கீற்றில் தேட...


ஒவ்வொருநாளும் பல முகங்களை
கையிலேந்தி அலைகிறேன்
யாருக்கும் தெரியாமல்
அவற்றை மறைத்து வைத்து
மீண்டும் அணிந்துகொள்கிறேன்.

ஒவ்வொருவருக்காய் ஒவ்வொரு
முகம் மாட்டி அலைகிறேன்.
எந்த முகம் என்முகம்
என்பது யாருக்கும் தெரியாமல்
சமமாக பாவித்து வருகிறேன்

ஒருவருக்கு தெரிந்த
முகம் மற்றவர்களுக்கு
தெரிய வாய்ப்பு கொடுக்காமல்
கையிலிருந்து மாட்டிக் கொள்கிறேன்
சில துளி வினாடிகளில்

நல்லவன் கெட்டவன்
வஞ்சகன் சாது
அப்பாவி வெகுளி
என ஒவ்வொருமுகங்களுக்கும்
பெயர் வைத்து தினமும்
அதற்கு உணவூட்டி
வளர்த்து வருகிறேன்

ஒரு நாள் அகக்கண்ணாடியில்
என் சொந்த முகம் பார்க்கையில்
அது வெளிறி பழுதடைந்து
அழுகி அகோரமாய்
என்னை பார்த்து சப்தமாய் சிரித்தபடியே
இறந்துகொண்டிருந்தது

ஒவ்வொருநாளும் பல முகங்களை
கையிலேந்தி அலைகிறேன்
யாருக்கும் தெரியாமல்
அவற்றை மறைத்து வைத்து
மீண்டும் அணிந்துகொள்கிறேன்.