நீ ஏன் அத்தனை இறுக்கத்துடன் பற்றிக் கொள்கிறாய்
நிறம் நிறமாய் உதிர்ந்து போகும் வாய்ப்புள்ள
ஒரு தொடர்பை
இரவைப் பூசிக் கொண்டே விடை தரும்
சொற்ப வெளிச்சத்தை
அறைச் சுவரில் இடையறாது
அசையும் புகைப்பட நிழலை
நடைபாதை ஈரத்தில் மிச்சமாகித் தேங்கிவிடும்
ஓர் எதிர்பாரா மழையின் அவசரத்தை
நிகழ்தல் என்பதின் ஆழத்தில்
மெல்ல இறங்க நேரும் அசௌகரியத்தை
கசந்து வெளியேறும் அர்த்தங்களின்
நீண்ட மொழிபெயர்ப்பை
அத்தனை இறுக்கத்துடன் சந்தர்ப்பங்களைப் பற்றிக் கொண்டு
விஷமேறும் பாசாங்குகளின் முகமூடிகளோடு
எந்த மேடையில் ஒளிந்து கொள்வாய்
--இளங்கோ (