இந்நூல் பற்றிய மதிப்புரை மற்றும் இந்நூலின் தேவை குறித்த சுருக்கமான பிந்தைய கருத்துரைக்கு முன்னதாக இந்நூலின் உள்ளடக்கக் கருத்துகளை விரிவாக அறிமுகம் செய்வது இன்றியமையாதது ஆகும். அதன் வழிதான் பேரா.முத்துமோகனின் இடையறாத் தத்துவக் கற்பித்தல் நெறியை உணரமுடியும். இந்நூல் பதினோறு இயல்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. அவை கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம், புலனுணர்வுத் தத்துவம், அறிவுவாதம், பயன்வழிக் கொள்கை, நேர்க்காட்சிவாதம், மார்க்சியம், நிகழ்வியமும் இருத்தலியமும், அமைப்பியலும் பின் அமைப்பியலும், பின்னை நவீனத்துவம், பொருள்கோளியல் என்பனவாகும்.

n muthumohan 310கருத்துமுதல்வாதம் என்ற தலைப்பு பிளேட்டோ, சாக்ரடீஸ், பர்மினிடீஸ் போன்றோரின் தத்துவங் களைச் சுட்டுவதிலிருந்து தொடங்குகிறது. கருத்து முதல்வாதம் என்பதை ஆண்டவன், அறிவு, உள்ளளி, கருத்துக்கள், ஆன்மா, நிரந்தரம் கொண்ட உண்மை ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் தத்துவங்கள் என்கிறது. சோஃபிஸ்டுகள் பலவிதமான தத்துவங்கள் குறித்து ஏராளமான விவாதம் நடத்திப் புகழ்பெற்ற காலத்தில் அவர்களை குதர்க்கவாதிகள், வாயாடிகள் என்ற பார்வையில் கருத்துமுதல்வாதிகள் அவர்களுடன் உரையாடல்கள் நடத்தினர். அதை தொடங்கியவர் சாக்ரடீஸ். அவரைத் தொடர்ந்து பிளேட்டோ அபிப்பிராயங்கள் என்பவை தனிமனித விருப்பு வெறுப்பு சார்ந்தவை. உண்மை என்பதோ பொதுவானது; தற்சார்பற்றது என்றார்.

பர்மினிடிஸ் உண்மையை அடையத் தனிமனிதச் சார்பு கொண்ட அபிப்பிராயங்களைக் கடந்து செல்ல வேண்டும். அது நிலையானது என்பதை “உண்மை உள்ளது; உண்மை அல்லாதது இல்லை” என்ற மேற்கோள் மூலம் வலியுறுத்தினார். பிளேட்டோ அழகு என்பதைப் பற்றிக் கூறும்போது உலகில் நாம் காணும் பொருட்களுக்கு முன்னோடியாக அழகு என்ற ஆகப் பொதுவான கருத்து உள்ளது, அது நிரந்தரமானது என்கிறார். அதை உணர்த்த நாற்காலி என்ற கருத்து மாறாதது. உலக பொருட்களுக்கு எல்லாம் முன்னோடிகள் அக்கருத்துக்கள். கருத்துலகில் ஒவ்வொரு பொருளிற்கும் முன்மாதிரி உண்டு என்கிறார். இதனை அவர் கிரேக்க மொழியில் எயிடோஸ் (Eidos/Idios) என்கிறார். இதையே தமிழில் கருத்துக்கள் என்கிறோம். கருத்துக்களின் பூரணத்துவத்தை மனிதன் நேசிக்க வேண்டும். அவற்றின் முழுமையை மீட்டுக் கொணர முயல வேண்டும். அந்த உன்னதத்தை, அழகை நெருங்கிச் செல்ல வேண்டும். அறிவு இந்த முயற்சிக்கான கருவி, அறிவு என்பது பொருட்கள் பற்றிய அறிவல்ல. பொருட்களுக்கு இருப்பை வழங்கியுள்ள சாராம்சத்தைத் தந்துள்ள கருத்துக்கள் பற்றிய அறிவு. அழகும் அறிவும், உண்மையும் நன்மையும் ஓர் உன்னத நிலையில் சந்தித்துக் கொள்கின்றன. எனவே கருத்துலகின் தொடர்ச்சியைப் பொருள் உலகம் எனக் கொள்ள முடியாது என்கின்றனர் கருத்துமுதல்வாதிகள். கருத்துலகின் வீழ்ச்சி பொருள் உலகம் எனலாம். இது பிளேட்டோவின் புறவயக் கருத்துமுதல்வாதம் என்னும் தத்துவமாகும்.

இமானுவேல் கான்ட் (1724 - 1804) ஜெர்மானிய நாட்டின் புகழ்பெற்ற தத்துவவாதி. இவரது ‘விமர்சனம்’ என்ற புத்தகம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் கறாரான பகுப்பாய்வு நுட்பம், மனிதநேயம் இருந்தமை குறிப்பிடத்தக்கது. கான்ட் தனக்குத் தோன்றும் சிந்தனையைக் கையில் கிடைக்கும் துண்டுக் காகிதம், திருமண அழைப்பிதழின் மறுபக்கம் என்றெல்லாம் எழுதி வைத்துத் தன் சிந்தனையை வளர்த்தவர். முதலாளியுகம் தனிமனிதனையும் அவனது படைப்பாற்றலையும் பெரிதும் பாராட்டிய காலத்தில் அதற்கான தத்துவத்தை உருவாக்கியவர் கான்ட் என்று கார்ல் மார்க்ஸ் மதிப்பிட்டு உள்ளார். அவருக்குப் பிறகு ஷெல்லிங் ஃபிரிக்டே, ஹெகல், மார்க்ஸ் என அடுத்தடுத்து மாபெரும் தத்துவவாதிகள் ஜெர்மனியில் தோன்றியதால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஷோப்பன் ஹோபர், நீட்சே இருபதாம் நூற்றாண்டில் இருத்தலியச் சிந்தனையாளர்கள், புதிய மார்க்ஸியர்கள் எனக் கான்டியத் தத்துவ மரபு உருவாயிற்று. கான்ட் தனது தத்துவத்தை மூன்று பிரிவுகளில் அடக்குகிறார்.

1. புலன் சாரா நிகழ்வியல் (அழகியல்): இது காலம், வெளி என்ற மனச் சட்டகங்கள் சார்ந்தது.

2. புலன் சாரா பகுத்தறிவு: இது ஒன்று, பல, முழுமை என்ற அளவுகள் சார்ந்தும் இருப்பு, மறுப்பு, எல்லை என்ற பண்புகள் சார்ந்தும் அமைவது. இது தற்செயலானது; காரணத் தொடர்பு கொண்டது; பரஸ்பரத் தாக்கம் என்ற உறவுப் பண்பும் உடையது. மேலும் வாய்ப்பும் சாத்தியமும், இருப்பும் இன்மையும், கட்டாயமும் தற்செயலும் என்ற முறைமையும் உடையது.

