ஆர்.பி. சிறீகுமார், குஜராத் இனப்படுகொலைகள் நிகழ்ந்த போது, காக்கி உடையணிந்து உண்மையை உரத்து அறிவித்த அம்மாநில உளவுப் பிரிவின் தலைவர். குஜராத் உள்துறை செயலர், அரசு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியா மற்றும் பலரும் மிரட்டியும் எதற்கும் அஞ்சாதவர். அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகார வர்க்கம், எவ்வாறு தங்கள் சொந்த நலன்களுக்காக முஸ்லிம் எதிர்ப்பு கதையாடல்களை கட்டவிழ்த்துவிட்டது என்பதை அவர் ‘தெகல்கா’ ஆங்கில இதழில் ஹரிந்தர் பவேஜாவுக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார்.

நீங்கள் குஜராத் காவல் துறையின் அங்கமாக இருக்கிறீர்கள். மோடியால் நேரடியாக பாதிக்கப்படுகிறீர்கள். அங்கே நீதி எந்த அளவுக்கு மோசமாகப் போனது, சார்புடன் செயல்பட்டது?

இன்றும் அங்கு நீதி மிகுந்த சார்புடன் தான் இயங்குகிறது. அது, அதிகார மட்டத்திலிருந்தே அவ்வாறு உள்ளது. குற்றவியல் நீதித்துறையின் தொடக்க புள்ளியான நிலைய அதிகாரியிலிருந்தே அது சீரழிந்துள்ளது. நீங்கள் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யும் போதே தோல்வி தொடங்குகிறது. இதனை நான் பல அறிக்கைகளின் வாயிலாக அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளேன். முதல் அறிக்கையை ஏப்ரல் 24, 2002இல் அளித்தேன். இதனை நானாவதி ஷா கமிஷனுக்கு அளித்த எனது மனுவிலும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் சென்று முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய முற்படும் போதே அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் பார்வைகளைப் பதிவு செய்யாமல், அதிகாரிகள் நீங்கள் விட்டு விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என விஷயங்களை திரிக்கத் தொடங்குகிறார்கள். அடுத்ததாக சம்பவத்தின் மூர்க்கத்தை திரிக்கிறார்கள். 2002இல் கலவரத்தை வழிநடத்திய இந்துத்துவ தலைவர்களின் பெயர்களை பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட முற்படும்போது, அவர்கள் காவல் துறையினரால் மிரட்டப்பட்டார்கள். முதலில் காவல் துறை இந்த திரிபு வேலையை தொடங்குகிறது. அரசு வழக்கறிஞர்கள் அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள்.

இந்த அரசு வழக்கறிஞர்கள் அனைவரும் இந்துத்துவா அமைப்புகளைச் சார்ந்தவர்கள். வி.எச்.பி.யின் பொறுப்பாளர்கள் தான் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், இவர்களின் பெயர்களை அப்போதைய மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இது பெரும் வெட்கக்கேடு. 25 - 35 வயதுக்கு உட்பட்ட அய்.ஏ..எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் தான் இந்த வி.எச்.பி. பொறுப்பாளர்களைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். குஜராத் அரசின் சட்டத்துறை இப்படிப்பட்ட நபர்களை தேர்வு செய்துள்ளது. நாளை ஒருவேளை சட்ட அமைச்சர் அசோக் பட்டை பார்த்து யாராவது கேள்வி எழுப்பினால், அவர் நேரடியாக, தெளிவாக பதிலளிப்பார். மாவட்ட ஆட்சியர்கள் இந்தப் பெயர்களைப் பரிந்துரை செய்யும் பொழுது எங்களால் என்ன செய்ய முடியும்? இந்திய சட்டத்துறை வரலாற்றில் முதன் முறையாக, உச்சநீதிமன்றம் தலையிட்டு சட்ட நடைமுறையின் குளறுபடிகளின் காரணமாக 2000 வழக்குகளை மறு விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் அரசாங்கத்தின் தாள லயத்திற்கேற்ப நடனமாடுகிறார்கள் என்பதை எப்படி விளக்குகிறீர்கள்? அவர்கள் கடமை உணர்வின் நிலை என்ன?

