கீற்றில் தேட...

 

ஒரு வயது முதிர்ந்தவர் கோடை கால நடுப்பகலில்
மஞ்சள்ப் பூக்கள் நிறைந்த கொன்றை மரத்தடியில்
தலைகவிழ்ந்திருக்கிறார்
சோர்வு நிறைந்த அவர் முகத்திலிருந்து
எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை
பரந்த புல்வெளி அருகிலிருக்கும் மந்தைகள்
வெளிர் நிறத்தாலான துருவேறிய பாத்திரம் இவற்றைக்கொண்டு
அவரை மேய்ப்பான் எனக்காண்கிறேன்
குற்றம் நிறைந்த என் விழிகளை அவர் அலட்சியம் செய்கையில்
உதிர்ந்து கிடக்கும் மஞ்சள்க் கொன்றைப் பூக்களுடே
என் படுகொலைப்பாடல்கள் அவரை நெருங்கிச் செல்கின்றன
விலகிப்போ என்பதாகக் கையசைக்கிறார்
எதையும் உறுதிப்படுத்த முடியாமல்
அவர் முகத்திலிருந்து நான் தூர விலகிப்போய்விட்டேன்
பல ஆண்டுகளின் பின்
நீயும் நானும்
மஞ்சள்ப் பூக்கள் நிறைந்த கொன்றை மரத்தடியில் மீண்டும்
அவரைக் கண்டோம்
அவரைப்பற்றிய ஓர் அழகிய சித்திரத்தை நீ வரையத்தொடங்கினாய்
நான் சில கவிதைகளை எழுதினேன்
உனது சித்திரம் அவரைப் பைத்தியக் காரணாக வரைந்தது
எனது கவிதைகள்
அவரை மந்தை மேய்ப்பான் என்பது போலவே எழுதிச் சென்றது
அமாவாசை இரவொன்றில் உலகின் எல்லாக்கலைஞர்களும்
எமக்குப் பாராட்டுக்களையும் பரிசுகளையும் அனுப்பிக்கொண்டிருந்தார்கள்
உன்னதமான கனவின் பொருளை அடைந்து விட்டதாக
நானும் நீயும் மாறி மாறி முத்தமிட்டுக்கொண்டோம்
பின்னொரு நாள்
நானும் நீயும் மற்றும் எல்லாக் கலைஞர்களும்
மஞ்சள்ப் பூக்கள் நிறைந்த கொன்றை மரத்தடியில்
மீண்டும் அவரைக் கண்டோம்
ஓர் கூரிய உலோகத்தால்
அவர் தன் கழுத்தை அறுத்துக்கொண்டிருந்தார்
காயத்திலிருந்து குருதி பெருகுகிறது
நீயும் நானும் அதிர்ச்சியில் உறைந்துபோக
முகங்கள் முகங்களை மேய்ந்தன
புரிதல்களற்ற வெளி ஒரு துயரிசையை மீட்டுகிறது.