 3. புலன் சாரா இயங்கியல்: இது உளவியல் என்ற மனித மனம், பிரபஞ்சவியல், இறையியல் என்பனவாய் அமைகிறது.

இவை குறித்து இந்நூல் விரிவாக விளக்குகிறது. இதில் உள்ள மூன்றாவது கருத்தான புலன்சாரா இயங்கியல் பற்றி ஹெகல் தனது கருத்தை வளர்த்தெடுக்கிறார். ஹெகலியத் தத்துவத்தின் முதலும் முடிவும் கருத்தே. தன்னிலேயே உள்ள பொருள் உட்பட எல்லாவற்றிற்கும் உயிர் தருவது, ஒழுங்குபடுத்துவது மனித மனமே என்பது ஹெகலின் முழுக் கருத்துமுதல்வாதம். பூரணக் கருத்து முதலில் தன்னைச் சடப் பொருளாகவும் (பௌதீக, ரசாயன உலகம்) பின்னர் உயிர் இனங்களாகவும் (தாவர, விலங்கு உலகம்) அதற்கும் பின்னர் மனித வாழ்வாகவும் (மனம், வரலாறு) புறவயப்படுத்திக் கொள்கிறது என்கிறார்.

ஹெகல் பிரத்தியட்ச அறிவு என்பது பற்றியும் பேசுகிறார். காலகதியில் நடந்த சம்பவங்களெல்லாம் சிந்தனையால் ஊடுறுவப்பட்டு வரலாறாகக் கட்டமைக் கப்படுகின்றன. உட்தொடர்ச்சி, உள்ளுறவு, உள் ஒழுங்கு கண்டறியப்படுகிறது. வேறுவிதமாகக் கூறுவது எனில் அந்த ஒழுங்கைத் தருவது மனித சிந்தனை, அறிவு என்கிறார். தத்துவ அறிஞர்கள் தொடங்கிய இருப்பு (Being) என்ற கருத்தாக்கத்திலிருந்தே ஹெகலின் தருக்கவியலும் தொடங்குகிறது. இருப்பின் எல்லை, இன்மை என்று நகரும் சிந்தனாச் செயல்பாடு இதற்குள் வெறும் இருப்பாக அன்றி இல்லாமல் இயக்கமாகி விடுகிறது. ஹெகல் கூறும் இயக்கம் என்பதை ‘சிந்தனை’ என்று சுட்டலாம் என்கிறது இந்த இயல். எதார்த்தம் அறிவுப்பூர்வமானது; அறிவு எதார்த்தப்பூர்வமானது (Real is Rational; Rational is Real) என்பது இவரது முக்கியமான சொல்லாடலாகும்.

பொருள்முதல்வாதம் என்ற கட்டுரை பண்டைய கிரேக்க காலத் தத்துவம், மத்திய காலக் கிறித்துவத் தத்துவம், புதிய காலச் சிந்தனைப் பொருள்முதல் வாதம், பிரெஞ்சுப் பொருள்முதல்வாதம் பற்றியனவாய் அமைகிறது. அனைத்திற்கும் மூலாதாரம் தண்ணீர் எனத் தேல்ஸ் என்ற கிரேக்கத்தின் முதல் தத்துவவாதி குறிப்பிடுகிறார். இதனையே அரிஸ்டாட்டில் ஈரம் என்கிறார். அனக்ஸிமேன் என்பார் காற்றே முதல் பொருள் என்கிறார். ஹெராக்லிடஸ் நெருப்பே என்கிறார். அனைத்திற்கும் மூலமாய் ஒற்றைப் பொருள் ஒன்றைக் கண்டறியும் முயற்சியை ஒருமைவாதம் (Monism) என்ற தத்துவமாகக் காண்கிறார்கள். பிரபஞ்ச நிகழ்வுகள் அனைத்திற்கும் பொது அடிப்படை உள்ளது என்ற கருத்தை வலியுறுத்தும் ஹெராக்லிடஸ் இப்பொது அடிப்படையை லோகஸ் (Logos) என்கிறார். பிறப்பு - சாவு, ஈரம் - வெப்பம், வெற்றி - தோல்வி ஆகிய ஏராளமான எதிர்வுகளைக் கொண்டது மனித வாழ்வு என்று கூறும் ஹெராக்லிடஸ் ‘மாற்றமும் போராட்டமுமே நிரந்தரம்’ என்ற தத்துவத்தை வெளிப்படுத்திய வழி இயக்கவியலின் முதல் தத்துவவாதியாகிறார்.

பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் வானியல் பொருட்களின் இயக்கத்தையும் விளக்கும் டெமாக்ரிட்டஸ் அனைத்துப் பொருட்களுக்கும் அடிப்படை அணுக்கள் என்கிறார். குளிர்ச்சி உயிரற்ற பொருட்களின் பண்பு என்றும், வெப்பம் உயிருள்ள பொருட்களின் பண்பு என்றும் பிரித்துக்காட்டி, வெப்பம் உயிரின் அடையாளம் என்கிறார். கடவுள் இல்லை என்று கூறும் அவர் உளவியல் காரணங்களால் மனிதனை ஒத்த உருவங்களை கனவில் காணும் மனிதன் மனஉளைச்சல், அவதிகள், பயங்கள் ஆகியவற்றையே கடவுளாய்க் கற்பித்துக் கொள்கின்றனர் என்கிறார். இயற்கையை முன்னிறுத்தும் சோஃபிஸ்டுகள் உரையாடல்களிலிருந்து மனிதனை மையமாக்கிய தத்துவங்களாய் இவர்கள் வளர்த்தெடுத்தார்கள். மனிதனே அனைத்திற்கும் அளவுகோல் எனப் புரோட்டகோரஸ் கூறினார். அதேபோல் இயற்கை சார்ந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கினிக்கர்கள் பொருள் முதல்வாதப் பண்பைக் கொண்டிருந்துள்ளனர். அவர்கள் கிரேக்க நாகரிகம் மற்றும் சமூகத்தால் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டார்கள். இவர்களது எதிரிகளால் உருவாக்கப்பட்ட ஆங்கிலச் சொல்தான் ‘cynics’ என்பது.

மத்திய காலக் கிறித்துவத்தில் இறைவன் இயற்கையின் எல்லாப் பொருட்களிலும் மனித உடலிலும் உள்ளான் என்ற கருத்து வளர்ந்து ஏதாவது ஒன்றின் இருப்பைப் பற்றிப் பேசும் தத்துவம் வளர்ந்தது.

புதியகாலச் சிந்தனையில் சாவு என்ற ஒன்றைத் தவிர பிற எல்லாவற்றிலும் மனிதன் இறைவனுக்கு இணையானவன் என்ற இத்தாலிய மனிதநேயவாதக் கருத்து வளர்ந்தது. பண்டைய கிரேக்க இன்பவியல் தத்துவமாகக் குறிப்பிடப்படும் எபிக்கூரியத் தத்துவம் இக்காலத்தில் இத்தாலியத் தத்துவவாதிகளால் மீள்பார்வைக்கு உள்ளாகியது. மனித உடலைத் துலக்கமாக வரையும் அழகு பற்றிய சிந்தனை வளர்ந்தது. இத்தாலியத் தேவாலயங்களில் தேவதைகள், இயேசு, அங்கநெளிவுத் தெறிப்பு உடல்கட்டுகளுடனான இருபால் விவசாயிகள் போன்றோரின் படங்கள் வரையப்பட்டன.