இது பதிலளிக்க முடியாத ஒரு பெரிய கேள்வி. பிப்ரவரி 27, 2002 அன்று மாலை (சபர்மதி ரயில் எரிப்பு கோத்ராவில் நிகழ்ந்த அன்று) மோடி ஒரு கூட்டத்தை நடத்தினார். அதில் டி.ஜி.பி.யும் அகமதாபாத் காவல் துறை ஆணையரும் பங்கேற்றனர். அங்கு மோடி இவ்வாறு கூறினார், “இந்துக்களின் கோபம் மூன்று நாட்களுக்கு தணியட்டும்.” கமிஷனுக்கு அளித்த எனது மூன்றாவது மனுவில் இதனை குறிப்பிட்டுள்ளேன். குறுக்கு விசாரணையின் போது நானாவதி கமிஷனுக்கு நான் தகவல்கள் அளிப்பதை அவர்கள் தடுத்தார்கள். தொடக்கத்திலிருந்தே நான் ஒட்டுமொத்த சம்பவங்களின் பதிவேட்டை பராமரித்து வந்தேன். அந்தப் பதிவேட்டின் எழுத்துகளை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி, அவை எழுதப்பட்ட தேதியை கண்டுபிடிக்குமாறு நானே கேட்டுக் கொண்டேன்.

என்னையும் உண்மை கண்டறியும் சோதனைகளுக்கு உட்படுத்துமாறு (Narco Analysis & Brain Mapping Test) அவர்களிடம் சவால் விடுத்தேன். கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது தான் இது போன்ற சோதனைகள் நிகழ்த்தப்படும். இங்கே நாம் ஓர் இனப்படுகொலையைப் பற்றி பேசுகிறோம். 2000 பேர் அழித்தொழிக்கப்பட்ட ஒரு மாபெரும் இனப்படுகொலை. ஏன் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது இத்தகைய உண்மை அறியும் சோதனைகள் நிகழ்த்தப்படவில்லை? எனது பதிவேட்டில் இடம் பெறுகிறவர்கள், மோடி மற்றும் இந்த ‘களங்க நடவடிக்கை’யில் வாக்குமூலம் அளித்தவர்கள் என இவர்கள் அனைவரும் தங்களை இந்த சோதனைக்கு உட்படுத்த ஏன் முன்வரக்கூடாது? ஆனால் ஒரு எம்.பி.யோ அல்லது ஒரு மக்கள் தலைவரோ கூட இதனைக் கோரவில்லை.

சோதனையை செய்யும்படி யாரிடம் கோரினீர்கள்? அதனை எழுத்துப் பூர்வமாக அளித்துள்ளீர்களா?

கமிஷனுக்கு அளித்த மூன்றாம்/நான்காம் மனுக்களில் அது உள்ளது. அரசாங்கத்தின் நலன்களுக்கு எதிராக இத்தகு செயல்களில் ஈடுபடக்கூடாது என எனக்கு மூன்று மணி நேர அறிவுரையும் மிரட்டலும் விடுத்தார் உள்துறை செயலர். இதற்கு மேல் எத்தகைய வீழ்ச்சி உங்களுக்கு வேண்டும்? அனைத்து அரசு ஊழியர்களும் நானாவதி - ஷா கமிஷனுக்கு அனுசரணையால் ஒத்துழைக்க வேண்டும் என துணை விதிகளை அரசாங்கமே விதித்த போதும், அதனை எதிர்த்து தகவல்களை தாக்கல் செய்த ஒரே நபர் நான் தான். அதிகார வர்க்கத்திற்கும் அரசியல் தலைமைக்கும் பாலமாய் விளங்குகிற கேபினட் செயலர், இதுவரை ஒரு மனுவைக்கூட தாக்கல் செய்யவில்லை.

