தேவர்கள் என்றும், தெய்வங்கள் என்றும், அவதாரமென்றும், ரூபமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், அதற்காக மதாச்சாரியர்கள் என்றும், அதற்கு சமயாச்சாரியர்கள் என்றும் கட்டியழுபவர்கள் ஒன்று வயிற்றுப் பிழைப்பு புரட்டர்களாயிருக்க வேண்டும். அல்லது பகுத்தறிவில்லாதவர்களாகவாவது இருக்க வேண்டும் என்பதே நமது அபிப்பிராயம் என்பதாக பல தடவைகளில் வெளிப்படுத்தி இருக்கின்றோம்.

periyar 533அது போலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ, சொல்லப்படுபவையும் ஒரு “சாமி” என்றோ அல்லது ஒரு ஆசாமி என்றோ அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் ஞானமற்றவர்களின் கொள்கை யென்றே சொல்லுவோம்.

உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்வு, அழிவு என்பவைகளான மூவகைத் தன்மைகளையும், ‘சாமி’களோ ஆசாமிகளோ ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ அல்லது ஒவ்வொரு தன்மைக்கும் ஒவ்வொரு ஆசாமி பொறுப்பாளியாய் இருக்கின்றான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் விசார ஞானமற்றவர்கள் என்றே சொல்லுவோம்.

மற்றபடி “மேல் கண்ட ஒவ்வொரு தன்மைக்கும் மேல்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது” என்றும், “அது ஒரு உருவமல்ல, ஒரு உருப்படி அல்ல” என்றும், “உற்பத்தி, வாழ்வு, அழிவு என்னும் தன்மையையும் அத்தன்மைக்கு ஆதாரமான தோற்றங்களைத் தான் கடவுள் என்றோ, தெய்வம் என்றோ சாமி என்றோ, ஆண்டவன் என்றோ கருதுகிறோம்” என்பதாகவும், “தானாகத் தோன்றிற்று, தானாக வாழ்ந்தது தானாக அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான்” என்றும், “அவ்வியற்கைக்குத்தான், கடவுள், ஆண்டவன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின்றோம்” என்பதாகவும் மற்றும் “இவ்வியற்கைத் தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்க வேண்டுமே” என்றும் “அந்த காரணத்திற்கோ சக்திக்கோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம் என்கின்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது” என்பதாகவும் சொல்லிக் கொண்டு மாத்திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது அவ்வளவாக தகரார் இல்லை என்று சொல்லிக் கொள்ளுகின்றோம்.

ஆனால் அந்தக் கடவுளுக்கு கண், மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண் பெண் தன்மை, பெண்ஜாதி புருஷன், குழந்தை குட்டி, தாய் தகப்பன் முதலியவைகளை கற்பித்து, அதனிடத்தில் பக்தி செய்ய வேண்டும் என்றும், அதற்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பூசை செய்ய வேண்டும் என்றும், அச்சாமிகளுக்கு கல்யாணம் முதலியவைகள் செய்வதோடு அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான ‘திருவிளையாடல்கள்’ முதலியவைகள் செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்ய வேண்டும் என்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளையாடல்களைப் பற்றியும் பாட வேண்டும் என்றும், அப்பாடல்களை ‘வேதமாக’ ‘திருமுறையாக’ ‘பிரபந்தமாக’ கடவுள் உண்டு என்பதற்கு ஆதாரமாக கொள்ள வேண்டும் என்றும், அப்பாடல்களைப் பாடினவர்களை ‘சமயாச்சாரியர்’களாக, ‘ஆழ்வார்’களாக, ‘சமயகுரவர்’ களாக, ‘நாயன்மார்’களாக பல அற்புதங்கள் செய்தவர்களாக கொள்ள வேண்டும் என்றும், இது போன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்றுவார்கள் என்றும் மற்றும் நாம் செய்த, செய்கின்ற, செய்யப் போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கியத்தனங்களையும், கொடுமைகளையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவைகளான மூட நம்பிக்கையும் வயிற்றுப் பிழைப்பு சுயநலப் பிரசாரமும் ஒழிய வேண்டுமென்பதுதான் நமது கவலை.

