கடைத்தெருவில் தான்
அவனைப் பார்த்தேன்
தன்னைப் பற்றிய பிரக்ஞையின்றி
நிலைகுத்திய கண்களுடன்
தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தான்
சடை விழுந்த கேசமும்
அழுக்கடைந்த ஆடையும்
அருவருப்பு கொள்ள வைத்தன
அடிக்கடி மேலே பார்த்து
சிரித்தான்
முகத்தை கோபமாக
வைத்துக் கொண்டான்
கைகளை மேலே தூக்கியபடி
போவதும் வருவதுமாக
இருந்தான்
தனது கையாலாகாத தனத்தாலா
மனைவியின் துரோகத்தாலா
மரண பயத்தினாலா
எதனால் சித்தம் கலங்கியது
வாழ்க்கை தனது
இன்னொரு முகத்தை
நம்மிடம் காட்டிக்
கொண்டுதானுள்ளது
நமது வீட்டில் நடப்பது
நமக்குத் தெரியாமலிருந்தால்
நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான்.

Pin It