சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்களுக்கு இந்த நாட்டின் வளங்களைப் பங்கிட்டுக் கொடுப்பதற்கான வாய்ப்புகளையும், திட்டங்களையும் நாம் உருவாக்க வேண்டும். இந்த தேச வளங்களின் பயன்பாட்டில், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் -மேற்கூறிய வார்த்தைகளை, தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இதனை தொடர்ந்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், அரசு சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இருப்பதாக அறிவித்தார். தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் முஸ்லிம்களுக்கு இந்த வார்த்தைகள் பெரும் நம்பிக்கையாக அமைந்தன.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் பரிவாரங்கள் இதற்கு எதிராகப் பெரும் ஓலமிட்டன. இவை ஜின்னாவின் அடிச்சுவட்டில் செல்வது போன்றது என அவர்கள் குற்றம் சுமத்தினர். சச்சார் கமிட்டி அமைக்கப்பட்டதே வீண் வேலை, இது நாட்டு நலனுக்கு எதிரானது என்று பா.ஜ.க மிக வெளிப்படையாகக் கூறியது.

சச்சார் குழு தனது அறிக்கையை நவம்பர் 2006 இல் தாக்கல் செய்தது. மிகத் தெளிந்த ஆய்வுக்குப் பிறகு இந்த சமூகத்தின் சராசரி வாழ்க்கைத் தரத்திலிருந்து முஸ்லிம் சமூகம் வெகு தொலைவு பின் தங்கியுள்ளது என்பதை, சச்சார் குழு தன் அறிக்கையில் துல்லியத்துடன் முன்வைத்தது. அரசுப்பணி, வங்கிக் கடன், அரசியல், இயங்கியல் எனப் பல தளங்களிலும் முஸ்லிம்களின் சதவிகிதம் மிகக் குறைவாகவே உள்ளது. சிறைச்சாலைகள் தவிர்த்து சமூகத்தின் மற்ற அனைத்துத் தளங்களிலும் முஸ்லிம்கள் மிகக் குறைவாகவே காணப்படுகிறார்கள். 1982இல் அமைக்கப்பட்ட கோபால்சிங் கமிட்டியும் இதே போன்று தனது அறிக்கையை முன்வைத்தது.

ராமன் கோயில் பிரச்சனை தேசிய கவனத்தைப் பெற்று வந்த நேரம், கோபால் சிங் அறிக்கை உலர்ந்து போனதாகிவிட்டது. முஸ்லிம் சமூகத்தை கலவரங்கள், குண்டு வெடிப்புகள் தெடர்புடைய சமூகமாகவே இங்கு ஊடகங்கள் இடையறாது காட்சிப்படுத்தின. அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் முகமாக சமவாய்ப்பு கமிஷன் தொடங்கப்பட்டு, தேசிய தகவல் வங்கியுடன் அதன் செயல்பாட்டை இணைத்து, இந்த சமூகத்தின் சமூக இருப்பை பலப்படுத்த வேண்டும் என அக்குழு பரிந்துரைத்தது.

அரசு தான் உறுதியளித்த படி செயல்படவில்லை. இடஒதுக்கீட்டைத் தவிர்த்து வேறு எந்த நடவடிக்கையும் செயல் வடிவம் பெறவில்லை. அரசாங்கம் கடந்த பல பத்தாண்டுகளாக வழங்கி வந்த உதட்டுச் சேவை போலவே இதுவும் வெற்று வார்த்தைகள் தானோ என்ற அய்யம் எழுகிறது. பா.ஜ.க. -காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் முஸ்லிம்கள் விஷயத்தில் ஒன்று போலவே செயல்படுகின்றன.

காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு பணிவிடை செய்து அவர்களது வாக்குகளைப் பெற உள்ளதாக வலதுசாரி இந்துக்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆனால், இது போல தொடர்ந்து முஸ்லிம்கள் வாக்கு வங்கிகளாகக் கருதப்படும் போக்கு பொதுப் புத்தியில் கூட ஆழப்பதிந்துள்ளது. ஆனால் முஸ்லிம்களுக்கு எந்தப் பயனும் போய் சேர்ந்தபாடில்லை.

கடந்த 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து முஸ்லிம்கள் தான் பிரிவினைக்கு காரணம் என பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டு, அதன் வழியே அச்சமூகத்தின் மீது எதிர்மறை அடையாளம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிவினைக்கு உண்மையில் காரணமாக இருந்தவர்கள் இந்து -முஸ்லிம் சமூகத்தின் வசதி பெற்ற மதவாதிகளே. ஆனால், முஸ்லிம்கள் மீது தான் எதிர்மறை அடையாளம் சுமத்தப்பட்டது. ஆனால் அவர்களைப் போலவே வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகமான தலித்துகளின் அடையாளம் நேர்மறையாக இன்று மாறியுள்ளது. அவர்களுக்கான இடஒதுக்கீடு கூட ஓரளவு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஆனால், அவர்கள் விஷயத்தில் கூட இந்து வலது சாரிகளும் அவர்களின் அடியொற்றுபவர்களும் இடஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக முடக்கவே முயற்சி செய்தனர்.