ஏனெனில் இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும் மற்ற நாட்டார்கள் போல நம்நாட்டு மக்களுக்கு பகுத்தறிவு விசாலப்பட்டு மற்ற நாட்டார்களைப் போல விஞ்ஞான (சையன்ஸ்) சாஸ்திரத்திலே முன்னேற்றமடையாமல் இருப்பதற்கும், அன்னிய ஆட்சிக் கொடுமையிலிருந்து தப்ப முடியாமல் வைத்து பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதற்கும் இம்மூட நம்பிக்கையும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரசாரமும், இவைகளினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும் செலவுகளுமேதான் காரணங்கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கிறோம்.

நாமும் நமது நாடும் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கும் ஒருவரை ஒருவர் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமை இல்லாமல் செய்திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பலன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும் சிறப்பாக மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும் மேல்கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும், அதன் சமயமும் சமயச்சாரியர்கள் என்பவர்களும், அவர்களது பாடல்களும், நெறிகளுமே முக்கிய காரணம் என்பதைத் தூக்கு மேடையிலிருந்தும் சொல்லத் தயாராயிருக்கின்றோம்.

நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம்நாட்டில் பூசைக்கும், அபிஷேகத்திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவத்திற்கும் பஜனை முதலிய காலnக்ஷபத்திற்கும் இக்கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்தி ஸ்தலம், தீர்த்த ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக்கும், இக்கடவுள்களின் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுள்களைப் பற்றிப் பாடின பாட்டுக்களையும், அச்சடித்து விற்கும் புஸ்தகங்களை வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக்காக செலவாகும் பொருள்களிலும், நேரங்களிலும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் சுமார் இருபது கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக் கொண்டு வருகின்றது என்று சொல்லுவது மிகையாகாது.

இவ்விருபது கோடி ரூபாய்கள் இம்மாதிரியாக பாழுக்கிறைக்காமல், மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ, விஞ்ஞான (சையன்ஸ்) வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ, செலவாக்கப்பட்டு வருமானால் நம் நாட்டில் மாத்திரம் வாரம் லக்ஷக்ணக்கான மக்களை நாட்டை விட்டு அன்னிய நாட்டிற்கு கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும் தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பது ஏற்படுமா? தீண்டக் கூடாத – நெருங்கக் கூடாத – பார்க்கக் கூடாத - மக்கள் என்போர்கள் கோடிக்கணக்காய் பூச்சி, புழு, மிருகங்களுக்கும் கேவலமாயிருந்து கொண்டிருக்க முடியுமா?

100 - க்கு மூன்று பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100 க்கு 97 பேர்களை சண்டாளர், மிலேச்சர், சூத்திரர், வேசி மக்கள், தாசிமக்கள், அடிமைப் பிறப்பு என்று சொல்லிக் கொண்டு அட்டை இரத்தத்தை உறிஞ்சுவது போல் உறிஞ்சிக் கொண்டும், நம்மையும், நம் நாட்டையும் அன்னியனுக்குக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்து கொண்டும் இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம். நமக்கு கல்வி இல்லாததற்கு சர்க்கார் மீது குற்றம் சொல்லுவதில் கவலை கொள்ளுகின்றோமேயல்லாமல் நம் சாமியும், பூதமும், சமயமும் நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றி யாராவது கவலை கொள்ளுகின்றோமா என்று கேட்கின்றோம்.

நிற்க, “அன்பையோ, அருளையோ, ஒழுக்கத்தையோ உபசாரத்தையோ மாறுபெயரால் கடவுள் என்று கூப்பிடுகின்றேன், அதனால் உனக்கு, என்ன தடை?” என்று யாராவது சொல்ல வருவார்களானால் அதையும் (அதாவது அக்குணங்கள் என்று சொல்லப்பட்ட கடவுள் என்பதையும்) பின்பற்றும்படியான குணங்களாகவோ ‘கடவுள்’களாகவோ தான் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றோமே யொழிய வணங்கும்படியான கடவுளாக இருக்க நியாயமில்லை என்றே சொல்லுவோம்.

