-சேலம் அருகே ஒரு கிராமத்தில் ஆயிரம் பேர் ரூ. ஒன்றரை லட்சம் செலவில் அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு நோய் வராது, ஊர் வளம் பெருகுமாம்.

-திருச்சி உறையூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் புகுந்த சேவல் பாம்பை கொத்திக் கொன்றதால், சேவலை மக்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்.

- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை படப்பள்ளியில் மழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம் நடத்தப்பட்டது.

காட்டுயிர்கள் பற்றி நாளிதழ்களில் சமீபத்தில் வெளியான இந்தச் செய்திகள் சூழலியலாளர்களையும் பகுத்தறிவாளர்கலையும் கவலையில் ஆழ்த்துபவை. மேற்கண்ட செய்திகளின் பின்னணியில் உள்ள உண்மையை உணர்ந்தால் எதை பாதுகாக்க வேண்டும் என்ற உண்மை புரியும். நாம் வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து தரும் மரங்கள், இந்தியாவில் ஏதாவது ஒரு வழியில் ஒவ்வோர் ஆண்டும் 25 லட்சம் ஏக்கர் பரப்புக்கு வெட்டிச் சாய்க்கப்படுகின்றன.

வடஇந்திய காடுகளில் காணப்படும் செந்நிற காட்டுக் கோழியே வளர்ப்புக் கோழிகளின் மூதாதை. அந்தக் கோழிகள் பாம்பு, புழு, பூச்சி போன்ற அனைத்தையும் சாப்பிடும் அனைத்துண்ணிகள். அவை பாம்பைக் கொத்துவதில் புதிதாக ஒன்றுமில்லை. இந்தியாவில் 100 வகைத் தவளைகள் காணப்படுகின்றன. இதில் எந்த வகைத் தவளைக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை வரும் என்று யாருக்காவது தெரியுமா? இப்படி அறிவியல் பார்வையில்லாமல் மூடநம்பிக்கைகளை பின்பற்றிக் கொண்டிருப்பதால், நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரும் சொத்தான இயற்கையின் அழிவு வேகமடைந்து வருகிறது.

நீராதாரங்களான ஏரி, குளம், ஆறு, சதுப்புநிலங்கள் யாவும் அரசியல்வாதிகளாலும் தொழிலதிபர்களாலும் வீட்டுமனைகளாக, பன்னாட்டுத் தொழிற்சாலைகளாக, கழிவுநீர் குட்டைகளாகவும் மாறி வருகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளைநிலங்கள் பறிபோகின்றன. வேட்டையாலும், விபத்துகளாலும், மூடநம்பிக்கையாலும் காட்டுயிர்கள் கொன்றழிக்கப்படுகின்றன.

ஆறாவது உலகப் பெருஅழிவு தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக தாவரங்கள், உயிரினங்கள் அழிய ஆரம்பித்துவிட்டன. ஒருவருக்கு உயிரைக் குடிக்கும் பெரிய நோய் வந்திருப்பதை உணர்த்தும் சிறிய காய்ச்சல், தலைவலி போன்ற நோய்க்குறிதான் இது. நோய் முற்றும்போது நாமும் இறக்க நேரிடும். நமக்கு கணக்கற்ற சேவைகளைச் செய்யும் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுவதை எதிர்த்துப் போராடினால் மட்டுமே நாமும் பிழைக்க முடியும். மூடநம்பிக்கைகள் எதற்கும் பயன் தராது, நம் உயிரைக் காப்பாற்றுவது உட்பட.

(கட்டுரையாளர் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்)
Pin It