தமிழ்நாட்டில் கதர் ஸ்தாபனங்களுக்கு சம்பந்தப்பட்ட உத்தியோகங்களில் இருப்பவர்களில் சிலர் கதர் கட்டாமல் இருக்கிறார்கள் என்றும், கதர் கிளை டிப்போக்களில் கதர் விற்பவர்கள் கூட கதர் கட்டாமல் அன்னிய நாட்டுத்துணியை அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அடிக்கடி நமக்குப் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. தற்காலம் காங்கிரசிலிருப்பவர்கள் எப்போதும் கதர் அணிய வேண்டியது அவசியமில்லை என்று ஏற்பட்டு விட்டாலும் கதர் ஸ்தாபனங்களுக்கு அந்த சட்டம் எட்டும்படியான காலம் இன்னமும் வரவில்லை என்றே நினைக்கிறோம்.

அல்லாமலும் கதர் ஸ்தாபனங்களில் ஊதியம் பெற்றானாலும், ஊதியம் பெறாமலானாலும், தொண்டு செய்பவர்கள் கதர் உடுத்தியாக வேண்டும் என்கிற நிபந்தனை ஏற்படுத்துவது பாவமல்லவென்றே நினைக்கிறோம். ஆதலால், தமிழ்நாட்டு கதர் கவர்னர், கதர் ஸ்தாபன சிப்பந்திகளுக்கு இதைப்பற்றி ஓர் சுற்றுத்திரவு அனுப்ப வேணுமாய் கோருகிறோம்.

(குடி அரசு - அறிக்கை - 10.01.1926)
Pin It