காலை மாலை ஒலிக்கின்றன
பக்திப்பாடல்களில் பழைய கதைகள்
பலமுறை பலமுறை கேட்டுக் கேட்டு
படிந்துபோன மகிமைப் போற்றிகள்:
“அனைத்திலும் அனைத்தும் யானே என்றவா”
“அயோத்தியில் தசரதன் மகனாய்ப் பிறந்தவா”
“அப்பனுக்கே பிரணவப் பாடம் சொன்னவா”
“அகிலத்தையே வளர் காலால் அளந்தவா”
“பார்வதி கங்கையுடன் நடமிட்டு நின்றவா”
“பாவி சூரனை வீழ்த்திக் கொன்றவா”
“பசுவின் வெண்ணை திருடித் தின்றவா”
“பாரதப் போரில் பாண்டவருக்காய் வென்றவா...”
“பத்து கட்டளைகள் பாருக்குத் தந்தவா”
”பலியிடப்பட்ட மகவுக்காய் அருள் பொழிந்தவா”
ஒரு நாளும் காதில் ஒலித்ததில்லை
எந்தப் பாடலிலும் புதிய போற்றிகள்:
“உலகப் போரைத் தடுத்துக் காத்தவா”
“இராக்கின் குழந்தைகள் பலியை மறித்தவா”
“உள்நாட்டு ஊழலை ஊற்றிலேயே கெடுத்தவா”
“அழுகும் அரிசியை ஏழைக்குக் கொடுத்தவா”
மாட்சிகள் எழுதப்பட்ட காலத்துக்குப் பின்
மண்ணுலகிற்கு ஏன் வரவேயில்லை ஆண்டவா?