கீற்றில் தேட...

பின்னிருந்து அபகரித்தோடிய
எம்குல ராஜ சிம்மாசனத்தை
கண்ணிமையும் கணத்தில் களவோட்டிய
முத்து மணி மகுடங்களை
மன்றாடிறைஞ்சிப் பெறும் மாக்கள்
எம் குல வழியிலுமில்லை!
எம் பொடிசுகள் பேண்டுக் கழித்த
வனாந்திர வெட்ட வெளிகளை
எம் பெண்கள் தீட்டுக்கொதுங்கும்
நலிந்த கூரை கொத்தளங்களை
மங்கிய நரையும் தொங்கிய விரையுமாய்
மூப்புடைத்த முதிர் தலைகளின்
சுருதியற்ற மரண ஓலங்களை விடவும்
பெரிதாய் ஒன்றும் கிட்டவில்லையுனக்கு
முன் விளக்கொளிரும் உன்னூர்தியும்
உன் பிணமேற்று ஒருநாள்
கதறித் திரியும் தெருக்களினூடே
ராஜ பவனியுறும் உன் வலக்கரங்களின்
சிரங்கள் சிதறிக் கிடக்கும்
உன் விருந்துண்ணியறைகளில்
உன்னில்லம் தோறும் எம்குலக் கொடி
பட்டொளி கண்டு பறக்க
எம்மில்லம் தோறும் உம் பெண்கள்
எங்களில்ல நாய் பற்றிக் கிடப்பார்கள்
முழு நேர முண்டச்சிகளாய்,
உம்மிகழ்ச்சி சொல்லிச் சொல்லியே
எம் வாட்களோடு கூரேற்றப்படுகின்றன
எம்மின வாரிசுகளின் இதயங்களும்
அதற்கோர் அத்தாட்சியாய்
இன்றளவும் பத்திரமாயுள்ளன
எங்கள் வீட்டின் சாணி மூலைகளில்
குருதியுண்ட பிடி மண்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)