வானூயர்ந்த மரத்தின் தழைகள்
என் உணவல்ல...
எனக்குத் தரைமேல்
இருக்கும் புல்தான்...
கூட்டத்தில்
நான் இருப்பேன்
கூட்டமாகவும் இருப்பேன்...
என்னை நீங்கள்
ஓட்டிச் செல்லலாம்
எங்கும்...
எனக்கென்று பாதை
ஏதுமில்லை
ஏற்கனவே
உருவாக்கப்பட்டிருக்கும்
பாதையே எனக்கானது...
வளைந்திருந்தால்
வளைந்து
குறுகியிருந்தால்
குறுகி
எப்படியும் செல்வேன்
பாதையின் போக்கில்...
மந்தையில் இருப்பதும்
மந்தையாக இருப்பதும்
எனக்குச் சுகம்...
மேய்ப்பவர்கள்
நீங்களாகவும்
இருக்கலாம்...
புல்வெளியானலும்
புதர் மண்டியிருந்தாலும்
என் விருப்பம்
ஏதுமில்லை
எல்லாம் உங்களுக்கானது...
என் வழியில்
என்னைப் பின்பற்றுபவர்கள்
ஏராளம்
என்னைப் போலவே
அவர்களும் இருப்பதால்
எவரும் கேள்வி
கேட்பதில்லை
நானும் சொல்வதில்லை...
பரந்த இடத்திலும்
நெருக்கியே இருப்பேன்
தனித்திருப்பதோ
தனித்திருப்பவரோ
எனக்குப் பிடிக்காது...
என் பார்வை
என்றும் நிலம் நோக்கித்தான்
நிமிர்ந்து நோக்கும்
எண்ணம் என்றுமில்லை...
நான்
பிணைப்பு இல்லாத போதும்
இடம் நகராது
இருப்பேன்...
எனக்கான விதிகள்
எதுவுமி்ல்லை...
தூறலானாலும்
அடை மழையானாலும்
என் தலை
நனைவதில்லை...
என் நிலையும்
மாறுவதில்லை...
என்னை வாழ வைக்கும்
என் நிழல்...
என் நிழலைத் தொடரும்
பல நிழல்கள்
என்னை என்றும்
வாழ வைக்கும்...
எனக்கு அழிவு
என்றுமில்லை...