தூண்டிலின் முள்ளில்
கவ்வக் கொடுக்கப்பட்டிருக்கிறது இரையொன்று.
பெரும்நீர்க் கானகத்தில்
பொய் இரைகள் நோக்கி வரும்
தடங்களின் மெல்லசைவுகளையும்
கூர்ந்து நோக்கியபடி
தக்கைக்குச்சியின் கண்கள்.
கரையேற்றப்பட்ட மீன்கள்
ஏக்கத்தோடு காற்றைக் கேவிக்கேவி
மீதமிருக்கும்
நெடுஞ்சுவாசத்தைத் தப்ப விடுகின்றன.
நிதானித்துக் கடந்து போக
பழக்கப்பட்டிருக்கிறோம் நாம்,
உயிர்ச்சலனமின்றி
பருத்துக்கிடப்பதோ
நமக்கு முன்பிருந்தே
வாழ்ந்து வரும் மூதாதையர்கள்.
வேட்டையின் வேட்கையிலிருந்து நீ கற்றவை
நொடியில் விழவைக்கும்
தந்திரங்களை.
உடனடியாக
உபாயம் அறியவேண்டும் அவைகள்.
தப்பித்தலின் ரகசியங்களிலிருந்து.