கீற்றில் தேட...

பொட்டல் வெளி எங்கும்
கொம்பில் சுற்றப்பட்ட 
பிடி கயிறுடன் அலைந்து
திரிகின்றன காளைகள்
சிறு குழுக்களாய்
தொலைவே தெரியும்
பச்சையின் திசையில்
பயணிக்கின்றன சில மாடுகள்
யாரோ அதன் வாலில்
கட்டிய பனை ஓலையின்
சரசரப்பால் நிற்காமல்
பயந்து ஓடுகிறது ஒரு கிடாரி
மந்தையில் தாயைத்
தொலைத்து மருகித்
திரியிமொரு கன்று
வெயிலில் மேய்ந்த களைப்பில்
தொலைவே வெப்பலில் பாயும்
கானல் நதியைக் குடித்திட
முனைந்து வெடுக்கென
இழுத்த கயிறால் அத்திசையில்
திரும்பி நடக்கிறது ஒரு பசு