாதுகாப்பு இனி கடவுள்கள் கையில்
வழங்கப்பட்டிருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு
உடனடியாக வாபஸ் பெறப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் கடவுள்கள்
உலகத்தின் எல்லா நாடுகளுக்கும்
சென்று பணி புரிய வேண்டும்.
கடவுளுக்கென்று தனி தாய்மொழி கிடையாது.
பெண்களுக்கென தனிக் கடவுள்கள் தேவையாயிருப்பதால்
ஐம்பது சதவிகித இட ஒதுக்கீடு உண்டு.

வருமான வரம்புக்கு அதிகமாக
சொத்துக்கள் வைத்துக் கொள்ள
புதிய கடவுள்களுக்கு அனுமதி கிடையாது.
நன்கொடையாகவோ காணிக்கையாகவோ வரும்
பணம், நகை, அசையும் சொத்துக்கள் அசையா சொத்துக்கள்
அறுபது சதவிகிதம் அரசாங்க கஜானாவில் சேர்க்கப்பட்டு விடும்.
தன் பக்தர்களுக்கு பிரத்யோக வண்ணத்தில் உடையணிந்து
வரச் சொல்வதற்கு கடவுளுக்கு உரிமை உண்டு
பணியைச் சரிவர செய்யாத கடவுள்களின் பதவிகள்
இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் பறிக்கப்பட்டுவிடும்.

பழைய கடவுள்களின் கையிலிருக்கும்
ஆயுதங்கள் பறிக்கப்பட்டுவிடும்.
புழைய புனித நூல்கள் அனைத்தும்
காலாவதியாகி விட்டன என்று அறிவிக்கப்பட்டு
புதிய புனித நூல்கள் மனித உரிமை அடிப்படையிலும்
சுற்றுப்புறச்சுழல், பறவைகள் பாதுகாப்பு,
இயற்கை வளம் பாதுகாப்பு, அகதிகள் மறுவாழ்வு சட்டம்
அணு ஆயுதப் பரவல் தடுப்பு சட்டம் என
ஐ.ந. சபைகளின் பிரகடனங்களின் அடிப்படையில் உருவாக்கப்படும்.     
ஒவ்வொரு கடவுளும் தினமும் ஒரு தீவரவாதியை
மனிதனாக மாற்றும் பணியை நிறைவேற்ற வேண்டும்.
கடவுளை விட மனிதர் புத்திசாலிகளாக இருப்பதால்
எல்லா கடவுள்களுக்கும் கணிணி பயிற்சி கட்டாயமாக்கப்படும்.
நவீன தொழில் நுட்பமும்
அணு ஆயுத வெடிப்பிலிருந்து
தப்பிக்கும் பயிற்சியும் அளிக்கப்படும்.
ஓவ்வொரு கடவுளும் புதிய நோய்க்கான
மருந்தை கண்டு பிடிக்க வேண்டும்.
சிறந்து விளங்கும் கடவுள்களுக்கு
பிரபஞ்சமாமணி விருதுகள் வழங்கப்படும்.

கடவுளின் முறைமைகளை கண்காணிக்க
புதிய ஆணையம் அமைக்கப்படும்.
எந்த மதத்தோடும் சாதியோடும் தேசத்தோடும்
இணக்கமாக இருக்கும் கடவுள்களுக்கு
ஆயுள் தண்டனை அளிக்கப்படும்.
பழைய கடவுள்களின் பொறுப்பற்ற தன்மையும்
புராதன பொய்களும் களையப்படும்.

ஒவ்வொரு ஏழு நிமிடத்திலும்
ஒரு பெண் கற்பழிக்கப்படுவதால்
தனியாக ஒரு கடவுள் நியபிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
600 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருப்பதாலும்
பறவைகள், விலங்குகள், வனங்கள், மற்ற உயிரினங்கள்
எல்லாவற்றுக்கும் தேவையான கடவுள்கள் இல்லையென்பதால்
சில காலம் வரை மக்கள் தங்களைத் தாங்களே
பாதுகாத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

பழைய கடவுள்களுக்கு
எந்த படிப்பும் தகுதியும் தேவைப்படாததாலும்
அவர்கள் வேத காலத்திற்கு முந்தியே நியமிக்கப்பிட்டதாலும்
முறையான வழியில் திட்டமிடல் தெரியாதிருப்பதால்
புதிய கடவுள்களுக்கு
சிறப்பு பொருளாதாரப் பயிற்சி அளிக்கப்படும்.
பழைய கடவுள்களைப் போலல்லாமல்
புதிய கடவுள்களுக்கு
வெடிக்குண்டு அகற்றுதல் குறித்து
சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
பொய்களிடமிருந்து கடவுளைப் பிரித்தெடுக்க
புதிய தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும்.

உலகத்தில் சில உயிரினங்கள்
அடியோடு அழிந்து விட்டன்.
அதற்கு எந்தக் கடவுளும்
இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பதால்
அழியும் நிலையிலிருக்கும் அனைத்து உயிரினங்களைக் காப்பதற்கு
அந்தந்த கடவுளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

புழைய கடவுள்களிருக்கும்போதே
உலக யுத்தங்கள், வறுமை, கொடிய நோய்கள், கலவரங்கள்,
இனப்படுகொலைகள், இனவெறிச் செயல்கள்
நடந்துள்ளதால் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு
புதிய கடவுள்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
புதிய கடவுள்களை தேர்ந்தெடுக்கும் வகையில்
நிகழ்காலத்தை கடவுளற்ற காலமாக கருத வேண்டும்.

தன்னை மனிதர்கள் என உணர்ந்த மனிதர்கள் மட்டும்
கொஞ்ச காலத்திற்கு கடவுளின் பணியை
கையிலடுத்துக் கொள்ள வேண்டும்.
புதிய கடவுள்கள் பதவியேற்க வரும்போது
கடவுள் தேவைப்படாத உலகமாக
மனிதர்கள் மாறியிருந்தால் ரொம்பவும் நல்லது.