தவறான ஒருவரைத் தூக்கிப் பிடித்து அவர்கள் என்ன அட்டூழியம் செய்தாலும் கண்மூடித்தனமாக முட்டு கொடுத்துத் தாங்கிப் பிடிப்பவர்களைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும் – “இன்னும் அக்கொடியவரைப் பற்றி முழுதாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். புரிந்து கொள்ளும்போது தமது மடமையை உணருவார்கள்”. புரிந்து கொள்வதற்கு ஏதுவாக ஒரு சூழலில் கனமான ஆதாரத்துடன் அந்த இலட்சிய மனிதர்(!) வசமாகச் சிக்குவார்.
அன்று…. அன்று…. அன்று அந்த ஆதாரங்களையும் குற்றச்சாட்டுகளையும் ஒரே நொடியில் முற்றிலும் பொய்யெனத் தூக்கிக் கடாசி யாரும் யோசித்திராத புது விதமான (அ)நியாயத்துடன்(!) வந்து நமது தலையில் இடியை இறக்குவார்கள், மிலேச்சர்கள். தவறு செய்தவர்தான் ஒன்றுமே செய்யாதது போல் மானமின்றி வாயில் மின்னல் கீற்றுகளோடு வலம் வருவார். சுற்றியிருப்பவர்களும் அவரை இடித்துரைத்து கொஞ்சமேனும் எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்று நினைத்தால் அக்கூட்டம் அதற்கு மேல் தம் பற்வரிசையின் அழகைக் காட்டியவாறே குழைந்து குழைந்து செல்லும். இக்கண்றாவியைக் குடும்பங்களில் சகஜமாகப் பார்த்திருப்போம். குடும்பங்களால் ஆனதுதானே சமூகம்? எனவே பொதுவெளியில் தவறான தலைவர்களும் அவர்களது அடிவருடிகளும் பெருகிவிட்டதும் கூட வீடுகளில் நடக்கும் மாதிரிதானே(model)?
“அப்பட்டமா தப்புன்னு நிரூபணம் ஆன பிறகும் எப்படி நம்ப மறுக்கிறார்கள்?” என்பது பல காலமாக எனக்குப் புரியாமலேயே இருந்தது. எனது புரிதலுக்கு எட்டியதோர் விளக்கத்தைத் தருகிறேன். உளவியல் ரீதியாகவே அணுகுவோம். வெளில்களோ செம்முளரிகளோ…. They are in an emotionally abusive relationship with their Führer/Duce. அந்தத் தானைத் தலைவனிடம் தானாக மனமுவந்து கட்டுண்டு கிடக்கும் முட்டாள் கூட்டத்திற்கு அத்தலைவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத் தெரியாது. ‘தெரியாது’ என்பதை விட விடுவித்துக் கொள்ளும் துணிவு அறவே கிடையாது. ஏனெனில் அக்கூட்டத்திற்குத் தம் தலைவனைத் தாண்டிய எதார்த்தத்தையோ அவன் இல்லாத ஒரு வாழ்வியலையோ கற்பனை கூட செய்ய இயலாது.
ஒருவன் தனது சுயத்தையும் அடையாளத்தையும் ஒரு தனி மனித வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டு வரையறுத்துவிட்டால் அம்மனிதரைக் கேள்வி கேட்க எத்தனிப்பது என்பது தன்மீதும் தனது நம்பிக்கைகளின்(belief system) மீதும் தானே எறியும் கற்களைப் போன்றது. அன்னார் குறித்துத் தான் உருவாக்கி வைத்த (பொய்யான!) பிம்பத்தை அடித்து நொறுக்க நினைப்பது தன்னைத் தானே தொலைப்பதற்குச் சமம். இப்படியாக அடிமைப்பட்ட மனதிற்குத் தன் மனசாட்சியைக் காட்டிலும் தன் தலைவனின் நற்பெயரே முக்கியம்.
