ஆடு மேச்சுவரும்
அசூரு மேட்டுவழி
கூடி விளையாண்ட
கோணங்கி கொள்ளையில...
 
கொய்யாபழம் திருடயில
கோனேரி கிழவன்கிட்ட
மாட்டிவிட்டு போனவளே
மனசுக்குல பூத்தவளே...
 
சின்னு பாறைகளும்
சீமை கருவமுள்ளும்
நீ சிரிச்ச வலிக்கலையே
பூ விரிச்ச மலர்விழியே...
 
பொடிநடைய நீ நடக்க
புங்கமர நிழலாட்டம்
அனல்காற்று அடிச்சாலும்
அடிமனசு குளிரும்புள்ள
 
கருவா குறிச்சியில
உறவா பிறந்தவளே
ஒருநா பிரிந்தாலும்
இருவிழிதான் உறங்காதே...
 
ஐயனார் கோவிலுக்கு
அனுதினமும் வரதெல்லாம்...
அன்னக்கிளி உன்அழகை
அணுஅணுவாய் ரசித்திடத்தான்....
 
கோடாரி கண்ணழகி
கொளுசுபோட்ட உலகழகி
உன்னவிட என்மனச
உலுக்கி எடுத்தது யாருமில்ல...
 
ஆத்தங் கரையோரம்
காத்திருக்கும் என்மனசு
ஒத்த வார்த்தையில
என்உசுரு பூத்திருக்கு..

Pin It