கீற்றில் தேட...

 

இமிழ்கடல் உளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
வென்றிட்ட செழியன் பெரும்புகழ் அறிவீர்
மன்றத்தில் சதியால் தீயிட்ட இட்லா¢ன்
சூதில் சிக்கிய வீரன் டிமிட்ரோவ்
ஆதி முதலாய் அந்நியர் சட்டம்
முழுமையும் பயின்று முழுவுரை யாடி
வழுவிலா நீதியின் தீர்ப்புஇது என்று
நீதியின் பீடமும் மறுக்க வொண்ணா
மேதினி காணா தீர்ப்பை அளித்தான்
வேற்று மண்ணில் தன்னந் தனியாய்
மாற்றம் முடியா வாதம் புரிந்த
விடுதலை வீரன் டிமிட்ரோவ் புகழை
எடுத்துக் கூறுதல் யார்க்கும் எளிதோ?
 
(ஒலிகடலாற் சூழ்ந்தது இவ்வுலகம். ஒரு சமயம் தலையாலங்கானத்தில் பல (ஏழு) மன்னர்கள் ஒன்று கூடி போரிட்ட பொழுது, அனைவரையும் ஒருங்கே வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் புகழை அறிவீர்கள். (ஜெர்மனி நாட்டின்) நாடாளுமன்றத்தில் ஹிட்லர்  சதித் திட்டத்தினால் தீயை வைத்துவிட்டு,  சூழ்ச்சியினால் மாவீரன் டிமிட்ரோவை (George Dimitrov) அதில் சிக்க வைத்துவிட்டான். (சூதில் சிக்கிய பல்கேரிய நாட்டினரான டிமிட்ரோவ்) அந்நிய (ஜெர்மனி) நாட்டின் சட்டங்களை முழுமையாகப் பயின்று, முழு வழக்கிற்கும் (வழக்கறிஞரை வைத்துக் கொள்ளாமல்) தானே வழக்காடி (ஜெர்மனி நாட்டுச் சட்டப்படி) தவறில்லாத நீதியின் தீர்ப்பு இப்படித்தான் இருக்க முடியும் என்று நீதிபதிகளே மறுக்க முடியாதபடியான (இதுவரை உலகம் கண்டிராத படியான - அதாவது குற்றஞ்சாட்டியவரே குற்றவாளி என மெய்ப்பித்து) முடிவைக் கூறினார். பகை நாட்டில் தன்னந்தனிமையில், (யாராலும்) மறுத்துக் கூற முடியாத படி வாதம் புரிந்த விடுதலை வீரன் டிமிட்ரோவின் புகழை எடுத்துக் கூறுவது யார்க்கும் எளிதான செயல் அல்ல.)
 
- இராமியா