மதம்

இதுபோலவேதான் “மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும் மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய நடையைப் பற்றிய கொள்கைகளைக் கொண்டது” என்பவர்களிடத்திலும் நமக்கு அவ்வளவாக தகரார் இல்லை. “அன்பே சிவம், சிவமே அன்பு” என்பதான சிவனிடத்தில் நமக்குச் சண்டையில்லை. “அன்பு என்னும் குணம்தான் சிவம்; அந்த அன்பை கைக்கொண்டு ஜீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம்” என்பதானால் நாமும் ஒரு சைவனாகவும் அதன் மூலம் நாமும் ஒரு சைவன் என்று சொல்லிக் கொள்ளவும் ஆசைப்படுகின்றோம். அதுபோலவே “ஜீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, ஜீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள்தான் விஷ்ணு; அக்குணங்களைக் கைக்கொண்டு ஒழுகுவதுதான் வைணவம்” என்பதான விஷ்ணுவிடத்திலும் வைணவனிடத்திலும் நமக்கு அவ்வளவாக தகரார் இல்லை என்று சொல்லுவதோடு நாமும் நம்மை ஒரு வைணவன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகின்றோம். நமக்கும் மற்றும் உள்ள மக்களுக்கும் அச்’சைவத் தன்மை’யும், ‘வைணவத்தன்மை’யும் ஏற்பட வேண்டும் என்றும் தவங்கிடக்கின்றோம்.

அப்படிக்கில்லாமல், இன்ன மாதிரி உருவம் கொண்ட அல்லது குணம் கொண்டதுதான் கடவுள் என்றும், அதை வணங்குகிறவன்தான் சைவன் என்றும், அப்படி வணங்குகிறவன் இன்ன மாதிரியான உடை பாவனை கொண்டவனாகவும், இன்ன மாதிரி குறி இடுகிறவனாகவும் இருப்பதுதான் சைவம் என்றும், இன்ன பேருள்ள கடவுள்களைப் பற்றி பாடின எழுதின ஆசாமிகளையும் புஸ்தகத்தையும் வணங்குவதும் மரியாதை செய்வதும்தான் சைவம் என்றும், மற்றபடி வேறு இன்ன உருவமோ பேரோ உள்ள ‘கடவுள்’ என்பதை வணங்குகிறவர்களையும் வேறு குறி இடுகின்றவர்களையும் யாதொரு குறியும் இடாதவர்களையும் சைவரல்லாதவர் என்று சொல்லுவதுமான கொள்கைக்காரரிடமே நமக்குப் பெரிதும் தகரார் இருக்கின்றது என்று சொல்வதுடன் அக்கொள்கைகளையும், அச்சமயங்களையும் அக்கடவுள்களையும் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.

அன்றியும் பல சமயப் புரட்டர்கள் இம்மாதிரி விவகாரம் வரும்போது “நான் கடவுள் என்பதாக ஒரு தனி வஸ்துவோ ஒரு குணமோ இருப்பதாகச் சொல்லவில்லை” என்றும், “மலைதான் கடவுள், ஆறுதான் கடவுள், சமுத்திரம் தான் கடவுள், மரம் செடிதான் கடவுள், புஷ்பம்தான் கடவுள், அதன் மணம் தான் கடவுள், அழகுதான் கடவுள், பெண்தான் கடவுள், அதன் இன்பம்தான் கடவுள், இயற்கைதான் கடவுள், அத்தோற்றம்தான் கடவுள்” என்பதாக தமக்கே புரியாமல் உளறுவதும், மறுபடியும் “சிவன்தான் முழுமுதற் கடவுள், மற்றபடி விஷ்ணுவும் பிரம்மாவும், அவரது பரிவார தேவதைகள், சைவ சமயம்தான் உண்மைச் சமயம், அதுதான் முக்தி அளிக்க வல்லது” என்பதும் அல்லது “விஷ்ணுதான் முழுமுதற் கடவுள், அதுதான் பரத்துவம் கொண்டது, மற்றவைகள் விஷ்ணுவின் பரிவார தேவதைகள்” என்பதும், “வைஷ்ணவ சமயம்தான் உண்மைச் சமயம், அதில்தான் பரத்திற்கு மார்க்கம் உண்டு” என்பதும், “அச்சிவனையோ விஷ்ணுவையோ முழுமுதற் கடவுளாகக் கொண்டு அக்கடவுள்களையும் அச்சமயங்களையும் பாடினவர்கள்தான் கடவுள் நெறியையும் நிலைமையையும் உணர்த்திய பெரியார்கள், சமயாச்சாரியர்கள்” என்பதுமாக மக்கள் முன் உளறிக் கொட்டி அவர்களது மனதை குழப்பச் சேற்றில் அழுத்துகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களது புரட்டையும் பித்தலாட்டங்களையும் வெளியாக்கி மக்களை குழப்பச் சேற்றிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றுதான் சொல்லுகின்றோம்.

