கீற்றில் தேட...

சேற்றுவளர் தாமரை பயந்த, ஒண்கேழ்,
நூற்றிதழ் அலரின் நிறைகண் டன்ன,
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து,
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,
வரலாறு படைக்கும் உழைப்பவர் தன்னில்
சரண்டல் போர்தொடு மறவர் மட்டுமே
விழுமிய பண்பையும் உயரிய வாழ்வையும்
செழுமை யாக்கிய உயர்ந்தோ ராவர்
உழைப்பவர் குடியில் பிறந்தோ ராயினும்
குழைவாய்ப் பணியும் கோழை மக்களும்
மடியில் வாளா விருப்போர் தானும்
சாலச் சிறந்த வீரர்க்கு இடையே
ஞாலத்தில் வீணாய் வாழ்பவர் தானே.
 
(சேற்றில் வளரும் தாமரையிலே தோன்றிய செந்தாமரை மலரின் நூற்றுக்கணக்கான இதழ்களும், வேற்றுமையற்ற குணமாய் உடையது போலவே தோன்றும். அது போல, வேற்றுமை இல்லாத உயர் குடியான வரலாறு படைக்கும் உழைப்பவர் குடியில் பிறந்தவர்களைப் பற்றி எண்ணும் போது, அவர்களுள் சுரண்டலுக்கு எதிராகப் போரிடும் வீரர்கள் மட்டுமே சிறந்த ஒழுக்கத்தையும் உயர்ந்த வாழ்க்கையையும் செழுமை மிக்கதாக ஆக்கிய உயர்மக்கள் ஆவர். உழைக்கும் மக்களின் குடியில் பிறந்து இருந்தாலும், (ஆசையினாலோ, அச்சத்தினாலோ) குழைந்து பணியும் கோழைகளும், சோம்பேறித்தனத்தினால் வெறுமனே இருப்பவர்களும் மிகச் சிறந்த வீரர்களுக்கு நடுவில் இந்த உலகத்தில் வீணாக வாழ்பவர்களே ஆவர்.)
 
- இராமியா