உனக்கும்
எனக்குமான இடைவெளியை
மௌனங்களால்
இட்டு நிரப்புகிறேன்.
பிறந்த குழந்தையின்
பிஞ்சுப் பாதங்களைப் போல
அதி அற்புதமானது
நம் நேசம்.
அலாதியானதும்கூட.
சிறு முத்தத்தில்
வேர்கொண்ட நம் காதல்
புரிதலற்று நீள்கிறது
இரயில் தண்டவாளத்தைப் போல.
உகுத்துப் பெருகுகிறது
கண்ணீரும்
சில கவிதைகளும்
புறக்கணிப்பின் வலியை
நீ உணராதபோது.
புது வருடத்தின்
முதல் முத்தத்தையும்
ஊழிக்காலத்தின்
கடைசி முத்தத்தையும்
உடலெங்கும் தீட்டிக்கொள்வோம்
ஓர் அழகிய ஓவியத்தைப் போல.
காதலற்ற முத்தங்களைச்
சுவைக்க நேரும் தருணங்கள்
தனிமை படர்ந்த
இராத்திரியின் நீளத்தை விட
கொடியது.
திரும்பும் திசையெங்கும்
நஞ்சு தோய்ந்த
வார்த்தைகள்.
இனி
மௌனித்திருப்போம்.
மிஞ்சட்டும்
மீதமுள்ள காதலும்
சில முத்தங்களும்.