பிரெஞ்சுப் புரட்சியின் வருடமான 1789லிருந்து இறைவன், ஆன்மீகக் கருத்துக்கள், நம்பிக்கைகள் பற்றி பிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. சுதந்திரமான இத்தத்துவச் சிந்தனையானது மனித மையவாதத்தை வலியுறுத்திய கான்ட், இயங்கியலை உணர்த்திய ஹெகல் இவர்களைத் தொடர்ந்த கார்ல் மார்க்ஸின் தத்துவங்கள் சில பிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

மீஷல் மொன்த்தேன் (1533 - 1592) என்ற இயற்கை விஞ்ஞானி மனிதன் இயற்கையின் பரிணா மத்தில் விழைந்தவன் என்று வலியுறுத்தியுள்ளார். திக்கார்த் (1596 - 1650) என்ற பகுத்தறிவுவாதி ஐரோப்பாவின் அறிவுவாதச் சிந்தனையின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரது ‘சிந்திக்கிறேன், எனவே இருக்கிறேன்’, ‘எல்லாவற்றையும் சந்தேகத்திற்கு உள்ளாக்குங்கள்’ என்ற புகழ் மிக்கத் தொடர்களாலான சந்தேக முறையியல் ஆனது கடவுள் படைப்புக் கொள்கை, அது சார்ந்த நம்பிக்கைகளை அடியோடு அசைத்தது. இவரைத் தொடர்ந்து இக்கட்டுரையில் வானியல், பௌதீக உலகம், மனித உடல், மனித மனம் ஆகியவை குறித்த விளக்கங்கள் அளித்தவர்கள் சுட்டப்படுகிறார்கள். கோப்பர்நிக்கஸ் (1473 - 1543), கலிலியோ (1564 - 1642), கெப்ளர் (1571 - 1630) ஆகியோரது வானியல் சிந்தனைகள் பைபிள் கதைகளை மறுதலித்தன. நியூட்டனின் (1643 -1727) விதிகள் பௌதீக விஞ்ஞானத்தின் அடிப்படைகளை உருவாக்கின. பிரெஞ்சுக்காரரான பியூஃபோன் (1707 - 1788) என்பவர் 36 தொகுதிகளைக் கொண்ட இயற்கை வரலாறு என்ற ‘பரிணாமவியல்’ என்ற நூலை எழுதினார். பிரெஞ்சு பொருள்முதல்வாதிகளில் அரசியல் முகங்களாக மாண்டெஸ்கே (1689 - 1755), வால்டேர் (1694 - 1778), ரூஸோ (1712 - 1778) போன்றோர் விளங்கினார்கள்.

ஜீலியன் லமெத்திரி (1709 - 1751) பிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகளில் முதன்மையானவர். மருத்துவப் பட்டம் பெற்றுப் பணியாற்றுகையில் மனித உளவியல் அவனது உடலியல் நிகழ்வுகளால் நிர்ணயமாகிறது என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி 1745 இல் ‘ஆன்மாவின் இயற்கை வரலாறு’ என்ற நூலை வெளியிட்டார். இவரது பொருள்முதவாதக் கருத்துக்களுக்காக அரசால் தண்டிக்கப்பட இருந் தவர் ஹாலந்துக்குத் தப்பிச் சென்றார்; மனித எந்திரம் என்ற (1744) நூலை எழுதி வெளியிட்டார். ‘தத்துவம் என்றால் பொருள்முதல்வாதம்தான்’ என்று அறிவித்தார். தொடர்ந்து தலைமறைவாய் வாழ்ந்து கொண்டே மனித தாவரம், எபிக்கியூரின் தத்துவம், எந்திரங்களை விட விலங்குகள் கூடுதலானவை போன்ற நூல்களை வெளியிட்ட இவர் பெர்லினில் பிரெஞ்சுத் தூதர் வழங்கிய விருந்தொன்றில் உணவருந்திய பின் நோய்வாய்ப்பட்டு 42 ஆவது வயதில் இறந்துள்ளார். தேனித்தித்ரோ (1913 - 1984) என்பவர் தத்துவச் சிந்தனைகள், குருடர்களைப் பற்றிய கடிதங்கள் போன்ற நூல்களை எழுதி நாத்திகராய் வளர்ந்தவர். பிரெஞ்சு அரசால் 3 மாதச் சிறைத் தண்டனைக்கு உள்ளானார். தொடர்ந்து 30 ஆண்டுகள் பிரெஞ்சுப் புரட்சியின் முன் அறிவிப்பாய் விளங்கிய ‘கலைக்களஞ்சியம்’ நூல் தொகுப்புகளின் பதிப்புப் பணியில் முழுவதும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கலைக்களஞ்சிய அறிஞர் குழுவினராகக் கிளார்க் அத்திரியான் ஹெல்வேத்சி, பால் ஆன்றி ஹோல்பார்க் போன்றோர் விளங்கினர். கிறித்துவ மதச் சடங்கு நம்பிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துப் பல நூல்களை எழுதி முழு நாத்திகன் என்று அறிவித்துக் கொண்ட ஹோல்பார்க் தன்னைக் ‘கடவுளின் தனிப்பட்ட எதிரி’ என்றுள்ளார். இவரது இயற்கையமைப்பு என்னும் நூல் இக்காலத்தில் மிக முக்கியமான ஒன்றாக வாசிக்கப்பட்டது.

எல்லாவற்றிற்கும் அடிப்படையான இயற்கை கொண்டுள்ள இயக்கத்தை மாற்றம் என்ற பண்புடன் இயைபுப்படுத்தி இயற்கை, மனிதன் இடையிலான அனைத்து நிகழ்வுகளுக்கும் காரண காரியம் கற்பித்தனர். உயிரினங்களின் தோற்றம் வளர்ச்சியில் சூழல்களின் பண்பையும் உயிர்களின் தகவமைப்புப் பண்பையும் விளக்கினர். இயற்கையை எதிர் கொண்டு தகவமைத்து வாழும் மனிதனின் சிந்திக்கும் திறன் சார்ந்த உடல் அமைப்பு, அவனது மொழி, குறிகள் பற்றிய அறிவு, கருவிகள் செய்து தொழில் செய்யும் முறைமை, மூளையின் செயல்பாடுகள் குறித்த அறிதல் அதாவது உணர்தல், சிந்தித்தல், செயல்படுத்தல் என்று மனிதனுக்கான ஆற்றல்கள் பற்றிக் காரண காரியத்துடன் கருத்துரைத்த லெமெத்திரி, ஹோல்பார்க், தித்ரோ போன்றோரின் சிந்தனை வெளிப்பாடுகள் பிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படைகளாகின்றன.     

