இந்தியத் துணைக் கண்டத்தில் நவீன பாசிசம் கோலோச்சி வரும் சூழலில் புரட்சிகரப் பண்பாட்டுப் பணியின் உள்ளடக்கத்தையும் வடிவங்களையும் மறுபரிசீலனை மற்றும் மறுவார்ப்பு செய்தல்
(2019 செப்டம்பரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் கோவை பாசிச எதிர்ப்புப் பள்ளி சார்பில் பொன்.சந்திரன் அவர்கள் சமர்ப்பித்த நிலைப்பாட்டு அறிக்கை)
பாசிசத்திற்கு எதிரான கலாச்சார எதிர்ப்பு அரங்கம்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இத்துணைக்கண்டத்தின் உழைக்கும் மக்களின் சார்பாக, குறிப்பாக மோசமடைந்து வரும் நவ காலனிய சூறையாடல் மற்றும் இத்துணைக் கண்டத்தை சூழ்ந்து வளர்ந்து வரும் பார்ப்பனிய இந்துத்துவ நவ பாசிச கொடு நெறி தொடரும் பின்னணியில் இந்த மன்றத்தின் அமைப்பாளர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்களையும் மனமார்ந்த பாராட்டுகளையும் பதிவு செய்கிறேன்.
இந்தப் பின்னணியில், புரட்சிகரப் பண்பாட்டுப் பணியை மேற்கொள்வதற்கான குறிக்கோளையும் வழிமுறையையும் மறு பரீசீலினை மற்றும் மறுவார்ப்பு செய்ய வேண்டிய அவசியம் நிச்சயமாக உள்ளது.
இந்த அரங்கு புதிய ஜனநாயக மற்றும் சோசலிச சமூக மாற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது என்று நான் நம்புகிறேன்.
சமூக மாற்றம் என்பது முக்கியமாக மூன்று தளங்களில் ஈடுபட வேண்டும் என்று நாம் அறிவோம்! நான் நம்புகிறேன். ஒன்று: அரசியல் போராட்டம், இரண்டு: தத்துவப் போராட்டம், மூன்று: பொருளாதாரப் போராட்டம்.
அரசியல் போராட்டத்தின் குவிமையம் தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் கட்சியால் தலைமை தாங்கப்படும் உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அடிப்படை வர்க்கங்களின் பொருளாதார நிலையை மாற்றியமைக்க பொருளாதாரப் போராட்டங்கள் தொடங்கப்படுகின்றன.
"உழுபவனுக்கே நிலம்” என்ற இயக்கங்களைப் போலவே பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்களை அமைப்பாக்குவதும் அத்தகைய ஒரு வழிமுறையாகும்.
வரலாற்று ரீதியாக பொருளாதாரப் போராட்டங்கள் பொருளாதாரவாதமாக சீரழிந்தது துரதிர்ஷ்டவசமானது. புரட்சியைக் கற்பதற்கும், நடைமுறைப் படுத்துவதற்கும் பள்ளிகளாக வளர்க்கப்பட வேண்டிய தொழிற்சங்கங்கள் தொழில் வர்த்தக அமைப்புகளாக மாறின. எனவே, இந்தச் சீரழிவிலிருந்து பாட்டாளி வர்க்க இயக்கத்தை மீட்டெடுக்க புரட்சிகர இயக்கம் தேவைப்பட்டது. “அரசியலை ஆணையில் வை” என்ற அறைகூவல் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
அதேசமயம், சமூக ஜனநாயகவாதிகளில் ஒரு பிரிவினர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வழிமுறையாக நாடாளுமன்றப் பாதையைத் தேர்ந்தெடுத்தபோது அரசியல் போராட்டங்களும் சீரழிந்தன. இந்தப் பின்னணியில்தான் அறுபதுகளின் பிற்பகுதியில் நக்சல்பாரி போராட்டம் இந்த நாடாளுமன்றப் பாதையிலிருந்து விலகி உருவானது. இது தோழர் மாவோவாலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியாலும் "வசந்தத்தின் இடிமுழக்கம்" என்று வரவேற்கப்பட்டது.
சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்குள் நடந்த "மாபெரும் விவாதத்தை" தொடர்ந்து, மாவோ நக்சல்பாரி இயக்கத்திற்கு மேலும் உத்வேகம் அளித்தார். எனவே, ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், அத்தகைய போராட்டத்தை வழிநடத்துவதற்கான அரசியல் கட்சியை மீள்கட்டியெழுப்புவதும் ஒடுக்குமுறை நிலைமைகளுக்கு ஏற்ப மறு வார்ப்பு செய்யப்பட்டது. "துப்பாக்கிக் குழலிலிருந்துதான் அதிகாரம் பாய்கிறது" என்று புரட்சி இயக்கம் பொதுவாக ஒப்புக் கொண்டாலும், துப்பாக்கியை இயக்குவது கட்சிதான் (அதாவது அரசியல்தான் துப்பாக்கிக்கு வழி காட்ட வேண்டும், கட்டளையிட வேண்டுமே தவிர, மாறாக அல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டது.)
அதேவேளை அரசியல், பொருளாதாரப் போராட்டங்களைத் தொடங்குவதற்கான நோக்கமும் வழிமுறைகளும் குறித்து ஓரளவு தெளிவு இருந்தது.
சில சித்தாந்தங்களை கருத்துமுதல்வாதம் அல்லது பொருள்முதல்வாதம் அல்லது இயக்கவியல் அல்லது கொச்சைப் பொருள்முதல்வாதம் என்றெல்லாம் முத்திரை குத்துவதன் மூலம் நாம் தத்துவார்த்தப் போராட்டத்தை ஆய்வு அரங்குகளின் வகுப்பறைகளில் மூடிய அறைகளுக்குள் அடைத்து வைத்திருக்கிறோம்.
அதேபோல, அரசியல், பொருளாதாரப் போராட்டத்துக்கான களம், அது புரட்சிகர வழிமுறைகளாக இருந்தாலும் சரி, திருத்தல்வாத முறைகளாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றப் பாதை அல்லது நாடாளுமன்றம் சாராத பாதையாக இருந்தாலும் அந்தந்த குறிப்பிட்ட அரங்கில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இருந்தபோதிலும், சித்தாந்த, தத்துவார்த்தப் போராட்டங்களை நடத்துவதற்கான குறிக்கோள் அல்லது களத்தை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து.
பண்பாட்டுப் பணியில் எனக்குள்ள சிறிய அனுபவத்தைக் கொண்டு, பண்பாட்டுப் பணியே ஒரு முழுமையான சமூக மாற்றத்திற்கான கருத்தியல் மற்றும் தத்துவப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வழியும் வழிமுறையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
புரட்சிகரக் கலாச்சாரப் பணி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைப் பிரச்சாரம் செய்வதாக இருக்க வேண்டும் என்ற தவறான கருத்து நம்மில் பலரிடம் உள்ளது. எனவே, அத்தகைய கருத்தைக் கொண்ட பண்பாட்டுப் பணி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உரத்த குரல் கொடுத்தாலொழிய திருப்தியடையாது. அது பாடலாக இருந்தாலும் சரி, குறுநாடகமாக இருந்தாலும் சரி, முழு நீள நாடகமாக இருந்தாலும் சரி, அது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் போய் முடியும்!
வரையறையின்படியும், நோக்கத்தின்படியும் அத்தகைய படைப்பு உள்ளார்ந்த அரசியல் சார்ந்ததே தவிர பண்பாட்டு ரீதியானது அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சித்தாந்த, தத்துவப் போராட்டங்களை நடத்துவதில் தீவிரமாக ஈடுபடும் தத்துவ அல்லது பண்பாட்டுப் பணிகள் சமூக மாற்றத்திற்குப் பங்களிக்கும் புதிய விழுமியங்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.
இந்தச் சூழலில், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் முன்வைத்த சித்தாந்த நிலைப்பாடுகளை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவது பொருத்தமாக இருக்கும்.
சாதிய ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் சமூகப் பண்பாட்டு மாற்றம் இல்லாமல் அரசியல் மாற்றம் அர்த்தமற்றது என்று அவர்கள் வலியுறுத்தினர். சாதிய மேலாதிக்கம் அரசியல் மாற்றத்தை நிலைநிறுத்தும் வரை சாதிய ஆதிக்க சக்திகள் அரசியல் அதிகாரத்தை வேறு வழிகளில் கைப்பற்றுவதாகவே இருக்கும் என்று அவர்கள் கோட்பாடுகளை முன்வைத்தனர். எனவே, அரசியல் மாற்றத்திற்கான முன்னோடியாக சமூகப் பண்பாட்டு மாற்றத்தை அவர்கள் உரத்த குரலில் வலியுறுத்தினர்.
