கீற்றில் தேட...

என் இரகசிய முடிச்சுக்களிலிருந்து
அந்த ஒரு வார்த்தை மட்டும் தனியே
தன்னை அவிழ்த்து மெல்ல தன்னை சுதந்திரமிட்டது
பின் சுற்றெங்கும் விரவிய காற்றினூடே
தன் சுயம் மாற்றி பின்னதாய் ஒழுகும்
தன் தடயங்கள் மறைத்து
என்னுடனான ஓர் நிகழ்பாடொன்றை
பின் ஊருக்கு சொல்ல விளைந்தது
சில்லிட்டதோர் நடுநிசியின் வார்த்தைகளற்ற
வெற்று முனகல்களாய்
எனக்கு தெரியா ஒரு பாஷையின் வழியே
என்னை உரைத்துக் கொண்டிருந்தது
அந்த ஒற்றை வார்த்தை முழுதுமாய்
என்னை மாற்ற நேர்வதாயும்
தவறிப் போன என் பிழையொன்றை
அதன் விதி மாற்றுவதாயும்
ஏற இறங்க
இறங்க ஏற
அந்நிகழ்வை விமர்சித்துக் கொண்டிருந்தது
முழுதுமாய் என்னை மீட்டெடுத்த
வரை முறைகளற்ற தன்னுரையாடல் மீதான
தன்னிறைவுப் பெருமூச்சில் இரகசிய பெட்டகத்தில் நுழைந்து
பின்னரும் தன்னை சிறையிட்டுக் கொண்டது
இரவு முடிந்த தருணம்
மீண்டும் வெளுத்த என் அம்மணத்திற்காய்
அந்த வார்த்தையை துலாவ ஆரம்பித்தேன் நான்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