கீற்றில் தேட...

 

பள்ளிக்கூடத்திலிருந்து
மதிய உணவு வேளையில்
செருப்பில்லாத கால்களுடன்
வெயில் சூடு பொறுக்க முடியாமல்
வீடு வந்து சேருவோம்
குளத்தில்
தூண்டில் போட்டு
கிடைத்த மீன்களை
கிணற்றுக்குள் விடுவோம்
சினிமா தியேட்டரில்
அடுத்த படம் இன்னதென்று
பந்தயம் கட்டுவோம்
சைக்கிள் டயருக்கு
பஸ் பெயரை வைத்து
ஊர் முழுக்க சுற்றுவோம்
காற்றாடி வாங்க
வீட்டில் கொடுத்த காசை
தூக்கி எறிந்து விளையாடும் போது
வீட்டுக் கூரையில் விழுந்துவிட
பயந்து போய் நின்ற என்னிடம்
சுமதி அக்கா கொடுத்த இருபது பைசா
என் உடலை
காயங்களின்றி காப்பாற்றியது
வெள்ளந்தி பேச்சும்
விளையாட்டுப் புத்தியும்
தொலைந்து போன
பதின் வயதுகளில்
புத்தகத்தில் படிப்பதை
தேர்வில் வாந்தியெடுத்து
வைப்பதே
பிழைப்பாய் போய்விட்டது.