கீற்றில் தேட...

ந‌டுநிசிப்பொழுதொன்றில்
விரித்த கண்களின்
மலர்ந்த முகத்துட‌ன்
உதடுகள் குவித்து
விட்டம் பார்த்து
தனிமையில் சிரித்திருந்தாய்
உன‌க்கேயான‌ மௌன‌த்தில்.

கைகால்கள் ஆட்டியபடி
உன் பேச்சு யாருட‌னோ
நீடித்திருந்த‌தது - நீ
சாமியோடு பேசிய‌தாய்
பாட்டி சொன்ன‌தில்
நீயும் நானும்
பேசிக்கொண்டோம் விழிக‌ளில்.

உன்னோடு கட்டிப் புரண்டு
சண்டையிட்டு தோற்றுப் போனதில்
சந்தோஷித்திருந்த
கரடி பொம்மையிடம்
ம‌ன்னிப்புக் கோரினாய்
எச்சில் முத்தத்தில்.

உன்னைச் சிங்காரிக்கும் வேளை
அம்மு உன் பிஞ்சுக்கால்களில்
அமர்த்த‌ப்ப‌ட்டு குளிப்பாட்டி
பூவிட்டு பொட்டிட்டு
கண்ணயர்ந்தாள் உன் தாலாட்டில்.

உன் எஜமானி அதட்டலில்  
ஜிம்மி வாலாட்டிக் கொண்டு
உன்னையே சுற்றியிருந்தான்.
நீ காட்டிய கையசைப்பில்
நெருக்கமாகிப் போன
எதிர் வீட்டு பானு உன்
ஆஸ்தான மொழிபெயர்ப்பாளினியாய்
தன்னை அறிவித்துக் கொண்டாள்.

தாத்தாவும் பாட்டியும் ஏதேதோ
பெயர்கள் சொல்லி அழைத்துக்
கொஞ்ச எல்லாம் புரிந்தவளாய்
பதிலுரைத்துக் கொண்டிருந்தாய்
உனக்கேயான பாஷைகளில்.

- சோமா