கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அரசுப் பணியில் இருந்து ஒருவர் ஓய்வு பெறுகிறார் என்றால், அன்றைக்கு உடன் பணியாளர்கள் உள்பட அந்த அலுவலகத்தில் பணியாற்றும் பலரும், பணி ஓய்வு பெறும் நபருடன் தங்களுடைய நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கமானதுதான். ஆனால் அனைத்துத் துறையைச் சார்ந்த பணியாளர்களுக்கும் இதுபோன்று நடக்கிறதா? என்றால் பரவலாக ஆமாம் என்று சொல்வோம். அதேநேரத்தில் துப்புரவுப் பணியாளர்கள் பணி ஓய்வு பெறும் போது இதுபோன்று நடக்கிறதா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். துப்புரவுப் பணியாளர்கள் என்றாலே அவர்களை பெரிதும் கண்டுகொள்ளாத மெத்தனப் போக்குப் பரவலாக இருப்பதை காண முடியும்.

பணி ஓய்வும் – கௌரவிப்புகளும்

பெரும்பாலும் துப்புரவுப் பணியாளர்களை அவர்களுடன் வேலைப் பார்ப்பவர்களை தவிர, தொடர்புடைய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் உள்பட பலரும் சக மனிதனாக அங்கீகரித்து நடந்து கொள்வது மிகக் குறைவாகவே இருக்கும். துப்புரவுப் பணியாளர்களை அரசுப் பணியாளர்கள் என்ற வகைப்பாட்டில் வைத்துப் பார்க்க பிற பணியாளர்கள் தயங்குவதுதான் இதன் வெளிப்பாடு. அதோடு அப்பணியை குறிப்பிட்ட தலித் சாதிகளை சார்ந்தவர்கள் செய்கிற வேலை என்று வகைப்படுத்திக் கொள்வதாலும் அவர்களை ஒதுக்கும் பாணியிலான செயல்கள் புரிவதையும் நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் தற்போது வெகு சில இடங்களில் துப்புரவுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் போது அவர்களை உரிய முறையில் அங்கீகரித்து, மரியாதை செலுத்தி வழியனுப்பும் நிகழ்வுகள் நடைபெறுவதும் உண்மையில் வரவேற்றகத்தக்கதுதான்.

மற்ற துறை பணியாளர்கள் என்றால் அவர்கள் பணி ஓய்வு பெற்றதும், அவர்களின் பணி ஓய்வுக்குப் பிறகு அசைப் போட்டுப் பார்க்க பல நல்ல நினைவுகள் இருக்கும். ஆனால் துப்புரவுப் பணியாளர்களைப் பொறுத்தவரை அப்படியொன்று இருக்க முடியாது. அவர்கள் பணிசெய்த முறைகள் உள்பட அனைத்தும் அவலங்களாக இருப்பதும் ஒரு காரணம். வேண்டுமென்றால் அவரின் பணிக்காலத்தில் நன்றாக சுத்தம் செய்தார். எந்த வேலையை சொன்னாலும் முகம் சுளிக்காமல், அசிங்கப்படாமல் செய்வார். விடுப்பு எடுக்காமல் அன்றாடம் தெருக்களை சுத்தமாகப் பராமரிப்பார் என்று புகழாரம் சூட்டலாம். அந்த துப்புரவுப் பணியாளரும் தன் பணிக்காலத்தில் எத்தனை விதமான குப்பைகளை நாம் அள்ளிச் சுமந்தோம். எத்தனை விதமான கழிவுகள், கசடுகள், சாக்கடை, மலம் உள்பட இன்னும் எத்தனையோ கழிவுகளை அள்ளி சுமந்திருப்போம் என்று நினைத்துப் பார்ப்பதை தாண்டி சொல்லிக் கொள்வது போல வேறு ஒன்றும் இருக்காது. இருக்கவும் முடியாது.

தனது பணிக்காலம் முழுவதும் குப்பைகள், கழிவுகள், சாக்கடை என அருவருக்கத்தக்க நிலையில் கடைசி வரை துப்புரவுப் பணிகளை தனது அன்றாட கடமையாக செய்து முடித்த ஒருவர், தனது பணிக்காலத்தில் துப்புரவுப் பணியாளர் என்ற நிலையை கடந்து அடுத்தக்கட்டத்திற்குப் போகவே முடியாத அந்தப் பணியாளர்களின் நிலையை அவர்கள் துளியும் உணராதவாறுதான் இன்றும் இருக்கிறார்கள்.