எப்ஸ்டீன் கோப்புகள் வெளியானவுடன் அனற்குழம்பை வாரி முகத்தில் இறைத்தாற்போல் தாங்கவே முடியாத வலியாக இருந்தது. “அவ்வளவுதான்டா! உங்க கதை முடிஞ்சது. செத்தீங்க!” என்றுதான் குற்றவாளிகளை நினைத்து மனசாட்சி வாய்க்கப்பெற்ற பெரும்பாலானோர் கறுவியிருப்போம். அக்கோப்புகள் வெளியான ஒரு வாரத்திற்கும் நினைத்தே பார்க்க முடியாத அவ்வக்கிரமங்களின் அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே கஷ்டமாக இருந்தது. முகமறியா ஒவ்வொரு பிஞ்சுக்காகவும் மனம் தவியாய்த் தவித்தது. ஒவ்வொரு குழந்தையின் வலியும் பாறாங்கல்லாய் மனதை அழுத்திப் பித்து நிலைக்கு இட்டுச் சென்றது.
‘உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இப்பிரச்சனையிலிருந்து குற்றம் சாற்றப்பட்டவர்களால் எப்படி தப்பிக்க இயலும்? ஆட்சி கலையப் போகிறது. அரசியல் தலைவர்கள், வணிகப் பெருமக்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என சம்பந்தப்பட்ட அனைவரும் கைதாகப் போகிறார்கள்’ என்ற நியாயமான கற்பனையுடன் ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்ள முயன்றேன். ஆற்றாமை ஆத்திரமாகி …. ஆத்திரம், உடனடி சட்ட நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பாக மாறியது. எதிர்பார்ப்பு, நீதிக்கான காத்திருப்பாக உருமாறி இன்னமும் கன்னத்தில் கை வைத்துக் காத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு புல்லும் அசையவில்லை.
எப்ஸ்டீன் என்றில்லை, கோத்ராவோ கருவூரோ – கண்கள், மூளை, இதயம் அனைத்தையும் வாடகைக்கு விட்டபடியே அத்தீது புரிந்தவர்களுக்கு முரட்டு முட்டு கொடுப்பவர்கள், உலகெங்கிலும் தமது இனம் நிரம்பிவிட்டதைப் பெருமிதத்துடன் பறைசாற்றுகின்றனர். ‘ஒருவேளை நான் கூட தவறாக இருக்கலாமோ?’ என்றே சிந்திக்க அனுமதிக்காத ஒரு கட்டமைப்பின்(மதம்/அரசியல் கட்சி) மீதான பிணைப்பும் பிடிப்பும் வெறியாக உருமாறுவதில் எவ்வித வியப்பும் இல்லை.
இவ்வகையான குற்றங்களுக்கு எல்லாம் எப்படி நியாயம் கற்பிக்க முடியும்? இக்கொடூரங்களை அரங்கேற்றிய இழிபிறவிகளின் ஆதரவாளர்கள் இதற்கு அப்புறமும் எவ்வாறு தம் நிலைப்பாட்டை மாற்றாமல் இருக்க இயலும்? தமது பற்றுதலுக்கான காரணம் என எதைக் கூறுவார்கள்? மிஞ்சி மிஞ்சிப் போனால் டெக்சாஸ் மாகாண சம்பவம்தான் நிகழும் - ட்ரம்ப் ஆதரவாளரான தந்தை ஒருவர் மகள் ட்ரம்ப் எதிர்ப்பை வெளிப்படுத்தி அதன் பொருட்டு முன் வைத்த கேள்விகளாலும் வாதங்களாலும் கடுஞ்சினங்கொண்டு மகளை நெஞ்சிலேயே சுட்டுக் கொன்றுவிட்டார். தமிழ்நாட்டின் உறுத்தைகளும் கூட சம்பவ இடத்தை நெருங்கிவிட்டன! ‘மானமும் அறிவும்’ என்று துவங்கினாலே குரல்வளையைக் குதறுகின்றன Spanish squirrels.
