கீற்றில் தேட...

வானெங்கும் கருந்திரள்கள்

நிறைத்திடும்

இரவொன்றின் நேர்க்கோட்டில்

அசையும் வளைவுகளென

நெளிகின்றன இதயத்துடிப்புகள்..

 

 

நெற்றி வகிடின் இறுக்கத்தினில்

செவ்வானம் ஒன்றை

எழுதிடச் சொல்லி நிற்கையிலே

அறைமுழுதும் வெளிர்மஞ்சள் ஒளியில்

சிறகு விரிக்கின்றன

வண்ணத்துப்பூச்சிகள் சில..

 

 

வானவில்லின் நீளத்தில் பேசி தீர்க்க

ஆயிரம் இருப்பினும்

ஒற்றை வெட்கம்

சூடும் உன்னழகினை

யாதென்று எழுதி வார்க்க?

 

ஒவ்வொரு வார்த்தையையும்

கோர்த்தெடுத்து உறக்கத்திற்கு

பதில் உரைக்கிறேன் நான்..

நிலாக்களைச் சிதறடித்து

விளக்குகளைத்

தனிமையின் இருப்பில் விட்டு

அருகருகே அமர்ந்திருக்கிறோம்,

இரு இணை விழிகளில்

ஒற்றைக்காதலுடன்.. 

- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]