அவர் வெளியே வந்து ஒரு முறை சொல்லட்டும், இந்த இனப்படுகொலைக்கும் முதல்வருக்கும் தொடர்பே இல்லை என்று! அவர் அவ்வாறு செய்யமாட்டார், அவர் பயப்படுகிறார். காவல் துறையினரில் என்னைத் தவிர வேறு யாரும் இவ்வாறு அறிக்கைகளைத் தாக்கல் செய்யவில்லை. உங்கள் அதிகாரிகளை அறிக்கைகள் தாக்கல் செய்யவிடாமல் தடுக்கிறீர்கள் என்றால், இது எத்தகைய செயல், இது நமக்கு எதைத் தெரிவிக்கிறது?

கமிஷனுக்கான அரசு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியா ‘தெகல்கா’ பதிவுகளில் உள்ளார். அவர் இப்பொழுதுதான் எழுதப்பட்ட பிரதியை வாசித்ததாக கூறுகிறார். அவர் உங்களை பலவந்தப்படுத்த முயன்றாரா?

மிகச்சரியாக சொன்னீர்கள். அவர் எனக்கு விளக்கமளித்த போது சில தருணங்களில் என்னை மிரட்டவும் செய்தார். அவர் சொன்னார், “இங்கே பாருங்கள் சிறீகுமார், நீங்கள் அரசு தரப்பு சாட்சியம். இந்த கமிஷனின் விசாரணையைப் பொருத்தவரை அப்படி ஒரு அரசு தரப்பு சாட்சியமே கிடையாது. இது கிரிமினல் வழக்கு நடைமுறை அல்ல.'” என்னைப் போல் காவல் துறையில் 34 ஆண்டுகள் பணி புரிந்த ஒருவருக்கு கிரிமினல் வழக்கின் அடிப்படை நடைமுறைகள் தெரியும் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை.

எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், நான் பெரும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அவர் மிரட்டினார். நான் கமிஷனுக்கு சென்று அறிக்கை அளித்தால் பெரும் பிரச்சனைகள் உருவெடுக்கும் என்றார்கள். நான் மிரட்டப்பட்டபோதும் கமிஷனுக்கு நான்கு அறிக்கைகள் அளித்தேன். காவல்துறை எப்படி சார்புடன் இயங்கியது மற்றும் எப்படி நிவாரண முகாம்கள் பலவந்தமாக மூடப்பட்டு, அமைதியான சூழல் திரும்பியது போல் எவ்வாறு பொய் தோற்றம் உருவாக்கப்பட்டது என்பது போன்று ஏராளமான விவரணைகளுடனான தகவல்கள் என் அறிக்கைகளில் உள்ளது.

இது, ஆகஸ்ட் 2002இல் தேர்தல் ஆணையம் லிங்டோவின் தலைமையில் குஜராத் வந்த நேரம். சூழ்நிலைமைகள் பற்றிய முற்றிலும் பொய்யாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையுடன் அரசாங்கம் தயாராக இருந்தது. அந்த நேரம் நான் ஓர் அறிக்கை தயார் செய்து, அதில் 154 தொகுதிகளில் பாதிப்பு உள்ளது என்பதை எடுத்துரைத்தேன். தலைமைச் செயலர், எவ்வாறு நான் அரசாங்கத்தின் பார்வையிலிருந்து இவ்வாறு மாற்றுக் கருத்து கொள்ள இயலும் என கேள்வி எழுப்பினார். நான் மாவட்ட அதிகாரிகளிடமிருந்து பெற்ற அறிக்கைகளை தொகுத்தளித்துள்ளேன் என்று தெரிவித்தேன். பின்னர் ஆகஸ்ட் 16, 2002 அன்று வெளியிடப்பட்ட ஆணையில் தேர்தல் ஆணையம் என் அறிக்கையின் மூன்று பகுதிகளை சுட்டிக்காட்டி, இது அரசாங்கம் அளித்த அறிக்கை பொய்யென நிரூபிப்பதாகக் கூறி தேர்தலை தள்ளி வைத்தது.

எப்படி உள்துறை செயலர், தலைமைச் செயலர் போன்ற பெரிய பதவிகளில் உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு அடிபணிகிறார்கள்?

