உழுத நிலத்தில்
விசிறி விதைக்கப்பட்ட
நெல் மணிகளின்
ஒளிமயமான எதிர்காலத்தை
ஒத்த எதிர்பார்ப்புகளுடன்
விழிகளில் மின்னல்
நதியொன்று தற்காலிகமாக
உறைந்துவிட்டாற்போல
உடலெங்கும்
பரவியிருந்த குளிர்ச்சி
மெல்ல ஆவியாக
காமத்தின் மர்மமுடிச்சுகள்
ஒவ்வொன்றாய் அவிழ….
உதடுகளை உதடுகளால்
வருடி நனைக்கையில்,
உடலை மூடியிருந்த திரையோ
முள்ளென நெருட
விழிகளை மூடிக்கொண்டே
ஆடைகளை கரங்கள் ஒதுக்க…
வழமைக்கொவ்வாத
செயல்கண்டு
வெட்கம் கண்களை
போர்த்திக்கொள்ள….
தவிர்க்கப்பட்ட கனி குறித்த
எச்சரிக்கைகளையும்
ஆசிர்வதிக்கப்பட்ட வனத்திலிருக்கும்
ஐஸ்வரியங்களையும்
முற்றாய் மறந்து திளைப்பதே
ஆதமுக்கும் ஏவாளுக்கும்
அப்போது தேவையாய் இருந்தது!
படைத்தவனின்
விதிகளை,
எச்சரிக்கைகளை,
மீறுகிறோமெனும் தயக்கம்
மனதில் பரவியிருந்தபோதும்
காமம் விஞ்சியது அனைத்தையும்!