ஓங்கு புகழ் புரட்சி வென்ற நாட்டில்
ஆங்கிலப் புலவர் ஹெர்பெர்ட் வெல்சும்
அமெரிக்க நாட்டின் ஜான்ரீடு தானும்
தமதூர் தன்னில் திரிவது போல
நாடு முழுவதும் எளிதாய்ச் சுற்றினர்
ஈடிணை இல்லா சுதந்திரம் இருந்தும்
இரும்புத் திரையெனக் கடிதாய்க் கூறிப்
பெரும்போர் தொடுத்த நாஜிகள் இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே அழிந்தனர்
நேர்வழி தன்னில் வென்றிட இயலாது
சோர்ந்து போன கொடியவர் கூடி
விடியல் அரசை வஞ்சத்தில் மாய்த்தனர்
இடிப்பார் இல்லா சந்தை முறையில்
வந்தது அழிவு புவிவெப்ப உருவில்
உந்தித் தடுப்பது சமதர்ம வழியே
செறிவுடை வழியை உறுதியாய்ப் பற்ற
அறிவுடை யோரே செவிமடுப் பீரே
(உயர்வான புகழ் பெற்ற சோஷலிசப் புரட்சி வென்ற (சோவியத்) நாடு முழுவதும், ஆங்கில மொழிப் புலவரான ஹெர்பெர்ட் வெல்சும், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த (பத்திரிக்கையாளர்) ஜான் ரீடும் (யாருடைய துணையும் இன்றி) தம் சொந்த ஊரில் சுற்றுவது போல எளிதாகச் சுற்றிப் பார்த்தனர். (இத்தகைய) ஈடு இணையற்ற சுதந்திரம் இருந்தும் (அது சுதந்திரம் இல்லாத) இரும்புத் திரை நாடு என்று (முதலாளிகளும் முதலாளித்துவ அறிஞர்களும்) பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தனர். அவ்வாறு கடுமையாகக் கூறி, இடையன் ஆட்டு மந்தையை ஓட்டிக் கொண்டு புலி படுத்து இருக்கும் இடத்தை நோக்கி ஓட்டினாற்போல, நாஜிகள் (சோவியத் ஒன்றியத்தின் மேல்) படையெடுத்து அழிந்து போயினர். நேர்வழியில் சோஷலிச அரசை வெல்ல முடியாமல், சோர்ந்து போன கொடியவர்கள் வஞ்சகத்தினால் அதை மாய்த்தனர். (இப்பொழுது) இடிப்பார் இல்லாத சந்தைப் பொருளாதாரம் (இலாபத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு, புவி வெப்ப உயர்வை அதிகரித்திடும் பொருட்களை உற்பத்தி செய்வதில் தறிகெட்டு ஓடிக் கொண்டு இருப்பதால்) புவி வெப்ப உயர்வு என்ற உருவில் இவ்வுலகை அழிவுப் பாதையில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. இவ்வழிவுப் பாதையில் இருந்து பூமியைக் காப்பதற்கு (புவி வெப்ப உயர்வை அதிகரிக்கும் இலாபம் தரும் ஆடம்பரப் பொருட்களின் உற்பத்தியைத் தடுத்து நிறுத்தவும், இலாபம் இல்லாவிட்டாலும் மக்களின் பசி பட்டினியை நீக்க வல்லதும் புவி வெப்ப உயர்வைத் தடுப்பது மட்டுமின்றி குறைக்கவும் கூடிய மரம் வளர்த்தலையும் விவசாயத்தையும் வளர்த்து எடுக்கவுமான) உற்பத்தி முறையை மாற்றி அமைக்கக் கூடிய சோஷலிச முறையே சா¢யான வழியாகும். (பூமியைக் காப்பதற்கு) நிறைவான வழியை உடைய சோஷலிச வழியை உறுதியாகக் கைக்கொள்ள வேண்டும் என்பதை அறிவுடைய மக்களே (தயவு செய்து) புரிந்து கொள்ளுங்கள்.
- இராமியா