சந்தித்துப் பின் விலகிய ஒரு புள்ளியில்
சாட்சிகளாய் மெளனித்து நிற்கிறோம்!
பிணங்களின் மேல் அரியணை கொண்டவன்
ஊர்கூடி தீர்ப்பு எழுதிய போதும்,
வேறொரு கிரகத்தில் வீசி எறிந்த போதும்,
திசைகளற்ற சுவர்களுக்குள்
சுழன்று வந்த அழுகுரல்
உன்னை நெருங்க முடியாமல் வீழ்ந்த போதும்,
ஆழ்ந்த சிந்தனையில் அமைதி காத்திருந்தாய்.
பாரம் தாங்காமல் சோர்ந்து விடும் என,
முரட்டுக் கயிற்றுக்கு முறுக்கேற்றி வலு சேர்த்தபோதும்,
நொடியில் முடிந்துவிடாமல்
உயிரின் மாமிசத்தை முழுமையாய் ருசிப்பதற்கு
உடல் நலம் சோதித்த போதும்,
குரல் உடைந்து
பேரிருளுக்குள் புதைந்து கிடந்தேன்,
புள்ளியாய் எங்கோ
மறைந்து கொண்டிருந்தாய்.
தூக்கு கயிற்றின் இறுக்கத்தில்
விழிகள் பிதுங்கிய போதும்
அவை உன்னை மட்டுமே தேடிக் கொண்டிருந்தது.
நுரை தள்ளி நீண்டு நெழிந்த நாக்கும்,
விரைத்து தொங்கிய கைகளும், கால்களும்
உன்னை நோக்கியே நீண்டிருந்தது.
மூச்சு குழாய்
ஒடிந்து நொறுங்கிய ஓசை
உன் காதுகளை சுற்றுகிறது...
"எல்லாம் முடிந்துவிட்டது"
என வரலாற்று திண்ணையில்
தலை சாய்த்து ஓய்வெடுக்கிறாய்.....
பின்னொரு நாளில்
சுழன்று நின்ற ஒரு புள்ளியில்
மீண்டும் சந்திக்கிறோம்.
முன்பு 'நீ' நின்ற இடத்தில் 'நான்'.
பறிக்கப்படும் உயிரை
வெறும் காட்சிகளாய் கண்டு
கரையவிடப் போவதில்லை!
என் குரல்
உன் சுதந்திரத்திற்கான சாட்சியாய் மட்டுமே
முழங்கும்!