பாலை விடுத்த பயணமொன்றில்
இடைமறித்து ஈர்ப்புக் கொண்டாய்
வருணனை வரவழைத்து
தொலைத்த உன் சருகுகளின்
பச்சை மணம் மீட்டெடுத்ததில்
உண்டானது உறவு.
உன்னில் பிறந்த வார்த்தை நிழலின்
விஸ்தீரணத்தில் களைப்பாற
கண்ணயர்ந்ததில் முழுதாய் என்னை
விழுங்கி உன் இலையுதிர்த்தாய்-
அடுத்ததொரு உறவின் பயணத்திற்கு.
நீ விழுங்கிய யாவரும் உன்
இந்திரியத்தில் சுயமிழந்தனர்
பிறரறியாது ஒவ்வொருவருடனான
தனித்த பயணத்தின் புணர்வில்
கற்பு உன்னோடிருப்பதாய்க் கூவி
மன்னிப்பளிக்கக் கற்றிருந்த
கண்ணகியானாய்.
முகமூடிகள் தேவையிராதொரு
வேடதாரியின் கைங்கர்யத்தில்
குற்றங்கள் இழைத்திரா இயல்பும்
இழைத்தவைகள் இன்னும்
உணரப்படாதவையெனக் காட்ட
அதன் எண்ணிக்கை
அதிகப்படுத்தும் லாவகமும் உனது.
இள மத்தி கிழமெனும்
பாகுபாடில்லை உன் நிழலுக்கு
அகண்ட உன் நிழல்வெளியில்
ஜீவன் மானம் மட்டுமே பறிக்கப்படும்
வசைச் சொற்களிராத உன் கோபம்
உயிரை மட்டுமே உணவாய்த் தின்னும்
மன்னிப்பிராத குற்றங்களே
புரியுமுனக்கு மன்னிப்பு கோரும்
வார்த்தைகளைத் தேடிக்
களைப்புறும் அவசியமிராது.
கிளை பரப்பி விரியும் உன் நிழல்
உன்னை விழுங்கும் தருணமொட்டிய
பெருமரணத்தில் நின்று போகும்
உன் விழுங்குதல்கள்.