நாம் காணும் இன்றைய அதிகார வர்க்கத்தின் போக்கு மிகவும் மோசமானது. அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த இவர்கள் அரசியல்வாதிகளை எதிர்பார்க்கும் தன்மையுடைய கொத்தடிமைகளாக மாற்றுவதன் மூலம் காரியங்களை சாதிக்கிறார்கள். உங்களுக்கு இட்லி பிடிக்கும் என்றால் நான் இட்லி அவித்து தருகிறேன், தோசை அல்ல. இப்போது நீங்கள் என்னையும், இட்லி அவித்து தர மறுக்கும் எனது நண்பரையும் எப்படி மதிப்பிடுவீர்கள்? ஏற்கனவே தங்களின் பணி உயர்வு நிமித்தமாக இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை வளர்ப்பது கச்சிதமாக நடைபெற்று வருகிறது.

இது தவிர, அதிகார வர்க்கம் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கிடையே காக்காய் பிடித்தல் நடக்கிறது. இவை எல்லாம் நேரடி பலன் தரக்கூடியவை. உங்களுக்கு வெளிநாட்டுப் பணி, நல்ல துறையில் பொறுப்பு, அதுவும் செல்வாக்கு மிகுந்த துறையில், அங்கு தான் அதிக பணம் ஈட்ட இயலும். பணி இட மாற்றம், பணி நியமனம், தற்காலிக வேலை நீக்கம், வெளிநாட்டுப் பொறுப்பு, பணி உயர்வு, பணி ஓய்வுக்குப் பின் பொறுப்பு என இதுபோன்ற வசதிகளின் மூலம் அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்திற்கு அழுத்தமான சமிக்ஞைகளை வழங்குகிறார்கள்.

இதனை எவ்வாறு சீர்படுத்துவது?

அதிகார வர்க்கத்தின் மீதான எனது நம்பிக்கைகள் பொய்த்து விட்டன. மக்கள் தான் முன் வந்து இது போன்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அதிகாரிகளை அப்புறப்படுத்த வேண்டும். இங்கு நடைபெறுவது மிகவும் கொடிய கிரிமினல் செயல். இதனை ஜெர்மனியின் நாஜிக்களுடன் தான் ஒப்பிட்டாக வேண்டும். இத்தனை பெரிய கிரிமினல் நடவடிக்கையில் ஓர் அதிகாரியாவது தண்டிக்கப்பட்டாரா? இல்லை, அனைவருமே கவுரவிக்கப்பட்டுள்ளனர்! முன்னாள் தலைமைச் செயலர் ஜி.அப்பாராவ் அரசியல் பாவைகூத்து பொம்மையாகவே உருமாறிப்போனார். அவருக்கு தலைமைச் செயலரின் சம்பளத்துடனான ஆறு ஆண்டு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகப்படியான சம்பளம், அதிகப்படியான பலன்கள். அவர்தான் தற்போது மின் வாரியம் சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் நீதி ஆணையர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்கூட அவரது பணி தொடரும்.

காவல் துறை சீர்த்திருத்தங்கள் உதவுமா?

காவல் துறை சீர்திருத்தங்கள் சில பயன்களைத் தரும். இருப்பினும் நாம் கோருவது எண்ணங்களின் சீர்திருத்தமே. உளவுத் துறையில் நியமிக்கப்படும் அய்.பி.எஸ். அதிகாரிகள் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என்பது அரசாங்க விதிமுறை. ஆனால் நான் அய்ந்து மாதங்களில் பணி மாற்றம் செய்யப்பட்டேன். முதல்வர் அவர்களின் வன்மம் நிறைந்த மதவாத உரையைப் பற்றி நான் அரசாங்கத்திற்கு அறிக்கை அளித்தேன். வேறு வழியின்றி அரசு அதனை சிறுபான்மையினர் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டியிருந்தது. அந்தப் பேச்சுக்காக அல்க்யு பதம்சே (Alyque Padamse) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். எந்தப் பலனும் கிட்டவில்லை. மக்களிடமிருந்து மாற்றம் வர வேண்டும். அவர்களிடம்தான் அதிகாரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு உள்ளது.

தமிழில் : அ. முத்துக்கிருஷ்ணன்

Pin It