உலகத்தில் கடவுள் என்பது இன்னது என்பதாக மனதில் விவரப்படுத்திக் கொள்ளாமலே கடவுளைப் பற்றிய தர்க்கங்களும் தகராறுகளும் தினமும் நடைபெற்று வருகின்றது. இது இன்று நேற்று ஏற்பட்ட விவகாரமல்ல என்றுங்கூட சொல்லுவோம்.

எனவே மக்களின் பாரம்பரியமானதும் எங்கும் பரவியிருக்கும்படியானதுமான மடமைக்கு இதைவிட வேறு உதாரணம் கிடையாது என்பது நமது அபிப்பிராயம். ஏனெனில் இந்த விவகாரம் பாமர மக்களிடையில் மாத்திரம் நடைபெற்று வருகின்றது என்று சொல்லுவதற்கில்லை. இது பெரும்பாலும் படித்தவன். ஆராய்ச்சிக்காரன், பண்டிதன், பக்திமான் என்கின்ற கூட்டத்தாரிடையேதான் பெரிதும் (இவ்வறியாமை) இடம் பெற்று உரம் பெற்றிருக்கின்றது.

கடவுள் அவசியமா?

நிற்க, சர்வ வல்லமையுள்ள என்று சொல்லப்படுவதான ஒரு “கடவுள்” இருக்கின்றார் என்பதை (அது இன்னது என்று புரியாவிட்டாலும்) விவகாரமில்லாமல் ஒப்புக் கொள்ளுவதாகவே வைத்துக் கொண்டாலும் மனிதனின் வாழ்க்கைக்கு அக்கடவுளின் சம்மந்தமோ வழிபாடோ அவசியமா? அல்லது மனிதனுக்கு சில குணங்களைக் கைக்கொண்டு அதன்படி ஒழுகும் தன்மை அவசியமா என்பதே நமது கேள்வி. அன்றியும் அப்படிப்பட்ட ஒரு “கடவுள்” தன்னை மக்கள் வழிபட வேண்டும் என்றாவது, தனக்கு கோவில் கட்ட வேண்டுமென்றாவது பூசை, அபிஷேகம், தேர், திருவிழா, உற்சவம் முதலியவைகள் செய்ய வேண்டும் என்றாவது ஆசைப்படுமா? அல்லது மக்கள் சில குணங்களைக் கைக் கொண்டு மற்ற ஜீவன்களிடத்தில் இன்ன இன்ன விதமாய் நடந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புமா? என்பதை யோசித்துப் பார்த்தால் ‘கடவுள்’ என்பது வாழ்க்கைக்கு வேண்டுமா வேண்டாமா என்பது விளங்காமல் போகாது. அன்றியும் அச்சர்வ வல்லமை உள்ள சாமிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த இவ்வளவு ஆசாமிகளும் சமயங்களும் வேண்டுமா? என்றும், அந்தச் சாமிகளை இல்லை என்பவர்களுக்கு ருஜுபடுத்த இவ்வளவு வக்கீல்கள் வேண்டுமா என்றும் கேட்கின்றோம்.

இது போலவே ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு விதமாக உலகத்திற்கும் மக்களுக்கும் கடவுளுக்கும் சம்மந்தம் கற்பிக்கப்பட்டிருந்தாலும் புத்த மதம் என்பதில் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கங்களைத் தவிர வணக்கம் என்பதை அம்மதத் தலைவர் ஒரு சிறிதும் வலியுறுத்தியிருப்பதாகக் காணப்படவில்லை.