புலனுணர்வுத் தத்துவம் என்ற கட்டுரை பிரான்ஸிஸ் பேக்கன் (1561 - 1626), தாமஸ் ஹோப்ஸ் (1588 - 1679), பீயர் கஸ்சந்தி (1592 - 1965), ஜான்லாக் (1632 - 1704) ஆகியோரது சிந்தனைகளைப் பதிவு செய்கிறது. எது அழகு என்ற கேள்விக்கு உடல் சார்ந்த, புலன் உணர்வுகள் சார்ந்த, இயற்கை சார்ந்த பதில்களை இவர்கள் வழங்கினார்கள். அறிவின் மூலம் இயற்கையின் இரகசியங்களை அறிந்து அதனை மனிதத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பேக்கன் மனிதனின் சமய நம்பிக்கைகள், கொள்கைகள், மூடநம்பிக்கைகள், தனிமனித மனநிலைகள், உணர்ச்சி நிலைகள், மொழியின் தனித்தன்மை முதலிய பல்வேறு அம்சங்கள் மனிதனின் இயல்பான புலன் உணர்வு நடவடிக்கையின் மீது செல்வாக்கு செலுத்தி அவ்வகை அறிவை குழப்பிவிடுகின்றன என்கிறார். அதீதப்பொதுமைகளில் மங்காமல் தனித்தனி, சின்னஞ்சிறு தகவல்களைச் சேகரித்துத் தொகுத்து வகைப்படுத்தலில் அக்கறை காட்ட வேண்டும்; அங்கிருந்தே அறிவு துவங்குகிறது என்கிறார்.

புலனுணர்வுகளின்றிக் கருத்துக்களோ ஞாபகச் சக்தியோ தன்னுணர்வோ தோன்றிவிட முடியாது என்று கூறும் ஹோப்ஸ் விஞ்ஞான அறிவின் பொதுமைப் பண்பை அறிவின் பண்பு என்றார். புலனுணர்வுகளுக்குத் தட்டுப்படாதது மூளையில் தோன்றாது என கஸ்சந்தி வலியுறுத்தினார். மனிதனின் எல்லா அறிவுமே சார்புத் தன்மை கொண்டது. அது அவன் வாழும் சமூகச் சூழல், காலத்தின் அறிவு வளர்ச்சி ஆகியவற்றைச் சார்ந்த நிலையில் இயற்கைப் பற்றிய தனது குறைபாடுடைய அறிவின் காரணமாக எதைத் தன் கரங்களால் செய்கிறானோ அதை அவன் அதிகமாக அறிகிறான் என்கிறார்.

புலனுணர்வுகளின் முதன்மைத் தன்மையை வலியுறுத்தும் ஜான்லாக் பொதுமைப்படுத்தலையும் சூக்குமப்படுத்தலையும் அங்கீகரிக்கிறார். ஒரு பொருளின் நீளம், அகலம், எடை, வடிவம், அடர்த்தி போன்ற பௌதீகப் பண்புகளை முதனிலைப் பண்புகளாகவும் அவற்றின் பொருளின் சுவை, நிறம், ஒலி, மனம் போன்றவற்றை இரண்டாம் நிலைப்பண்புகளாகவும் பகுக்கிறார். தொழில்யுகத்தில் கடவுள் கொள்கைகளிலிருந்து புலன்களுக்கு உட்படும் உலகம் நோக்கி மனித சிந்தனையைத் திசை திருப்பியது இவர்களது புலனுணர்வுத் தத்துவமாகும்.

அறிவுவாதம் என்ற தலைப்பின் கீழ் திக்கார்த் (1596 - 1650), ஸ்பினோசா (1632 - 1677) என்பார்களது சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிய கால ஐரோப்பிய அறிவுவாதத் தத்துவத்தின் முதல் ஆசிரியராகக் கொள்ளப்படும் திக்கார்த், எழுத்தியல் கணிதத்திற்கும் (Algebra) வரைவியல் கணிதத்திற்கும் (Geometry) இடையிலான உறவுகளை எடுத்துக்காட்டிய இவர் அனலிட்டிகள் ஜியோமிதி (Analitical Geometry) எனும் கணிதவியல் பிரிவை உருவாக்கியவர். கணிதக் குறியீட்டு வரைபடமான X அச்சு, Y அச்சு என்ற எதிரெதிர் கோடுகளாலான வரைதள அமைப்பியல் முறையை அறிமுகப்படுத்தினார். இன்றுவரை கார்த்தீசிய வரைதளம் என இவரது பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. கணித அறிவில் காணப்படும் துல்லியமும் தெளிவும் தத்துவ அறிவிலும் இருக்க வேண்டும் என வலியுறுத்திய இவர் இரண்டு புள்ளிகளுக்கிடையேயான குறைந்தபட்ச தூரம் என்பது ஒரு நேர்க்கோடு என்ற கணித உண்மையை அறிவித்தார். இவரது இம்முயற்சி முறையியல் ஐயப்பாடு (methodogical doubt)) என்ற பெயரால் வழங்கப்படுகிறது. சிந்தனையின் மூலமே தெளிவு ஈட்டப்படுகிறது என்ற நிலையை எட்டியதன் காரணமாகவே இவர் ‘நான் சிந்திக்கிறேன்; எனவே இருக்கிறேன்’ என்று அறிவித்தார்.

தருக்கவியல், அறிவுப் பூர்வமான சிந்தனை சார்ந்து தத்துவத்தை வளர்த்தெடுத்து அறவியல் (Ethics) என்னும் நூல் எழுதிய ஸ்பினோசா உள்ளுணர்வு பற்றி விவாதிக்கிறார். உள்ளுணர்வின் மூலம் நிறை கருத்துக்களை எட்டும் மனிதன் உலகின் சாராம்சம் பற்றி அறிய முடிகிறது என்கிறார்.

பயன்வழிக் கொள்கை (Pragmatics) என்னும் தலைப்பின் கீழ் சி.எஸ். பீர்ஸ் (1839 - 1914), வில்லியம் ஜேம்ஸ் (1842 -1910), ஜான் டூவி (1859 - 1952) ஆகியோரது சிந்தனைகளை முன் வைக்கிறது. உயிரியல் அறிஞரான டார்வின் எழுதிய ‘உயிர்களின் வாழ்க்கைப் போராட்டம், இயற்கைத் தேர்வு ஆகிய நூல் கருத்தாக்கங்களால் தாக்கம் பெற்ற பீர்ஸ் சூழலுக்கு ஏற்பத் தகவமைந்து கொள்ளும் உடலமைப்பும் மனஅமைப்பும் கொண்டவன் மனிதன் என்கிறார். இவர் புறவுலகம், உண்மை என்ற நம்பிக்கை சார்ந்து தன் தத்துவத்தை வெளிப்படுத்தினார். இந்த உண்மை பின்னாளில் பொருண்மை என்ற கருத்தாக்கமாக வளர்த்தெடுக்கப்பட்டது. உடலியல் - உளவியல் இயல்பை இயைபுபடுத்திச் சமூகத்தை அறியும் முறையை பிரக்ஞை (Consciousness) என்கிறார் ஜேம்ஸ். அனுபவம், அறிவு என்பதை அகம் - புறம் எனப் பிரிக்காமல் அவற்றை மனிதர்களின் பௌதீக, கலாசார மற்றும் சமூகச் சூழல்களுடன் செயல்பாட்டு உறவு கொள்ளுதல்களுக்கான பயன்பாட்டுக் கொள்கையை வடிவமைக்கிறார் ஜான் டூவி. பிரச்சினை என்பது பற்றி ஐந்து கட்டங்களில் விவாதிக்கும் இவர் அதை உணர்ந்து, வரையறுத்து, தீர்வுக்கான வாய்ப்பைக் கண்டறிந்து, உகந்ததைத் தேர்வு செய்து, சரியான தீர்வை அடைதலை வலியுறுத்துகிறார்.  

