கீற்றில் தேட...

என்னை
செதுக்கிய
பள்ளியை
நான்
ஒதுக்கிய
நாட்களே
அதிகம்.

கனவுகளோடு
வரவேற்ற
என் பள்ளியை
கண்ணீரோடு
சந்தித்த
நாட்களே
அதிகம்.

எனக்கான
சூரியன்
மாலை வரை
உதித்ததே இல்லை
என் அம்மாவின்
முகம் காணும்
வரையில்...

பள்ளியும்
ஒரு விதத்தில்
சிறை தான்
அதன் வாசத்தை
முதலில்
அனுபவிப்பவர்களுக்கு...

தவறு செய்தவர்கள்
திருந்தச் செல்வது
அந்தச் சிறை
தவறு செய்யாமலிருக்க
கற்றுத் தருவது
இந்தச் சிறை

தற்காலிக விடுதலை
தினமும் நிகழும்
இந்தச் சிறையில்
மகிழ்ச்சியை விட
மன வருத்தமே
மிஞ்சும்
நிரந்தர விடுதலையில்...

PRE KG,LKG,UKG
போன்ற
KG-க்களை
தூக்காமல்
முதல் வகுப்பிலிருந்து
பயணப்பட்ட
காலம் அது!

நாத்திகனான எனக்கு
பிள்ளையார்
சுழி போட்ட
கோயில் அது!

அழகிய தமிழை
அழகாக எழுதக்
கற்றுக் கொடுத்த
முதலாம் வகுப்பு
சரஸ்வதி டீச்சர்.

லால் பகதூரைப்
பற்றிப் பேசிய
மூன்றாம் வகுப்பின்
என் முதல்
பேச்சுப் போட்டி.

இறை வணக்கத்தில்
உறுதி மொழி
நிகழ்த்திய
பெருமிதம்

மதிய உணவை
மற்றவர்க்கு
கொடுத்து
சத்துணவை
சுவைத்த
சந்தோஷம்

நட்பை
அறிமுகம்
செய்த என்
முதல் நண்பன்
தேவேந்திரன்

நாட்களை
ஏக்கத்தோடு
எண்ணவைத்த
கடினமான
கணக்குப் பாடம்

ஐந்து வருடம்
என் மனதில்
என்றும்
நைந்து போகாத
அந்த ஐந்து
வருடம்

மழைக்குக் கூட
நான்
பள்ளி
ஒதுங்கியதில்லை

சிலரின்
கூற்று
இது

மழைக்கு
ஒதுங்குவதற்கு கூட
இன்று
எங்கள்
பள்ளியின்
நிலை இல்லை!

ஆங்கில வழிக்
கல்வியின்
அதி நவீன
கரையான்களால்
அரிக்கப்பட்டது
அன்னைத் தமிழ்
மட்டுமல்ல
எங்கள்
அழகிய
பள்ளியும் தான்..

அடையாளங்களை
இழந்து கொண்டிருக்கும்
என் பள்ளிக்கு
நினைவுகளை
அடையாளமாக்கும்
நெஞ்சில் பதிந்த
அந்த ஐந்து வருடம்.