அன்றியும் அவர் கடவுளைப் பற்றியோ, கடவுளை வணங்குவதைப் பற்றியோ, கடவுள் நெறி உணர்த்திய பெரியார்களை மரியாதை செய்வதைப் பற்றியோ கவலை கொண்டு ஒரு கடுகளவு நேரமாவது செலவழித்திருப்பதாகவும் காணக் கிடக்கவில்லை. அன்றியும் அதைப் பற்றிய வார்த்தைகளையாவது அவர் எங்காவது உபயோகித்திருப்பதாக சொல்பவர்களும் காணக் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட ஒருவரை மதத் தலைவராகவும் அக்கொள்கையை, அம்மதத்தை, அச்சமயத்தை இன்றைய தினம் உலகத்திலுள்ள மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் அதாவது 50 கோடி மக்களுக்கு மேல் தம் மதமாகவும் ஏற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அன்றியும் அப்படிப்பட்ட புத்தரை தங்கள் கடவுள் அவதாரமென்றும் தீர்க்கதரிசி என்றும் பகவான் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிற ஜனங்கள் இந்து மதம் என்பதிலே, சைவ மதம் என்பதிலே, வைணவ மதம் என்பதிலே பல கோடிக்கணக்கானவர்கள் இருப்பதோடு அதற்கு பல ஆதாரங்களும் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதை யாராவது மறுக்க முன்வருகின்றார்களா?

“மனிதனுக்கு ஏதாவது ஒரு மதமோ சமயமோ வேண்டியது அவசியம்” என்று யாராவது சொல்ல வருவார்களானால் புத்த மதம் என்பதும், உலகாயுத மதம் என்பதும், சூன்ய மதம் என்பதும், இயற்கை மதம் என்பதும் மதங்கள் என்று தானே சொல்லப்படுகின்றது. அப்படி இருக்கையில் அம் மதங்களில் ஏதாவது ஒன்றைக் கொண்டவர்கள் பலர் இருக்கலாம். எனவே அது எப்படி குற்றமுடையதாகும். எப்படி பல மதங்களுக்கும் சமயங்களுக்கும் தலைவரும் காலமும் இல்லாமல் இருக்கின்றதோ அது போலவே இம்மதங்களில் சிலவற்றிற்கும் காலமோ தலைவரோ இல்லாமலிருக்கலாம்.

ஆகவே, ஒரு மனிதன் இன்ன மதக்காரனாகவோ இன்ன சமயக்காரனாகவோ, இன்ன கடவுளை வணங்குகிறவனாகவோ இருக்க வேண்டும் என்பதாக கட்டளை இடவும், இன்ன இன்ன மதக்காரனாக இருக்கக் கூடாது என்று நிர்ப்பந்திக்கவும் யாருக்கு உரிமை உண்டு என்று கேட்கின்றோம்.

மனிதனுக்கு மதம் வேண்டும் என்பது அந்தந்த மனிதனின் தனி இஷ்டத்தைப் பொறுத்ததா அல்லது மற்றொருவனுடைய நிர்ப்பந்தமா என்று கேட்கின்றோம்.

‘துறவி’க்கு மதம் ஏது? ‘ஞானி’க்கு சமயம் ஏது? கடவுள் ஏது? ‘வேதாந்தி’க்கு மதம் ஏது? கடவுள் ஏது? சகலத்தையும் துறந்தவர்தானே துறவி? சகலத்தையும் சரி என்று எண்ணுகிறவர்தானே ‘ஞானி’?

“சகலமும் மித்தை, பொய், மாய்கை” என்று எண்ணுகிறவன் தானே ‘வேதாந்தி’ என்பவன்? இவைகளை உலகம் ஒப்புக் கொள்ளுகின்றதா இல்லையா? அங்ஙனமாயின் இம்மூவர்களும் ‘நாஸ்திகர்’களா என்று கேட்கின்றோம், உலகத்தில் ‘துறவி’ ஆவதற்கோ, ‘ஞானி’ ஆவதற்கோ ‘வேதாந்தி’ ஆவதற்கோ எவனுக்கு உரிமை இல்லை என்று கேட்பதோடு எந்த புஸ்தகத்தை படித்துவிட்டு யாரிடம் உபதேசம் பெற்று அல்லது எந்த சமயத்தை ஏற்று எந்தக் கடவுளைத் தொழுது ‘துறவி’யாகவோ, ‘வேதாந்தி’யாகவோ ஆக வேண்டும் என்கின்ற நிர்பந்தமுண்டா என்று கேட்கின்றோம்.

