ஒரு தேதி
போதுமானது.
கொடியவாயில் குருதிவழிகிற
மிருகமொன்று
வெறிநடனம் ஆடிக்களிக்க
ஒரு தேதி
போதுமானது.
உயிரோடிருக்கிற உடல்கள் மீது
அத்தனை வாஞ்சையோடு
கொலைத்தோட்டாக்களைப்
பதியனிடுவதற்கு
ஒரு தேதி
போதுமானது
இன்னது நேர்கிறதென்று
அறிந்துகொள்ளுமுன்
உயிரைவிடுகிற
கூட்டத்தைத் தேர்வுசெய்வதற்கு
ஒரு தேதி
போதுமானது
ஒரு சாலைச்சகதியை
ரத்தக்களறியாய்
நம்பகத்தோடு
குழைத்துவைப்பதற்கு
ஒரு தேதி
போதுமானது
அடுத்த தினங்களில்
சில வீடுகளை
சில கூட்டங்களை
சில குழுக்களை
ஓய்விலாது ஒப்பாரியிட வைப்பதற்கு
ஒரு தேதி
போதுமானது
ஒரு அரசாங்கத்தின்
அணிவிக்கப்பட்ட
அதிகாரத்தை
நெகிழ்ந்து இளைத்த
சாமானியர்களின் மீது
ரவைதுப்பி அழிப்பதற்கு
ஒரு தேதி
போதுமானது
இன்னுமொரு தேதி
வரும்
என்கிறதைச்
சொல்லாமற்சொல்லி
வைப்பதற்கு.
ஒரு தேதி
போதுமானது
எடுத்துக்கொண்ட உயிர்களுக்குப்
பரிசாக
பணத்தாட்களை
பிண்டம் செய்து
வாயிலடைப்பதற்கு
ஒரு தேதி
போதுமானது
ஒரு அரசாங்கம்
எத்தனை
அன்பானது
என்பதை
நிறுவி மகிழ்வதற்கு.
சாலச்சுகம்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
கொடியவாயில் குருதி வழிகிற மிருகம்
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்