இந்தியாவில் அரசு மற்றும் அரசு சாரா அலுவல்களில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் வழங்கப்படும் ஓய்வூதிய அமைப்பு முறை உலக அளவில் டி –கிரேடு என்ற தரத்தைப் பெற்றுள்ளது. இது இந்திய ஓய்வூதியக் கட்டமைப்பின் மோசமான நிலையினைக் குறிக்கிறது.

Mercer CFA என்ற நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்குரிய உலகளாவிய ஓய்வூதிய தரநிலைக் குறியீட்டினை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. 52 வகையான ஓய்வூதிய முறைகளை ஆய்வு செய்துள்ளது. உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 65 சதவீதம் மக்களின் ஓய்வூதிய நிலை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மூன்று முக்கிய விஷயங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

1. போதுமான அளவு ஓய்வூதியம் வழங்கப்படுகிறதா? – 40 சதவீதம்

2. நிலையான ஓய்வூதியம் வழங்கப்படுகிறதா? – 35 சதவீதம்

3. முறையாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறதா? – 25 சதவீதம்

மேற்கண்ட 100 சதவீதத்தில் இந்தியா 43.8 புள்ளிகள் பெற்று டி – கிரேடு தரநிலையில் உள்ளது. இது உலக நாடுகளின் ஒட்டுமொத்த சராசரியான 64.5 –ஐ விட மிகவும் குறைவு. இந்த வருடத்தில் தன் நாட்டு மக்களுக்காக ஓய்விற்குப் பின் வயது முதிர்ந்த காலத்தில் சிறப்பான பென்சன் வழங்கிய நாடுகளின் தர மதிப்பெண்:

1. நெதர்லாந்து – 85.4 சதவீதம்

2. ஐஸ்லாந்து – 84.0 சதவீதம்

3. டென்மார்க் - 82.3 சதவீதம்

4. சிங்கப்பூர் - 80.8 சதவீதம்

வயது முதிர்வினால் ஓய்வு பெற்றவர்கள் நன்மதிப்புடன் வாழ மேற்கண்ட நாடுகள் முறையாக பென்சன் வழங்கியுள்ளன.

இந்தியாவில் செயல்படுத்தப்படும் தொழிலாளர் நல வருங்கால வைப்பு நிதி என்னும், ஓய்வூதியத் திட்டத்தில் குறைவான சமூகப் பாதுகாப்பு உள்ளதையும், இந்திய ஓய்வூதியத் திட்டங்களின் போதாமை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்து அளவிலான ஓய்வூதியம் வழங்கப்படுவதால் முதுமையில் வறுமையில் வாடும் நிலை உருவாகிறது.

தனியார் மற்றும் தொழில் ரீதியான ஓய்வூதியத் திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை உருவாக்குதல் மற்றும் அதனை முறைப்படுத்துதல் ஆகியவை இந்திய அரசால் மேம்படுத்தப்பட்ட வேண்டிய ஒன்றாகும்.

ஓய்வூதியம் வழங்குவதில் இந்தியாவின் தரக் குறியீடு உணர்த்துவது ஓய்வூதிய சீர்திருத்தங்கள் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தி வாங்கும் சக்தியை அதிகப்படுத்தும் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

வயது முதிர்ந்த ஏழைகளுக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் நிலையை உருவாக்க சமூக ஓய்வூதியத் திட்டங்களை மேலும் பலப்படுத்துவதன் அவசியத்தை இந்திய ஆளும் அரசுகளுக்கு இந்த ஆய்வறிக்கை உணர்த்துகிறது.

அரசியல்வாதிகளான எம்.பி மற்றும் எம்.எல்.ஏ –க்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் போன்று உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் இந்திய நாட்டின் ஒவ்வொரு தினக்கூலி, மாதக்கூலி தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் கிடைப்பதை இந்தியாவை ஆளும் அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

டி – கிரேடு பெற்றுள்ள இந்தியாவின் இறையாண்மை degrade ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஆளும் அரசுகளின் கடமை.

புதிய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்று தனது நாட்டின் தொழிலாளர்களை குழப்பாமல், ஏமாற்ற நினைக்காமல் ஒவ்வொரு குடிமகனும் வயது காலத்திலும், வயதான காலத்திலும் கண்ணியமாக வாழ வழி வகை செய்ய வேண்டியது அவசியமாகின்றது. அதுவே தேச மக்களின் மீது ஆளும் அரசுகளுக்கு உள்ள உண்மையான பக்தியைக் குறிக்கும் தேசபக்தி ஆகும்.

 - சு.பாலகணேஷ்