நேர்க்காட்சிவாதம் என்னும் தலைப்பின் கீழ் ஆகுஸ்ட் கோம்ட் (Auguste Comte 1798 - 1857), வியட்நாம் பல்கலைக்கழக தத்துவ இருக்கையில் பணிபுரிந்த மோரித்ஸ் ஷ்லீக், ருடால்ஃப் கர்னாப் (1891 -1970), பிரிட்டிஸ் தத்துவவாதி பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் (1772 -1970)ஆகியோரின் சிந்தனைகளை விளக்குகிறது. நேர்க்காட்சிவாதம் 19 ஆம் நூற்றாண் டில் ஆகுஸ்ட் கோம்ட் என்ற பிரெஞ்சு ஆசிரியரால் நிறுவப்பட்ட தத்துவமாகும். இது ஆங்கிலத்தில் Positivism என்றழைக்கப்படுகிறது. இதனை நேர்மறை வாதம், இம்மையியம் என்றும் கூறலாம் என்கிறார் நூலாசிரியர். 1842 இல் கோம்ட் எழுதிய நேர்க்காட்சித் தத்துவம் என்ற நூலில் புலப்படும் காட்சித் தளத்தோடு நெருக்கமாக நின்று வேலை செய்ய வேண்டியது உண்மையைக் குறித்துத் தேடும் தத்துவவாதிகளின் பணி என்றார். தகவல்களை விட்டு விலகாமல் நின்று ஆய்வு செய்வதே உண்மைக்கு உத்தரவாதம் என்பது அவர் முடிவாகும்.

புலப்பாட்டுத் தகவல்களிலிருந்து பௌதீகம், ரசாயனம், கணிதம், வானியல், உயிரியல், உளவியல் ஆகிய துறைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற கோம்ட் மேலும் ஒரு புதிய துறையாக சமூகப் பௌதீகவியல் (Social Physics) என்பதை வரையறுத்தார். இன்றைய சமூகவியல் பிரிவு அதுவேயாகும். ஆகவே இவர் சமூகவியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார். மனிதசமூகம் நேர்க்காட்சி அடிப்படையிலான அறிவியல் யுகம் நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாகக் கூறினார். இதை அடையும் முன் மனித சமூகம் இறையியல் யுகம், அனுபூதவியல் யுகம் (Meta Physics) என்ற இரண்டு யுகங்களைக் கடந்து வந்திருப்பதாக விளக்குகிறார். இத்தத்துவத்தை வியன்னா வட்ட அறிஞர்கள் தருக்கவியல் நேர்க்காட்சி வாதமாக வளர்த்தெடுத்தனர். அனுபவம் என்பது இன்னொருவருடன் பரிமாறிக் கொள்ளக் கூடியதாக இருப்பது என்றார் ஷ்லீக். தொடர்ந்து வந்த கர்னாஃப் பொருட்களின் பண்புகளை விஞ்ஞானங்கள் எண்களாகவும் பிற அளவீடுகளாகவும் வரையறுத்துத் தரும் குணத்தை வெளிப்படுத்துகிறார். மதம், கலை, இலக்கியம், அனுபூதவியல் ஆகியவற்றை விஞ்ஞானங்கள் என்று ஏற்காவிடினும் அவற்றை மனித உணர்ச்சிகளுக்கான வடிகால் என்றார். பொருண்மை பற்றிய ஆய்விலிருந்து தற்காலமாக விலகி மொழி வாக்கியங்களின் தருக்கவியல் கட்டமைப்பைப் பயில்வது முதன்மையானது என்றார். அரூபக் கருத்துக்களுக்கு இருப்பியல் (ontological) அந்தஸ்து வழங்காமல் கருதுகோள்கள் போல, தற்காலிகமானது போலப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஸ்ஸல் புறவுலகின் உண்மைத்தன்மை ஏற்கும் புது எதார்த்தவாதம் (Neo Realism) என்ற தத்துவத்தை வரையறுத்தார். எல்லா பருப்பொருட்களையும் ஒன்றடக்கிய பொருள் என்ற பொதுமைப்படுத்தும் ஒருமைவாதத்தை அவர் ஏற்கவில்லை. ஒவ்வொரு பொருளும் தனக்குரிய இடத்தில் இருந்து கொண்டு அடுத்த இடத்தில் உள்ள பொருளுடன் வெளி உறவுகள் கொள்ளும் பன்மீய எதார்த்தவாதம் பற்றி வரையறுக்கிறார். ஒரு கணித அறிஞராக இருந்த வழி ஏ.என்.ஒயிட்ஹெட்டுடன் இணைந்து 1910 - 1913 ஆண்டுகளில் ‘கணிதவியலில் அடிப்படைக் கோட்பாடுகள்’ என்ற விரிவான நூலை வெளியிட்டார். உலகின் கடைசிக் கட்டமைப்புக் கூறுகளை மொழியில் கண்டறிய முடியும் என்று எழுதினார். தொடர்ந்து சாதாரண மொழி - லட்சிய மொழி என்ற விவாதத்திலும் ஈடுபட்டார்.

மார்க்ஸியம் என்ற தலைப்பின் கீழ் கார்ல் மார்க்ஸ் வளர்த்தெடுத்த பொருள்முதல்வாதத் தத்துவங்கள் விளக்கப் பெறுகின்றன. இப்பகுதியில் தொடக்கத்தில் மார்க்ஸியத்திற்கு முந்தைய பொருள்முதல்வாதக் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. சமுதாயத் திலும் வரலாற்றிலும் செயல்படும் பொருளாக மார்க்ஸ் மனிதர்களின் உற்பத்தி வாழ்க்கை, சூழல்களைப் புனரமைக்கும் செயல்பாடுகள், வர்க்கப் போராட்டம் ஆகியவற்றை மார்க்ஸிய இயங்கியல் விளக்குகிறது. இவ்விளக்கம் முழுமை வாதம், சர்வாம்ச உறவுகள், மாற்றம், முரண்பாடு, எதிர்வுகளின் ஒன்றுபடுதலும் போராட்டமும், மறுத்தல், ஒன்றுபட்டவை எனப்படுபவற்றிற்கு இடையில் உள்ள உள்ளெதிர்வுகளை இனம்காணுதலும் அவற்றின் போராட்டத்தைக் காணுதலும், எதிர்வுகள் பரஸ்பரம் ஒன்றை ஒன்று ஊடுறுவுதல், உறவு கொள்ளுதல் என்பவற்றால் அமைகிறது. இக்கட்டுரையில் இக்கூறுகள் தனித்தனியாக விளக்கம் பெறுகின்றன. சமூகம், இயற்கை, வரலாறு ஆகியவற்றை இணைக்கும் கண்ணியாக உழைப்பு அமைந்துள்ளது என்று கூறும் மார்க்ஸியம் ஒரு முழுமைவாதத் தத்துவமாகிறது.

