‘தலித் முரசு' கடந்த சில மாதங்களாக மிகவும் தாமதமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. காரணம், வெளிப்படையானதுதான். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ‘முதல் உதவி' கோரிக்கையை முன்வைத்துப் பல்வேறு வகையிலும் முயன்று ஏறக்குறைய தோல்வியையே சந்தித்தோம். மாவட்டம்தோறும் நடைபெற்ற வாசகர் சந்திப்புகளின் மூலம் புதிய ஆர்வலர்களைப் பெற்றாலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 வாழ்நாள் கட்டணங்களைப் பெறுவது என்பது, இன்றுவரை கானல் நீராகவே இருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் விற்கப்படும் இதழ்களின் விற்பனைத் தொகை, விளம்பரங்கள், நன்கொடைகள் என அனைத்தும் மிகத் தாமதமாக வந்தடைவதால், இதழ் தாமதமாக வெளிவருவதும் தவிர்க்க இயலாததாகிறது. நமக்கென நிலையான நிதி ஆதாரம் இல்லை. இச்சூழலில் ஒவ்வொரு இதழுக்குமான அச்சு மற்றும் நிர்வாகச் செலவை ஈடுகட்டுவதில் தொடர்ந்து சிக்கலை சந்திக்கிறோம்.

அம்பேத்கர் - பெரியார் கொள்கையில் கிஞ்சித்தும் தடம் புரளாமல் 12 ஆம் ஆண்டை எட்டும் தருணத்தில், பெரும் நிதிச்சுமை எம்மை அழுத்துகிறது. சமூக மாற்றத்திற்காக – சாதி ஒழிப்புக்காகப் போராடும் ‘தலித் முரசு'க்கு வாசகர்களும், சமூக ஆர்வலர்களும் தங்களின் ஆதரவை விரைந்து நல்கும்படி மீண்டும் கோருகிறோம்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், தீண்டாமையைக் கடைப்பிடிப்பதால்தான் குரலற்றவர்களின் குரலாக ‘தலித் முரசு' தனது பயணத்தைத் தொடங்கியது. தலித் கருத்தியலுக்கான தேவை மென்மேலும் அதிகரித்து வரும் நிலையில், வாசகர்கள்/ஆர்வலர்கள் மற்றும் தோழமை வட்டங்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது. ‘கவர்ச்சிகர அரசியலை' நோக்கிதான் பலரும் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் எந்த அரசியலுக்கும், இயக்கச் செயல்பாட்டுக்கும் அடிப்படை கருத்தியல் அல்லவா? அந்தக் கருத்தியல் ஆயுதத்தைக் கூர்தீட்ட தோள் கொடுப்போர் பல்கிப் பெருக வேண்டும்.

எங்களின் லட்சியப் பயணம் தடைபடாமல் இருக்க, எதிர்ப்படும் நிதி சிக்கல்களைத் தீர்க்கும் ‘முடிவை நோக்கி'ப் பயணமாகிறோம். அது ‘நல்ல முடிவாக' இருக்குமா என்பது தங்களின் ஆதரவைப் பொறுத்ததே!

- ஆசிரியர் குழு
Pin It