அடித்தளம் மற்றும் மேற்கட்டுமானம்:
1960கள் வரை இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தை மூடி மறைத்த மற்றொரு அம்சம், அடித்தளம் மற்றும் மேற்கட்டுமானம் குறித்த போதிய புரிதல் இல்லாமை.
அடித்தளத்துக்கும் மேல்கட்டுமானத்துக்கும் இடையிலான இயங்கியல் மற்றும் இயக்கவியல் உறவுக்குப் பதிலாக, அது இயந்திரத்தனமான புரிதலால் மூழ்கடிக்கப்பட்டது. பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றம் மேற்கட்டுமானத்தில் தேவையான மாற்றத்தைக் கொண்டு வரும் என்று அது கண்மூடித்தனமாக நம்பியது. சாதியும் அது சார்ந்த பண்பாடும் நிலப்பிரபுத்துவப் பொருளாதார அடித்தளத்தின் பிரதிபலிப்பு மட்டுமே என்று அது கருதியது. மேலும், பொருளாதாரத்தை முதலாளியமாற்றத்தால் சாதியக் கட்டமைப்பை தேவையற்றதாக்கி விடும் என்றும், அடித்தளமான பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றத்துடன் அது உலர்ந்து உதிர்ந்து விடும் என்றும் அது கற்பனை செய்தது. அதேசமயம், முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய அமைப்பு சாதியக் கட்டமைப்பை வலுப்படுத்தி, அதை மேலும் ஒடுக்குமுறையானதாக மாற்றியது.
பொருளாதார அடித்தளம் மேற்கட்டுமானத்தின் மீது செல்வாக்கு செலுத்துகிறது என்ற முன்னுதாரணத்தை மறுப்பதற்கில்லை. அதேசமயம், மேற்கட்டுமானம் பொருளாதார அடித்தளத்தின் மீதும் தனது செல்வாக்கைச் செலுத்துகிறது என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது.
இங்கு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் தோன்றிய பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றி குறிப்பிட வேண்டும்.
மக்கள்தொகையில் மூன்று சதவீதத்திற்கும் குறைவாக இருந்த பார்ப்பனர்கள் சாதியப் படிநிலை மற்றும் மேலாதிக்கத்தில் சமூக மற்றும் வரலாற்று ரீதியான அனுகூலத்தின் காரணமாக குடிமைச் சமூகத்தில் 95% க்கும் அதிகமான பதவிகளை ஆக்கிரமித்திருந்தனர். எனவே, பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் சமத்துவம் மற்றும் குடிமைச் சமூகத்தின் ஜனநாயகமயமாக்கல் என்ற பெயரில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கோரினர். பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் தீச்சுடர் ஏந்தி வந்தது. அடிப்படையில் அது ஒரு சமூகப் பண்பாட்டு இயக்கம். குடிமைச் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரிய அதேவேளையில், இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு போன்ற பண்பாட்டுப் பிரச்சினைகளை உரத்த குரலில் கையிலெடுத்தது. இந்தி / சமஸ்கிருதம் / பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராட தமிழ் தூய்மைவாதத்தை ஒரு கலாச்சார ஆயுதமாக முன்வைத்தது.
இவை இறுதியில் திராவிட / தமிழ் அரசியல் உருவாக்கப்பட்ட கலாச்சார அடித்தளமாக மாறி, 1960 களின் பிற்பகுதியில் தமிழ்த் தேசிய, தரகு முதலாளித்துவ வர்க்கம் மாநிலத்தில் அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகுத்தது.
கலாச்சார இயக்கத்திற்கும் அரசியல் இயக்கத்திற்கும் இடையிலான தொடர்பை அங்கீகரிக்கத் தவறுவது, நீடித்த அரசியல் மாற்றத்திற்கான அதன் முன்னணி கலாச்சார இயக்கத்தை நோக்கி கம்யூனிஸ்ட் இயக்கம் தவறுமானால், நம்மை எங்கும் இட்டுச் செல்லாது.
இந்த கட்டத்தில், அரசியல் பணியின் முக்கியத்துவத்தையோ அல்லது தீவிரத்தையோ குறைத்து மதிப்பிட நான் விரும்பவில்லை. பண்பாட்டுப் பணியின் சாராம்சத்தையும் அரசியல் பணியையும் வேறுபடுத்திப் பார்க்காமல் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம் என்று மட்டுமே நான் கேட்டுக் கொள்கிறேன்.