உழைப்பு என்பது புனரமைத்தல் ஆகும். புனரமைத்தல் என்பது மாற்றம் ஆகும். சமூகச் செயல்பாட்டின் வடிவமே வர்க்கப் போராட்டமாகிறது. உழைப்பும் சமூகச் செயல்பாடும் மனித சாராம்சமாகிறது. உழைப்பின் விழைவாக உற்பத்தியாகும் பொருட்களின் மீதும் அவன் உழைப்பின் மீதும் முதலாளி வர்க்கத்தால் உரிமையில்லாமல் ஆக்கப்படுவதை அந்நியமாதல் கோட்பாடாய் வரையறுக்கிறது மார்க்ஸியம். மொத்தச் சுரண்டல் அமைப்பே அந்நியமாதலுக்கு அடிப்படை என்கிறது. சமூக மதிப்புகள், அறிவியல், அரசியல், சட்டவியல், அழகியல், கலை, இலக்கியம், தத்துவம், என்பதான கருத்தியல் உறவுகளை மார்க்ஸியம் மேற்கட்டுமானம் என்கிறது. மனித சமூக உற்பத்தி வாழ்வை அடித்தளம் என்கிறது. பரஸ்பரம் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த அடித்தளம், மேற்கட்டுமானம் ஆகியவற்றின் இயங்கியலே மொத்த மனித வாழ்வு என்கிறது. ஐரோப்பிய சமூகத்தின் அனுபவங்களைக் கொண்டு புராதன இனக்குழு சமூகம், அடிமை உற்பத்தி முறை, நிலவுடைமை உற்பத்தி முறை, முதலாளித்துவ உற்பத்தி முறை என்ற பிரிவுகளில் வரலாற்று உற்பத்தி முறைகள் கூறப்பெற்று மார்க்ஸியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் விளக்கப் பெறுகிறது.

ஆசிய உற்பத்தி முறையைப் பற்றி விளக்கும் போது அடிமைச் சமூகமுறை தோன்றவில்லை என்கிறது. அதேசமயம் இந்தியச் சாதியமைப்பில் உள்ளீடாகக் கிடக்கும் அடிமைக் கூறுகளையும் நிலவுடைமைக் கூறுகளையும் சுட்டி இந்தியச் சாதியமைப்பை ஆசிய உறபத்தி முறையின் அடித்தளம் என்கிறது. மார்க்ஸியம் தொடர்ந்து பண்பாடு குறித்த நிலைப்பாடுகளை அந்தோனியோ கிராம்ஸி போன்றோரால் வளர்த் தெடுக்கிறது. கிராம்ஸி கலை, இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை பொருட்பண்பு கொண்ட பண்பாட்டுச் சக்திகள் என்கிறார். ‘வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறு’ என்ற மார்க்ஸின் கருத்தைச் சமூகப் பண்பாட்டு வரலாற்றுக்கும் பொருத்தி ஆய்ந்திட கிராம்ஸி வலியுறுத்தினார். இவரைத் தொடர்ந்து அல்தூசர், ஹெபர்மாஸ் போன்றோர் மனிதநேய மார்க்ஸியம் பற்றி விளக்கினர். இவர்கள் இரண்டாம் உலகப் போருக்குச் சற்று முன்னதாக வெளியிடப்பட்ட ‘மார்க்ஸின் பொருளாதாரத் தத்துவ கையெழுத்துப் பிரதிகள்’ என்ற தொகுப்பு நூலை மையமாகக் கொண்டு அணி திரண்டனர்.   

நிகழ்வியமும் இருத்தலியமும் என்ற தலைப்பின் கீழ் சோரன் கிர்கே கார்ட் (1713 - 1855), எட்மண்ட் ஹ¨செர்ல் (1859 -1938), ஜான் பால் சார்த்தர் (1905 - 1982), ஹெய்டெக்கர் ஆகியோரின் கோட்பாடுகள் விளக்கப் பெறுகின்றன. கிர்கே கார்ட் தனது கால எதார்த்தத்தை இலட்சிய வடிவில் உருமாற்றித் தத்துவமாக்கினார். இருத்தல் (Exsistence) என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்தும் இவர் மனிதனின் பயம், விரக்தி, குற்றவுணர்வு, சுதந்திரம், பொறுப்புணர்ச்சி, எதிர்பார்ப்புகள் முதலிய அகவயக் கூறுகள்தான் அவனது தன்மையையும் இருத்தலையும் கட்டமைக்கின்றன என்றார். கிறித்தவத்தை எல்லோருக்கும் பொருந்தும் சாதாரண சமயமாக்கி அதை அரசுக்குத் தேவையான ஒழுங்கான ஒரே விதமான பிரஜைகளை உற்பத்தி செய்து தரும் தொழிற்சாலையாகத் தேவாலயம் ஆகிவிட்டது என்று வருத்தப்பட்டார். தனிமனித நம்பிக்கை அறிவையும் அறவியலையும் கடந்து ஆகப் பொதுவானதாக ஆக்கப்படுவதை விமர்சித்தார்.

புலனுணர்ச்சிகள் தொடர்புடையதே அழகியல் உணர்வு என்ற கிறித்தவத் துறவு நோக்கிலான மதிப்பீட்டை கிர்கே கார்ட் பின்பற்றுகிறார். இருத்தலியத்தின் பழமைச் சரடு இவரது தத்துவங்களில் வெளிப்படுகிறது. திக்கார்த்தின் சிந்தனையைத் தொடரும் ஹ¨செர்ல் எதார்த்தவாதம் என்ற தத்துவக் கோட்பாட்டிற்கும் இயல்பான பொது மக்கள் மனோநிலைக்கும் இடையிலான நெருக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ‘நான் உணர்கிறேன் என்பதி லிருந்து தத்துவத்தைத் தொடங்க வேண்டும்’ என்கிறார். அறிபவன் / அறியப்படும் பொருள் எனும் இருமைவாதமும் அதன் அடிப்படையில் பொருளை அறிபவன் தற்சார்பின்றிப் புறவயமாக அறிய வேண்டும் என்ற முறையியலும் நிலை கொண்டன என்கிறார். மொத்தத்தில் இருமைவாதத்தை மறுக்கிறார்.

