கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

"எங்களிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தன. வீடு அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் பதிவுகளைக் காட்டவோ அல்லது எதையும் சொல்லவோ எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அது வெறுமனே இடிக்கப்பட்டது. எனக்கு ஏழு பேர் கொண்ட குடும்பம் உள்ளது. அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். நான் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்," பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு மத்திய பிரதேச பாஜக அரசின் புல்டோசர் நடவடிக்கையால் தனது வீட்டை இழந்து நான்கு ஆண்டு விசாரணைக்குப் பிறகு தற்போது நிரபராதி என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ள ஷபிக் அன்சாரியின் வார்த்தைகள் இவை.

நடப்பது டாக்டர் அம்பேத்கர் வகுத்துத் தந்த அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சியாக இனி இருக்காது என்பதன் இந்துத்துவ அடையாளமாக யோகி ஆதித்யநாத் ஆட்சி உத்திரப்பிரதேசத்தில் அமைந்தது. அந்த ஜனநாயகமற்ற ஆட்சிக்கு ஒரு சின்னம் வேண்டுமே அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் புல்டோசர். அந்த புல்டோடர் ராமனின் கத்தி போன்றது. அந்த கத்தி எந்தவித விசாரணையுமின்றி சம்பூகனின் தலையை வெட்டியது. பாஜகவின் புல்டோசரும் எந்தவித விசாரணையுமின்றி இஸ்லாமியர்கள், பட்டியலின மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளுகிறது.

மாபியாக்களை ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதற்குப் பயன்படுத்துவோம் என்று பாஜக முன்வைக்கும் புல்டோசர் மாடல் ஆட்சியை யோகி ஆதித்யநாத் மக்களிடம் முன்னிறுத்தி உத்திரபிரதேச மாநிலத்தில் மதவெறியைத் தூண்டி வெற்றியையும் பெற்றதால் பாஜக ஆட்சி செய்யும் பக்கத்து மாநிலங்களுக்கும் வெற்றியின் சின்னமாய் நீட்டிக்கப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலத்தின் பாஜக முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் " கலெக்டர்கள்,எஸ்.பி ,ஐஜி அனைவரும் கவனமாக கேளுங்கள்..இந்த புல்டோசர் எப்போது பயனுள்ளதாக இருக்கும் என்று கேளுங்கள், சகோதரி மற்றும் மகளை தவறான கண்ணுடன் பார்க்கும் குண்டர்களை தாக்குவதற்கு இதை பயன்படுத்துங்கள்" என்றார். பாலியல் குற்றவாளியாக இருந்தாலும் அவர் முஸ்லிமா, தலித்துகளா என்பதுதான் அதிகாரிகளின் கண்களுக்கு முதல் விருந்தாக இருந்தது. சிவராஜ் சிங் சவுகான் இப்போது ஒன்றிய வேளாண்துறை அமைச்சராக இருக்கிறார். அவர் சொன்னது போல பாலியல் குற்றவாளிகளின் குடியிருப்பை இடிக்க புல்டோசரை பயன்படுத்தலாம் என்று அதிகாரிகள் சுதந்திரமாக முடிவெடுத்தால் முதலில் பாஜகவின் தலைமையகம்தான் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும். மாறாக அந்த வசனம் இஸ்லாமியர்களை குற்றவாளிகளாக முன்னிறுத்தியதாகவே இருந்தது.

போபால் மாவட்டத்தில் உள்ள சாரங்பூர் பகுதி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளவர் ஷபிக் அன்சாரி. இவர் 04.02.2021 அன்று எனது மகனின் திருமணத்திற்கு உதவி செய்வதாக வீட்டிற்கு வரச்சொல்லி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்று ஒரு மாதம் கழித்து 04.03.2021 அன்று காவல் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளிக்கிறார்.அதனைத் தொடர்ந்து அன்சாரியின் வீட்டை மத்திய பிரதேச அதிகாரிகளின் புல்டோசரால் பத்து நாட்கள் இடைவெளியில் 13.03.2021 அன்று இடித்து தரைமட்டமாக்குகிறார்கள் . தொடர்ந்து அவரது மகன் மற்றும் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார் அன்சாரி.

அன்சாரி அந்த பகுதியின் கவுன்சிலர் ஆவார், புகார் அளித்த அந்த பெண்ணின் வீடு அரசு ஆக்ரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதால் நகராட்சி அதிகாரிகள் அந்த பெண்ணின் வீட்டை இடித்திருந்தனர்.மேலும் அவர் வீட்டில் போதைப்பொருள் புழக்கம் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்த நிலையில்தான் ஷபிக் அன்சாரி நகராட்சி கவுன்சிலர் என்பதால் அவர்தான் தனது வீட்டை இடிக்கக் காரணம் என்று நினைத்து அதற்கு பழிவாங்குவதற்காகவே அந்த பெண் பொய்யான பாலியல் வழக்கை ஷபிக் அன்சாரிக்கு எதிராக அளித்திருப்பதாகக் கூறி இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக ராஜ்கர் மாவட்ட நீதிபதி சித்ரேந்திர சிங் சோலங்கி கடந்த 14 ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

நான்கு ஆண்டுகள் கழித்து விசாரணையின் முடிவில் அவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது ஆனால் அவர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக எந்தவித விசாரணையுமின்றி தான் கட்டிய சொந்த வீட்டை பாஜக அரசின் புல்டோஸருக்கு பலி கொடுக்க வேண்டியதாயிற்று.

"நான் கடினமாக உழைத்து சம்பாதித்த சேமிப்பைக்கொண்டு 4500 சதுர அடி நிலத்தில் வீட்டை கட்டியிருந்தேன், இப்போது இடிபாடுகள் மட்டுமே உள்ளன.நாங்கள் என் சகோதர்களின் வீட்டில் வசிக்கிறோம்" என்ற அன்சாரி இப்போது வீடற்றவராக இருக்கிறார். விசாரணை ஏதுமின்றி வீட்டை இடித்துத் தள்ளிய மத்திய பிரதேச அரசுக்கு எதிராக இழப்பீடு கேட்டு வழக்குத் தொடரப் போவதாகச் சொல்லியிருக்கிறார் அன்சாரி.

நபிகள் நாயகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கண்டித்து உத்திர பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக மனித உரிமை ஆர்வலர் ஜாவேஷ் முகமதுவின் வீட்டை பிரக்யாராஜ் மேம்பாட்டு ஆணையம் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கியது. உண்மையில் அந்த வீடு அவரது மனைவி பெயரில் உள்ளது.இப்படியான வழக்குகளைத் தாமாக முன்வந்து கையிலெடுத்தது உச்ச நீதிமன்றம்.

07.11.2024 அன்று இதன் மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.காவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு " புல்டோசர் கொண்டு ஒரு கட்டிடத்தை இடிப்பது ஒரே இரவில் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களை வீடற்றவர்களாக ஆக்குகிறது. சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்ற வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டவருக்கு எதிராக இதுபோன்ற தன்னிச்சையான, மிகக் கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசோ அல்லது அதிகாரிகளோ மேற்கொள்ள முடியாது " என்று தீர்ப்பளித்தது.

என்ன வேதனையென்றால் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றத்தின் பார்வை பாதிக்கப்பட்ட மக்களின் மீது படுவதற்கு முன்பே ஷபிர் அன்சாரியின் வீடு உட்பட சுமார் 7 லட்சம் மக்களின் 1.5 இலட்சம் வீடுகள் இடிக்கப்பட்டு விட்டது.

- மழவை.தமிழமுதன்