கொலைவாள் ஒன்று கிடைத்தது.
பழைய பரணிலிருந்து
பொருட்களை அப்புறப்படுத்துகையில்.
கெட்டிக்குருதித்துணுக்குகள்
சருகென உதிர்ந்தது.
என் தகப்பனோ
என் மூதாதைகளில்
ஒருவரோ
அதனைப் பிரயோகித்திருக்க வேண்டும்.
என்று நம்பினேன்.
அறுபடும் நரம்புகள் துடித்தழ
பீய்ச்சியடிக்கும் குருதியுடனான
கணநேர அடங்கலுடன்
ஒரு மனிதன்
ஒரு பெயர்
ஒரு உயிர்
ஒரு வாழ்க்கை.
ஒரு துரோகம்
ஒரு குற்றம்
ஒரு தண்டனை
ஒரு மெல்லினம்
ஒரு வல்லினம்
ஒரு பகை
ஒரு சந்தேகம்
ஒரு மீறல்
ஒரு எதிர்க்கேள்வி
ஒரு வேலைநிறுத்தம்
ஒரு உண்ணாவிரதம்
ஒரு புறக்கணிப்பு
ஒரு போராட்டம்
இவையெல்லாமும்
முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
என்றபோதும்
ஒரு கொலைவாளை
எவ்வாறு ஒளித்துவைப்பது
என்கிற சாகசம்
பற்றிய புரிதல்
அதனை ஓங்கிய
கரங்களுக்குரியவனுக்கு
சரிவரத் தெரிந்து இருக்கவில்லை.
அந்த வாளை
ஒருவருமறியாது
காலச்செல்லரிப்பு
நேர்ந்திராத
பூர்வீக வனக்குளத்தில்
விட்டெறிந்த பின்
வீடு திரும்புகிறேன்.
ஒரு கூட்டத்தொடர்ச்சியை
ஒரு குழுவன்மத்தை
ஒரு கும்பலின் ஆங்காரத்தை
ஒரு குடும்பத்திமிரை
ஒரு வம்சப்பாரம்பரியத்தை
இன்னுஞ்சில முள்மரங்களை
காப்பாற்றிய சந்ததிப்பேருவகையுடன்
புதிதான உலைக்களன்களில்
கொதிக்கும் திரவம்
உலோகக் கொலைவாள்களாய்
வடிவம் பெறக்கூடும்
என்னும்
அபத்தத்தை வியந்தபடி.