இப்பொழுதெல்லாம் உன்னைக்
குளிப்பாட்டுவதில் பயம் தொலைத்து
மகிழ்ச்சியடைகிறாய்
உன்னைக் கண்டிராத தருணங்களில்
உன் வாசம் குளியலறையாகிருக்கிறது
தொட்டித் தண்ணீரை டம்ளரின்
துணை கொண்டு காலி பண்ணுவதில்
தேர்ச்சி பெற்றிருக்கிறாய்
ஏசி அறையின் வெக்கை தாக்கியதாய்
பாதி நீர் நிரம்பிய பக்கெட்டிற்குள்
கால்கள் நனைத்து பின்பதில்
அமரத் துடிக்கிறாய்
ஒரு சொம்புத் தண்ணீருக்குள் உன்
கைகளை விட அனுமதிக்கையில்
சந்தோசம் உன்னை
தனதாக்கிக் கொள்கிறது.
உன் சந்தோசத்தைப் பறித்துக்
கொண்ட பிறிதொரு நாளில்
உன் மூத்திரத்தை
உழப்பிக் கொண்டிருந்தாய்
தவறென்று சொல்லி உன் கைகளை
நீரிட்டு கழுவியதில்
நித்தமும் நான்குமுறை
என் முன் வந்து நிற்கிறாய்
மூத்திரம் உழப்பிய கைகளோடு.
- சோமா