வெள்ளை ரவி, குணா மோதல் சாவுகள்?
விலை ரூ.30

"நாங்கள் பேச மறுத்தால், இன்னும் அதிகமாக தமிழகத்தின் காவல் துறையினர் தங்களின் கட்டுக் கதைகளைத் தொடர்வார்கள். சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வார்கள். இன்று ‘குற்றவாளிகள்' என்று கருதப்படும் மனிதர்களுக்குதானே இது நடக்கிறது என்று நாம் பேசாமல் இருந்தால், ஒரு நாள் சாதாரண மனிதர்களுக்கும் இது போல் நடப்பது அன்றாடத்தின் ஒரு பகுதியாகி விடும். அப்போது பேசுவதற்கு ஒருவருமே இருக்க மாட்டார்கள்.''

பக்கங்கள் : 66, வெளியீடு :மக்கள் கண்காணிப்பகம்,
6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை 625 002 பேசி : 0452 2539520

அமெரிக்க உடன்பாடு : அடிமை சாசனம்
விலை ரூ.25

"அமெரிக்காவின் கோரமுகம் சுண்டைக்காய் நாடுகளுக்குக்கூட தெரிகிறது. அதனால்தான் அதன் காலடிகளில் கட்டுண்டு கிடந்த தென் அமெரிக்க நாடுகள், ஒவ்வொன்றாய் ஒதுங்கிச் செல்கின்றன. ஆனால், மன்மோகன் சிங் அரசிற்கு மட்டும் அந்த முகம் பால்வடியும் முகமாகத் தெரிகிறது. ஒரு மெழுகுவர்த்தியின் அக்கினிக் குஞ்சில் ஆயிரம் விளக்குகளையும் ஏற்றலாம்; வீட்டையும் கொளுத்தலாம். அமெரிக்காவோடு மன்மோகன் சிங் அரசு செய்யத் துடிக்கும் அணுமின் உடன்பாடு, இந்திய வீட்டைக் கொளுத்துவதற்கான அக்கினிப் பிரவாகமாகும். ''

ஆசிரியர் : சோலை, பக்கங்கள் : 88, வெளியீடு : தணல் பதிப்பகம், 39/13, ஷேக் தாவூத் தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, பேசி : 044 65484699

ஏழு தலைமுறைகள்
விலை ரூ.50

"ஏழு தலைமுறைகள்' -கடந்த 120 ஆண்டு காலத்தில் உலகத்தையே குலுக்கிய இதுபோன்ற நாவல் வேறெதுவுமே இல்லை. இது, இரண்டு கண்டங்களின், இரு இனத்தவரின், இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை! வெள்ளையர்கள் கொடுப்பவர்களாகவும் கருப்பர்கள் பெற்றுக் கொள்பவர்களாகவும் இருக்கும் நிலைமை ஒழிந்து, இருவரும் சமப் பங்காளிகளாக இருக்கும் அமைப்புக்காக அமெரிக்கக் கருப்பினம் போராடிக் கொண்டிருக்கிறது. ''

ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி, பக்கங்கள் : 336, வெளியீடு : சவுத் விஷன், 251 (132), அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை 86

உலகத் தலைவர் பெரியார்
விலை ரூ.125

"திராவிடர் என்ற சொல் புதிதல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த படித்தறிந்த சிலர் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டி 1892 ஆம் ஆண்டிலேயே ‘திராவிட ஜனசபை' என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார்கள். 1913 ஆம் ஆண்டிலேயே ‘சென்னை திராவிடச் சங்கம்' என்றே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. திராவிடர் என்கிற சொல்தான் ஆரியர் அல்லாதவர் என்பதற்குச் சரியானது. வரலாற்று ரீதியிலும் பொருத்தமானது என்பதை தந்தை பெரியார் தொடர்ந்து வலியுறுத்தினார்.''

ஆசிரியர் : கி. வீரமணி, பக்கங்கள் :384,பெரியார் திடல், 50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை-7,
பேசி : 044 26618163

கோயில் நுழைவுப் போராட்டங்கள்
விலை ரூ.120

"திராவிடர் இயக்கம் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தியதற்கும், காங்கிரசு மற்றும் இந்து மகாசபை கோயில் நுழைவை ஆதரித்ததற்கும் பெரிய வேறுபாடு உண்டு. திராவிடர் இயக்கம் இந்து மதத்தில் உள்ள வர்ணத்தை ஒழிக்கப் பாடுபட்டது. சாதியும், மதமும் ஒழிந்தால் தான் தீண்டாமை ஒழியும் என்பதைப் புரிந்துகொண்டு போராடியது. காங்கிரசும் இந்து மகாசபையும் இந்து மதத்தின் கொடுமை தாங்க முடியாமல் ஆதிதிராவிடர்கள் வேறு மதத்திற்குப் போய்விடுவார்கள் என்று அஞ்சி, அம்மக்களை இந்து மதத்திற்குள் அடைத்து வைக்கவே பாடுபட்டது.''

ஆசிரியர் : வாலாசா வல்லவன், பக்கங்கள் : 264, வெளியீடு : தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம், 14/12, மியான் முதல் தெரு, சேப்பாக்கம், சென்னை 600 005,
பேசி : 94443 21902

ரெட்டியூர் பாண்டியன்
விலை ரூ.25

"போலிசின் துப்பாக்கி குண்டிற்குப் பலியான பாண்டியனின் இறப்பு, ரெட்டியூர் கிராமத்தோடு அல்லது குருங்குடி கிராமத்தோடு மறைந்து போகிற இறப்பு அல்ல. அது, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள பறை இழிவை எதிர்ப்பதற்கான வரலாற்று அடையாளம். ஆகவே, அந்த வரலாற்றுப் போராட்டத்தைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் அவசரமும் தற்போது ஏற்பட்டுள்ளது.''

ஆசிரியர் : பூவிழியன், பக்கங்கள் : 56, வெளியீடு : தலித் விடுதலைக்கான மனித உரிமை அமைப்பு, 203/1, ஜவான் இல்லம், வெங்கடேஸ்வரா நகர், மயிலாடுதுறை 609 118 பேசி : 04364 251216
Pin It