சமூக நிகழ்வுகள் குறித்த அவதானிப்பு, மிதமான வாசிப்பு, மக்கள் மீதான அக்கறை, குறைந்தபட்ச பச்சாதாபம், உள்ளுணர்வு ஆகியவை வாய்க்கப் பெற்ற…. இந்தப் பண்புகளெல்லாம் கூட வேண்டாம். எந்த ஒரு ‘மனித’னாலும் அநீதி உருவெடுத்துக் கோரத் தாண்டவம் ஆடி விட்டுச் சற்றும் வெட்கமே இல்லாமல் ஓடி ஒளியவோ பிறன்பழி கூறவோ இயலாது.
நம்மால் யாரோ ஒருவருக்குத் தற்செயலாகக் காயம் பட்டுவிட்டது என்றாலே உறக்கம் தொலைத்துக் குற்ற உணர்வில் உழன்று கொண்டிருப்போம். வேண்டுமென்றே நாம் செய்திருக்க மாட்டோம். நம்மையும் அறியாமல்தான் நிகழ்ந்திருக்கும். அதற்கே ஏதோ ஓர் உணர்வு மனதை இறுகிப் பிசையும். ஆனால் பல உயிர்களின் சித்திரவதைக்கும் பலிக்கும் தாம் பிரதான காரணியாகிப் போன பிறகும் கூட எங்ஙனம் இவர்களால் ஒரு சின்ன தடுமாற்றம் கூட இல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடக்க முடிகிறது? எவ்வித நாண உணர்வுமின்றி தங்கள் முகங்களைத் தினமும் கண்ணாடியில் எப்படி பார்க்க முடிகிறது? மிக முக்கியமாக ஒவ்வொரு வாய்ச் சோறும் எவ்வாறு தொண்டையைத் தாண்டுகிறது?
தன்னைப் போன்றே குரூர மனம் படைத்த மாக்களால் சூழப்பட்ட ஒரு தலைவனால் நிச்சயம் மென்மேலும் இரக்கமில்லாமல் நடந்து கொள்ள முடியும். எப்ஸ்டீனிலிருந்து உள்ளூர் வரை எத்தனை ஆதாரங்கள்? எத்தனை சாட்சியங்கள்? இன்னமும் அக்குற்றவாளிகள் அரசியல் பதவியை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அக்குற்றங்களில் பெரும்பங்கு கொண்டிருக்கும் நடிக சிகாமணிகளின் திரைப்படங்கள் எவ்விதத் தடங்கலோ சங்கடமோ இன்றி வெளியாகின்றன. உலகமும் மீண்டும் 9 to 5 வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது. நாம்தான் 2002 பிப்ரவரி, 2025 செப்டம்பர், 2026 ஜனவரி….. என ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறோம் போல.
சுதந்திரமாக நட(ன)மாடிக் கொண்டிருக்கும் அக்குற்றவாளிகளின் மீதான கோபமும் அருவருப்பும் அணு அளவும் குறையாமல் மனதினுள் இன்னும் கனன்று கொண்டிருந்தால் நீயும் மனிதனே! That these fascists (பாயாசங்கள்!) are not hated enough is an altogether different story!
Halo effect-ல் சிக்கி எந்நேரமும் trance மனநிலையில் இருப்பவர்களிடம் தர்க்க அறிவு, தரவுகள், உண்மை என எதுவும் எடுபடாது. ஏனெனில்….. No amount of evidence will ever persuade an idiot – Mark Twain. ஆகையால் தெரிஞ்சு மட்டும்…?
ரசிக மனப்பான்மை என்னும் குமிழுக்குள் இருந்தவாறே உலகைக் காணும் இந்த ஆட்டுமந்தைக் கூட்டத்திடம் “I can only explain it to you. I can’t understand it for you” என்று சொன்னாலும் புரிந்து தொலையாது. கெரகத்த!
If you cannot call wrong as wrong you’re at the last stage of slavery – Che Guevara
- சோம.அழகு