கீற்றில் தேட...

மழையில் நனைந்ததுண்டு
தேகம் சிலிர்க்க
நதியில் நனைந்ததுண்டு
வேகம் துளிர்க்க 
அருவியில் நனைந்ததுண்டு
ஐம்புலன் விறைக்க
கடலில் நனைந்ததுண்டு
என் முழுமை தகிக்க
என் உயிர் சிலிர்த்து, துடித்து
துளிர்த்து, மிதந்து, விறைத்து,
தகித்து, சுகித்து, கரைந்தது
உன் அன்பினில் 
நனைந்த போது..
-----------------------------
நிறைவேறுமெனும் 
நம்பிக்கையில் 
என் இரவுகள் 
இசைக்கின்றன
உனக்கான பாடலை..

என் சொற்களில் 
ஒளித்து வைத்திருக்கின்..
நீயே அறியாத வண்ணம்
நமக்கான காதலை..
-------------------------
எந்த வரமும்
வேண்டாம்
யாராவது சாபமிடுங்கள்
‘நாங்கள் காதலர்களாகி
திரிவோமென’ அல்ல..
நொடிதோறும் 
சண்டையிட்டுக் கொள்வோமென
அதுவேனும் பலிக்கட்டும்..
--------------------------------------
என் குறுஞ்சிறகுகளில்
உன் பார்வை பட்டது..
வண்ணமானேன்
உன் சுவாசம் தீண்டியது..
வாசமானேன்..
உன் நிழல் படர்ந்தது
பெண்ணானேன்
உன் நிஜம் தரிசித்தேன்
தேவதையானேன்..
------------------------------------------

கை நிறைய கனவுகளையும்
மனம் நிறைய காதலையும் 
சுமந்து திரிகிறேன்
எத்தனையோ பேர்
சாதுரியத்தால்  
அபகரிக்க முயன்றும்
தோற்றுத் திரும்பினர்..
ஒருவன்தான் 
ஒற்றைப் புன்னகையில் 
அத்தனையும் கொய்து போனான்..
----------------------------------------------------------

உனக்குத் துணிவிருக்கலாம்
மறைத்து 
வைத்திருப்பதில் பயனென்ன?

உனக்கு காதலிருக்கலாம்
மௌனம் 
சாதிப்பதில் நிகழ்வதென்ன? 

உனக்கு இசைவிருக்கலாம் 
பிடிவாதத்தால் 
ஆகக் கூடியதொன்றுமில்லை.. 

உனக்கு புரிந்திருக்கலாம் 
முரண்டு பிடிப்பதில் 
முன்னேற்றம் இருக்கப் போவதில்லை..

உனக்குப் போராடப் பிடித்திருந்தால்
வந்துவிடு
இந்த வாழ்க்கை அழகானது என்பதை
அறியத் தருகிறேன்..
உன்னைக் காதலால் நிரப்பி!
-----------------------------------------------

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்
இந்த உலகில் உச்சபட்ச இன்பம்

மறுதலிப்பதும்
புறக்க்ணிப்பதும் 
இந்த உலகில் மிகக் கொடுமையான தண்டனை
நீ தண்டனையை நிறைவேற்றிய பின்பும்
இன்பத்ததைத் தந்து வருகிறேன்
இது உனக்கான தண்டனை...

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)