பார்ப்பனிய சாதியப் படிநிலையை நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பம். நவீன கட்டுமானங்கள் மீது எந்த மதிப்பும் இந்து மத அமைப்புகளுக்கு கிடையாது. மண்டல் கமிஷனுக்கு இவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ‘கமண்டலங்'கள் ஏந்தி தெருவுக்கு வந்தார்கள். மண்டலை தொடர்ந்து பாபர் மசூதியை தகர்த்தார்கள். சமத்துவம் நோக்கி இட்டுச் செல்லும் எந்த சமூக மாற்று நடவடிக்கையையும் ஆர்.எஸ்.எஸ். அங்கீகரித்ததில்லை. அது போலவே முஸ்லிம்களுக்கான எல்லா திட்டங்களையும் தடுத்தார்கள். அவர்களது பிரச்சாரம் மிகவும் எளிமையானது: முஸ்லிம்கள் தங்கள் நலன்களுக்காகவே பாகிஸ்தானை ஏற்படுத்தினார்கள்; நாம் தொடர்ந்து சலுகைகள் வழங்கினால், இன்னொரு பாகிஸ்தானை அவர்கள் ஏற்படுத்துவார்கள்.

ஜனநாயகத்தில் உள்ள சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய விஷயங்கள் சொல்லளவில் மட்டுமே இருக்கின்றன. ஆனால், அதனை நீங்கள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளாக மாற்றினால், சமூகத்து விளிம்புநிலை மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை உருவாக்கினால் உடனே வலதுசாரிகள் தங்கள் பணியை தொடங்கி விடுவார்கள். அமெரிக்காவை போன்ற வளர்ச்சி பெற்ற ஜனநாயகக் கட்டமைப்புகளில் கூட அதே நிலைதான். அங்கும் ஆப்பிரிக்க -அமெரிக்கர்களுக்கான சலுகைகள் அறிவிப்பை அங்குள்ள வலதுசாரிகள் எதிர்த்தார்கள். வலதுசாரிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் மதத்தின் பெயரால் தான் நடைபெறுகின்றன. அவர்களுக்கு ஜனநாயகம் என்பது கூட ஏற்புடைய கருத்தாக்கம் அல்ல. அவர்கள் ஜனநாயகத்தைப் பெயரளவில் நடைமுறைப்படுத்திக் கொண்டே, இந்து ராஷ்டிரத்தை இங்கு பிரகடனப்படுத்தத் துடிக்கிறார்கள். அங்கு புதிய விழுமியங்கள், சமூக உறவுகள் என அனைத்தும் மனு ஸ்மிருதியின் அடிப்படையில் இருக்கும். அதனால்தான் ஆக்கப்பூர்வமான சமூக மாற்று நடவடிக்கை எதையும் அவர்களால் செறிக்க இயலவில்லை.

இடஒதுக்கீட்டின் பயனாக தலித்துகளின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் சில பத்தாண்டுகளாகப் பார்த்து வருகிறோம்.அதனால் தான் அண்மையில் கூட சங்பரிவாரங்கள், இடஒதுக்கீட்டை மிகுந்த வன்மத்துடன் எதிர்த்து வருகிறார்கள். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்த வரை, காலம் காலமாக அவர்களது நிலை மோசமாக இருந்தது. மேலும் அண்மையில் அது மிக மோசமாக, பரிதாபகரமாக மாறியும் வருகிறது.
சமூக மாற்றம் தொடர்புடைய சமரசமற்ற அழுத்தமான நடைமுறைகளை இன்றைய சூழல் கோரி நிற்கிறது. சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கு உதவுவது எந்த வழியிலும் மதவாத நடவடிக்கையாகக் கருதுவது ஏற்புடையது அல்ல.

சமத்துவத்தை நோக்கிய ஜனநாயக நடைமுறைகள் அனைத்தும் ஊக்கம் பெற வேண்டும். தொடர்ந்து நடத்தப்பட்ட பல ஆய்வுகள் இங்குள்ள சூழலை துல்லியமாய் விவரிக்கிறது. பஜ்ரங் தளம், வி.எச்.பி., வன்வாசி கல்யாண் ஆஸ்ரம் என இந்த அமைப்புகள் அனைத்தும் ஒரிசாவில் பழங்குடியினர் மத்தியில் பல அவதூறுகளை பரப்பி வருகின்றனர். பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் பழங்குடியினர் பலியாக்கப்படுகிறார்கள். அழுத்தமான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே இங்கு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த இயலும்.
Pin It