மனிதனும் உலகமும் ஒன்றுபட்ட ஓர் அடிப்படையான தளம் இருப்பதாகவும் அதை நிகழ்வு (Phenomenon) என்கிறார். நான் இருக்கிறேன் என்பது நிகழ்வியல் தத்துவத்தின் மையம். இவர் தனிமனிதனின் இருப்பு என்பதிலிருந்துதான் தத்துவத்தைத் தொடங்க வேண்டும் என்கிறார். அனுபவங்கள் எப்படி ஏற்படுகின்றன என்ற பொது விதிகளைக் கண்டறிய வேண்டும் என்கிறார். 2500 வருடங்களுக்கு முன்னால் பிளேட்டோ பயன்படுத்திய எயிடோஸ் என்ற சொல்லை மீட்டுக் கொண்டு வருகிறார். இவர் நிகழ்வியம் என்பது உண்மையாகவே கடந்தநிலை கருத்துமுதல்வாதம் (Phenomenology is eo ipso so transcendental idiolism) என்கிறார். சார்த்தரும், மெர்லோ போன்றியும் வெளிப்படையாகவே மார்க்ஸியத்தை ஆதரித்துப் பேசுவார்கள். மார்க்ஸியத்தைப் பாராட்டி சார்த்தர் கீழ்க்கண்டவாறு கூறுவார். “எங்களைப் பொறுத்த மட்டில் மார்க்ஸியம் ஒரு தத்துவம் மட்டுமல்ல. எங்கள் கருத்துக்கள் விளைந்த தட்பவெப்பச் சூழல் அது; எங்கள் கருத்துக்கள் உண்டு வளர்ந்த நிலம் அது. ஹெகல் கூறியதுபோல, எங்கள் யுகத்தின் ஆன்மா அது. பூர்ஷ்வா சிந்தனைகள் செத்து ஒழிந்த பிறகு மார்க்சியம் மட்டுமே எமது கலாசாரம். அது மட்டுமே மக்களையும் அவர்களது உழைப்பையும் அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களையும் புரிந்துகொள்ள இடம் தருகிறது”.

ஹூசெர்லும், சார்த்தரும் கடந்தநிலைத்தன்மை (Transcendental ego) குறித்து நேரெதிர் விவாதங்களை நடத்திக் கொண்டனர். இருப்பும் இன்மையும் (Being and nothingness) என்பது சார்த்தர் 1943 இல் எழுதி வெளியிட்ட இருத்தலியத் தத்துவத்தின் முதல் நூல். இந்நூல் ‘இருப்பும் காலமும்’ என்ற ஹெய்டெக்கரின் நூல் மீதான விமர்சனமாக அமைகிறது. இருப்பு என்பது இன்மையில்தான் உள்ளது என்கிறார். இந்த இன்மை என்பதை பிரக்ஞை என்பதுடனும் சுதந்திரம் என்பதுடனும் இயைபுபடுத்துகிறார். பிரக்ஞை = இன்பம் = மறுப்பு = சுதந்திரம் = மனிதன் என்ற சமன்பாட்டைச் சார்த்தரின் தத்துவத்தில் காண முடிகிறது. சார்த்தர் வரையறுக்கும் இன்மைத் தத்துவம் ஜெர்மனிக்குச் சொந்தமானது; சுதந்திரம் பிரான்சுக்குச் சொந்தமானது. 

அமைப்பியலும் பின்னமைப்பியலும் என்ற தலைப்பு பெர்டினண்ட் - டி-சசூர், ரோமன் யாக்கப்ஸன், விளாதிமிர் ஃபிராப், லெவி ஸ்ட்ராஸ், மிஷைல் ஃபூக்கோ, ஜான் லக்கான், ரோலண்ட் பார்த் ஆகிய அறிஞர்களின் கோட்பாடுகளை விளக்குவதாக அமைந்துள்ளது. இச்சிந்தனை தோன்றிய இதே காலத்தில் கனவு, ஆழ்மனம், பாலுறவுச் சிக்கல்கள் ஆகிய மனித ஆழ்மனத்தின் செயல்பாடுகளில் ஓர் ஒழுங்கைக் கண்டறியும் ஃபிராய்டியம் தோன்றியது. 19 ஆம் நூற்றாண்டின் அறிவுவாதம் மீட்டுக் கொண்டு வரப்படுகிறது. புராதன மனிதனின் தொன்மக் கதைகள், சடங்குகள், பாலுறவு முறைகள் ஆகிய மானுடவியல் துறை அலகுகளுக்கு எந்தவித அறிவியல் தர்க்கமும் கிடையாது என்பதை அமைப்பியல் விமர்சிக்கிறது. லெவி ஸ்ட்ராஸின் அமைப்பியல் முழுமை, தன்னிறைவு என்று ஒரு கோட்பாட்டை மானுடவியல் துறை அலகுகள் சார்ந்து முன் வைக்கிறது. இவரது கோட்பாடுகளைத் ‘தொன்மவியல் விஞ்ஞானத்திற்கு ஓர் அறிமுகம் என்ற எண்ணூறுக்கும் மேற்பட்ட தென் அமெரிக்க தொன்மக் கதைகளை பகுப்பாய்வு செய்யும் நூல் மூலம் விளக்குகிறார். இவர் படிநிலை அடுக்கு சார்ந்த வரலாற்று அணுகுமுறையை மறுதலித்து மொழியியலுக்கு நெருக்கமான கிடைத்தள ஆய்வு அணுகுமுறையைப் (Synchronism) பயன்படுத்துகிறார். இதற்கு சசூரின் மொழியியல் கோட்பாட்டுக் கலைச் சொற்களான குறி, குறிப்பான், குறிபடு பொருள் ஆகியவற்றை முன்னிறுத்திய ஆய்வு துணை நிற்கிறது. கூடுதலாக ரோமன் யாக்கப்ஸன் வரையறுத்த இருமை எதிர்வுகள் கருத்தாக்கமும் துணை நிற்கிறது.

பிராய்டின் நனவிலி மனஆய்வை லக்கான் சமூகப் பண்பாட்டுப் பொருண்மை சார்த்தி ஆய்வு செய்துள்ளமையும் இக்காலத்தில் குறிப்பிடத் தகுந்ததாகும். மையம்/ ஓரம் (Centre/priphery) என்ற கருத்தாக்கங்களைப் பயன்படுத்தும் ஃபூக்கோ, அறிவு என்பது அதிகாரத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டது. அதாவது மொழி, இலக்கியம், சமூக ஒழுக்கங்கள், சமூக மதிப்புகள் என்று பரந்துபட்ட கலாசார வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் நோக்குடன் அறிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்கிறார்.

பின்னை நவீனத்துவம் என்ற தலைப்பின் கீழ் லியத்தார்ட், பௌதலியார்ட், டெலூஸ் போன்றோரின் கோட்பாடுகள் சுட்டப்படுகின்றன. இத்தத்துவம் ஒட்டுமொத்தப்படுத்துபவை (Totalising) என்பதை மேலாதிக்கப் பண்பு (Hegemonising) கொண்டவை என்று மதிப்பிடுகிறது. தெரிதா தனிமனித மையத்தை மறுதலிக்கும் இத்தத்துவத்தை வளர்த்தெடுத்தவர் ஆகிறார்.

