கற்சிலை காட்டிப் பறிப்பவன் அல்லன்
கொற்றவன் அணியின் கொடூரனும் அல்லன்
ஆதியில் இருந்தே சாதியில் தாழ்வென
வேதியர் உரைத்தது பஞ்சமர் சூத்திரரே
பஞ்சமர் சூத்திரர் வாய்ப்புகள் தம்மை
வஞ்சகத் தாலே பறித்திடும் பார்ப்பரை
இருவீர் இணைந்து ஒற்றுமை யாகப்
பொருதினால் மட்டுமே வெற்றி கிட்டும்

(எதிர் எதிராக நின்று கொண்டு இருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களே!) உங்கள் எதிரில் நிற்பவர்கள் (கோயில்களில்) கற்சிலைகளைக் காட்டிக் காசு பறிக்கும் வைதிகப்  பார்ப்பனர்கள் அல்லர். அரசின் உயர் நிலைகளில் அமர்ந்து கொண்டு கொடுமைகளைப் புரியும் லெளகிகப் பார்ப்பனர்களும் அல்லர். ஆதியில் இருந்தே பார்ப்பனர்கள், பஞ்சமர்களையும் (தாழ்த்தப் பட்டவர்களையும்) சூத்திரர்களையும் (பிற்படுத்தப்பட்டவர்களையும்) தாழ்ந்த சாதியினராகவே நடத்தி வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் வாய்ப்புகளை வஞ்சகமாகப் பறித்துக் கொள்ளும் பார்ப்பனர்களை எதிர்த்து இரு வகுப்பு மக்களும் இணைந்து ஒற்றுமையாகப் போராடினால் தான் வெற்றி கிடைக்கும்.)

- இராமியா