பண்பாட்டு மாற்றம் எவ்வாறு அரசியல் மாற்றத்திற்கு இட்டுச் சென்றது என்பதற்கும், தடையற்ற பண்பாட்டு மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்திற்கும் வரலாற்றில் சான்றுகள் ஏராளமாக உள்ளன. அல்லது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகும் பண்பாட்டுப் புரட்சி தேவைப்படலாம்.
சுருக்கமாகச் சொன்னால், பண்பாட்டு மாற்றம் அரசியல் மாற்றத்திற்கு முன்னும் பின்னும் நிகழ்கிறது என்பதை நாம் அங்கீகரிக்கிறோம். குறிப்பாக, நான் மீண்டும் கூறுகிறேன், துணைக் கண்டத்தில் வளர்ந்து வரும் பார்ப்பனிய இந்துத்துவ நவ பாசிசம் மற்றும் தேர்தல் ஆணை என்று அழைக்கப்படுவதன் மூலம் தற்போதைய ஆளும் ஸ்தாபனம் மீண்டும் திரும்பும் சூழலில், பிற்போக்கு மற்றும் ஒடுக்குமுறை கருத்தியல் கட்டமைப்பிலிருந்து வெகுஜன மக்களை மீட்டெடுக்க புரட்சிகர கலாச்சார இயக்கம் கோருகிறது.
ஒரு கட்டத்தில், "அரசியலை ஆணயில் வை” என்ற முழக்கத்தை எழுப்ப வேண்டிய அவசியம் இருந்தது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், பாராட்டுகிறோம். ஆனால் தற்போது "தத்துவம் / சித்தாந்தத்தை ஆணையில் வை” என்று கூறுவது மிகப் பொருத்தமாக இருக்குமென்று வலியுறுத்துகிறேன்!.
எனவே, தோழர்களே, அயோதிதாச பண்டிதர்,புலே, அம்பேத்கர், பெரியார், நாராயணகுரு போன்ற பல்வேறு தேசிய இனங்களிடையே பல்வேறு சமூகப் பண்பாட்டு சீர்திருத்தவாதிகளால் வழிநடத்தப்பட்ட சமூக - பண்பாட்டு இயக்கங்களின் உணர்வை உள்வாங்கி, சித்தாந்த, தத்துவார்த்தப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தும் புரட்சிகரப் பண்பாட்டுப் பணியை நாம் ஒன்றிணைந்து மேற்கொள்வோம்.
நான் முடிக்கும் முன்னர், புரட்சிகரப் பண்பாட்டுப் பணியை அரசியல் பணியை/ இயக்கத்தை நாம் அணுகும் விதத்தைப் போலவே தொழில்முறை ரீதியில் அணுக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்த விரும்புகிறேன்.
மார்க்சியம் - லெனினியம், மாவோ சிந்தனைகளை உயர்த்திப் பிடிக்கும் அதே வேளையில், சங்பரிவார் தலைமையிலான நவ பாசிசத்திற்கு எதிரான கருத்தியல் போராட்டத்தை நடத்த அம்பேத்கரையும் பெரியாரையும் உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.
இருக்கும் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் சக்திகள் தொழில்முறை அணுகுமுறை கொண்டவையாக இருக்கும்போது, அடிப்படையான சமூக மாற்றத்தை விரும்பும் இயக்கம் மிகவும் தொழில்முறையற்றதாக இருப்பது கெடு வாய்ப்பே.
இந்த மனப்பான்மையுடன் நாம் நமது எதிர்ப்பை நீடித்த முறையில் முன்வைக்க முடியாது. எனவே நமது பணிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பி.கு: கோவை பாசிச எதிர்ப்புப் பள்ளி சார்பில் இந்த கோட்பாட்டியல் உரை நிகழ்த்தப்படுகிறது.
இந்த உரையை நேரில் நிகழ்த்தி கலந்துரையாடலில் பங்கேற்க முடியாமைக்கு வருந்துகிறேன். இதை உங்களுக்கு கொண்டு வந்து சேர்த்த தோழர் வளர்மதி மற்றும் தோழர் பார்த்திபன் அவர்களுக்கு நன்றி.
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
- பொன்.சந்திரன், பாசிச எதிர்ப்புப் பள்ளி, கோயம்புத்தூர்