பொருள்கோளியல் என்ற தலைப்பின் கீழ் தமிழ் இலக்கிய / இலக்கணப் பொருள்கோளியல் முறைக்கும் ஐரோப்பிய முறைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளக்குகிறது. குறிப்பிட்ட ஒரு சிந்தனை பற்றிய தத்துவக் கருத்தின் மீதான காலம்தோறும் நிகழ்த்தப்பட்ட வாசிப்பு முறையை ஐரோப்பியப் பொருள்கோளியல் என்று காடெமர் என்பாரின் கோட்பாட்டின் துணை கொண்டு விளக்குகிறது இக்கட்டுரை. வாசிப்பு என்பதை ஓர் உரையாடல் என்கிறார் காடெமர். பிரதியோடு வாசகன் தொடர்ந்து உரையாடிப் புதுப்புது அர்த்தங்களை உருவாக்குவதில் வாசகனின் சுதந்திரமும் படைப்பாற்றலும் தக்கவைக்கப் படுகின்றன என்று காடெமர் கூறியதை இக்கட்டுரை பதிவு செய்கிறது.

மதிப்புரை

இந்நூல் கட்டுரைகள் பேராசிரியர் ந.முத்துமோகன் கடந்த இருபது வருடங்களுக்கு முன்பான தனது கல்விப்பணி வாழ்க்கையின் போது தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளில் சிலவாகும். அடிப்படையில் மார்க்ஸிய அணுகுமுறையுடன் ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் இவர் ஐரோப்பியத் தத்துவங்கள் மட்டுமின்றி இந்திய / தமிழகத் தத்துவங்கள் குறித்தும் எழுதிய 120 கட்டுரைகள் இவரது பெயரில் மார்க்ஸியக் கட்டுரைகள் என்ற தலைப்பில் காவ்யா பதிப்பகத்தால் 2001இல் தொகுக்கப்பட்டு ஒரு பருநூலாய் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்டுரைகள் மட்டுமின்றி ஐரோப்பியத் தத்துவவாதிகள் குறித்து NCBH நிறுவனத்திற்காகப் பல குறு நூல்களையும் எழுதியுள்ளார். இத்தரவுகளில் இருந்து இந்நூலின் 11 கட்டுரைகள் ஐரோப்பிய தத்துவம் குறித்த பாங்கில் தொகுக்கப்பட்டுள்ளன. அதாவது இந்நூலாசிரியர் இந்நூலுக்கு என்று தனியாக மெனக்கெடவில்லை. என்றபோதிலும் எளிதில் புரியாத கடினமான ஆங்கில நடைகொண்ட நூல்களிலிருந்து ஐரோப்பியத் தத்துவங்கள் குறித்து பேரா.முத்துமோகன் செய்துள்ள கடினமான உழைப்பை இந்நூல் வெளிப்படுத்துகிறது. தமிழ் தவிர்த்த வேறு மொழியறியாத தத்துவக் கல்வி ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஐரோப்பியத் தத்துவங்களை அறிமுகம் செய்யும் கையேடாகிறது. இதில் இடம்பெற்றுள்ள பல அறிஞர்கள் அவர்தம் நூல்கள் புகழ்பெற்ற சொல்லாடல்கள் பற்றி படிக்கத் தூண்டுகிறது. ஐரோப்பியத் தத்துவவாதிகளின் கற்பித முறையை அறிமுகப்படுத்தும் வழி இந்திய / தமிழகத் தத்துவங்களையும் ஆங்காங்கே ஒப்பிட்டுச் செல்கிறது இந்நூல் கட்டுரைகள். அவ்வப்போது தனித்தனியான தலைப்புகளின் கீழ் எழுதப்பட்ட ஆய்வுரையாக இந்நூல் கட்டுரைகள் அமைந்துள்ளன. அதனால் ஒரு கட்டுரை எழுதும்போது பிறகட்டுரைச் செய்திகளும் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளன. அடிப்படையில் இந்நூல் முதலிரண்டு கட்டுரைகளில் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்ற இவ்விரு தத்துவச் சார்புக் கோட்பாடுகளை விரிவாக விளக்குகிறது. பின்வரும் கட்டுரைகளில் கருத்துமுதல்வாதத்தைப் பேசும் போது பொருள்முதல்வாதக் கருத்துக்களைக் கொண்டு ஒப்பிட்டும், பொருள் முதல்வாதக் கட்டுரைகளில் கருத்துமுதல்வாதக் கட்டுரைகளைக் கொண்டு ஒப்பிட்டும் விவாதிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் கட்டுரைகளின் ஆசிரியர் மார்க்ஸியவாதியானது கொண்டு அதற்கான தொனி தெளிவாக வெளிப் படுகிறது. குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டுத் தத்துவங் களான இருத்தலியம் தொடங்கிப் பின்னை நவீனத்துவம் வரையிலானவற்றில் கூட மார்க்ஸியத் தத்துவத்தை பொருத்திக் காட்டுவது அவதானிக்கத்தக்கதாகும். இந்த வகையில் இந்நூலில் கூறியது கூறல், சுருங்கச் சொல்லல், மாட்டெறிந்து கூறல், விளங்க வைத்தல் போன்ற நூல் உத்திப் பண்புகள் தொடர்ந்து தென்படுகின்றன.

பொதுவாக இந்திய/தமிழகத் தத்துவ நூல்கள் இலக்கியங்களையும் புராண இதிகாசங்களையும் வேதங்களையும் தரவுச்சார்பு கொண்டிருக்கும். இவற்றுள் பொருள்முதல்வாதப் பண்புடைய லோகாயதவாதம் போன்ற தத்துவங்களும் அடங்கும். அனைத்தும் மனித அகமன நோக்கிய பாய்ச்சலைக் கொண்டிருக்கும். ஆனால் காலத்தால் பிந்தையதாயினும் ஐரோப்பியத் தத்துவங்கள் இதற்கு நேர்மாறாக காலம்தோறும் மானுட சமூக வாழ்வில் ஏற்பட்டு வந்த மாற்றங்களின் ஊடாக விளைந்த சமூகச் செயல்பாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. அவை புற உலகம் நோக்கிய போக்குடையதாயும் தருக்கவியல் மற்றும் காரணகாரிய அறிவியல் பண்புடையதாயும் அமைந்துள்ளன. இந்த வகையில் ஐரோப்பியத் தத்துவ வரலாறை வலிந்து/ கட்டாயமாக வாசித்திட இந்நூல் தூண்டுகிறது. மேலதிகமாக இந்நூல் வாசிக்கப்பட்டு இந்தியத் தமிழகத் தத்துவ நூல்களுடன் ஓர் ஒப்பீடு செய்வதற்கும் தூண்டுகிறது. அது தேவையுமாகும்.   

ஐரோப்பியத் தத்துவங்கள்

ந.முத்துமோகன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ. 215/-

Pin It