இவ்விஷயங்களை நாம் வலியுறுத்துவதால் பல நண்பர்களுக்கு சற்று மனக்கசப்பு ஏற்படலாம் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் நம் நாட்டின் விடுதலை கண்டிப்பாய் இந்த விஷயங்கள் விளக்கமாவதில்தான் இருக்கின்றதேயொழிய வெள்ளைக்காரரிடமும் பார்ப்பனர்களிடமும் நேரில் முட்டிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை என்றே சொல்லுவோம்.

வெள்ளைக்கார அரசாங்க முறையும், பார்ப்பனர்களின் ஆதிக்கமும் நமது மானத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் தரித்திரத்திற்கும் ஆதாரமாயிருக்கின்றது என்பது சத்தியமானாலும், அவ்வக்கிரமமும் ஆட்சியும் ஆதிக்கமும் இந்த மதம், கடவுள், சமயம் என்பவைகளான மூட கொள்கைகளின் பேரில்தான் கட்டப்பட்டிருக்கிறது என்பது நமது முடிவு. இம்மூடக் கொள்கைகளை வைத்துக் கொண்டு வெள்ளைக்காரர்களையும், பார்ப்பனர்களையும் பூண்டோடு அழிக்க நம்மால் முடிந்து விட்டாலும் மறுபடியும் ‘வெள்ளக்காரர்களும்’ ‘பார்ப்பனர்களும்’ வேறு எங்காவதிருந்தோ அல்லது நமக்காகவே உற்பத்தியாகியோ நம்மை அடிமைகளாக்கி ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் வருவார்கள் என்பதை ஒவ்வொருவரும் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

வெள்ளைக்கார அரசாங்கமோ அல்லது வேறு அன்னிய அரசாங்கமோ இல்லாமல் நம் நாட்டார்கள் என்போர்கள் அரசாண்டு வந்த காலத்திலேயே நாம் அடிமைகளாக, தற்குறிகளாக, தாசிமக்களாக, தீண்டாதார்களாக இருந்து வந்திருக்கின்றோம் என்பதை தயவு செய்து நம்புங்கள் என்று வேண்டிக் கொள்ளுகின்றோம்.

நம்புவதற்கு ஏதாவது கஷ்டமாய் இருந்தால் நம் நாட்டு, நம்மக்களால் ‘சாமுண்டீஸ்வரி’ பேராலும், ‘பத்மநாபசாமி’ பேராலும், ‘கிருஷ்ணசாமி’ பேராலும் ஆளப்படும் மைசூரையும், திருவாங்கூரையும், கொச்சியையும் தயவு செய்து சற்று திரும்பிப் பாருங்கள் என்று வேண்டிக் கொள்ளுகின்றோம்.

ஆட்சி முறை கொடுமையும், பார்ப்பன ஆதிக்கமும் வெள்ளைக்கார அன்னிய அரசாங்கத்தைவிட உள்நாட்டு மக்களால் ஆளப்படும் சுயராஜ்ய அரசாங்கத்தில் அதிகமா? கொஞ்சமா? என்பதை கவனித்தால் வெள்ளைக்காரரும் பார்ப்பனர்களும் தாங்களாகவே தங்கள் பலத்தால் அக்கிரமங்களை செய்கின்றார்களா? அல்லது இந்த மதமும், கடவுளும், மதவெறியும் இவ்வித அக்கிரமங்கள் செய்ய இடம் கொடுக்கின்றதா? என்பது சுலபத்தில் விளங்காமல் போகாது என்றே எண்ணுகின்றோம்.

எனவே நம் நாட்டிற்கு இப்போது அவசியமாக வேண்டியது என்னவென்றால், மூடநம்பிக்கை ஒழிய வேண்டும்; அறிவுக்கு சுதந்திரமும், விடுதலையும் ஏற்பட்டு அது வளர்ச்சி பெற வேண்டும்; சுயமரியாதை உணர்ச்சி ஏற்படவேண்டும். இம்மூன்றும் ஏற்பட வேண்டுமானால் மதமும், சாமியும், சமயாச்சாரியார்களும் சந்திக்கு வந்தே தீர வேண்டுமேயல்லாமல் இதற்கு வேறு பர்த்தியோ, ராஜியோ இல்லை யென்றே சொல்லி இதை முடிக்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 01.07.1928)