துப்புரவுப் பணியில் அடுத்தக்கட்ட நகர்வு கிடையாதா?

சாதாரணமாக காவல் நிலைக்குத் தேர்வு செய்யப்படும் ஒருவர், அவர் பணி ஓய்வு பெறும் போது குறைந்தபட்சம் தலைமைக் காவலர் என்ற நிலைக்காவது நகர்ந்திருப்பார். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எனும் போது அவர்கள் அதே நிலையில் பணி செய்வது குறித்த மாற்றுக் கருத்து இல்லை. அதுவும் அரசு சார்பில் உரிய உபகரணங்கள் முறையாக வழங்கப்பட வேண்டும். பெரும்பாலான இடங்களில் இதை முறையாகப் பின்பற்றுவதும் கிடையாது.

தற்போதைய துப்புரவுப் பணியளார்களில் அவர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு அவர்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதோ, அல்லது அவர்களின் கல்வித் தகுதிக்குரிய பணிகளுக்கு உயர்த்துவதோ கிடையாது. கடைசி வரை அதே இடத்தில் பணியில் அமர்த்தி ஓய்வு பெறும் வரை துப்புரவுப் பணிகளை செய்ய வேண்டிய அவலம் நீடிக்கிறது.

துப்புரவுப் பணியாளர்களை உண்மையாகவே அரசுத் தரப்பில் தொடர்புடைய அதிகாரிகள் கௌரவிக்கிறார்கள் என்பதற்காக பெருமையாகப் பேசிக் கொண்டே இருந்துவிடலாமா? அது எதற்கும் உதவாதுதானே? அவர்களின் பணி ஓய்விற்குப் பிறகு எவ்வித சலுகைகளும் இல்லாமல்தான் இருக்க நேர்கிறது. பெரும்பாலான துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கி வருவதும், தினக் கூலிப் பெறும் தொழிலாளர்களைக் கொண்டும் இந்த வேலைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் இன்னொரு விசயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற பணிகளைப் போன்று துப்புரவுப் பணிகளையும் நாம் கணக்கிடக் கூடாது. இப்பணியின் போது துப்புரவுப் பணியாளர்கள் பலர் தங்களின் உயிரை இழக்க நேரிடுகிறது. அதோடு தங்களுடைய பணிக்காலத்திற்கு முன்னதாகவே உடல் பலவீனமடைந்து, நலிவுறும் தன்மையுடன் துப்புரவுப் பணியானது இருப்பதால், அப்பணியின் தன்மையைக் கருதி, அவர்களின் பணிக் காலத்திற்குப் பிறகு அவர்களை பராமரித்துக் கொள்ளவும், பேணிக் காத்துக் கொள்ளவும் ஓய்வுதியம் மிக அவசியம்.

மற்றப் பணியாளர்களை போல இவர்களுக்கும் ஓய்வுதியம் கிடையாது என்று பொதுத் தன்மையுடன் அரசுத் துறையானது அணுகினால், துப்புரவுப் பணியில் மட்டும் எதற்காக இடஓதுக்கீடு முறையை பின்பற்றாமல் அனைத்து இடங்களையும் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் தலித் உள்ளிட்ட அடித்தட்டு சாதிகளை சார்ந்த மக்களை பணியில் அமர்த்துகிறார்கள்? அனைத்து சாதியினருக்கும் சமமான பங்கீட்டு அடிப்படையில் பணியில் அமர்த்தினால்தானே சரியாக இருக்கும். ஒருவேளை அது சாத்தியமானால் ஓய்வுதியம் உள்ளிட்ட சலுகைகளும், பணிப் பாதுகாப்பு தொடர்பான உபகரணங்களும் முறையாக வழங்கப்படும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

பணி ஒய்வு பெறும் போது ஒரு பணியாளருக்கான அங்கீகாரம் அளித்து மகிழ்ச்சியாக வழியனுப்பும் நிகழ்வுகள் ஒருபக்கம் வரவேற்றக்கப்பட வேண்டியவையாக இருப்பினும், இது எங்காகவது ஓரிடத்தில் நடப்பது என்ற நிலையை மாற்றி, அனைத்து இடங்களிலும் துப்புரவுப் பணியாளர்கள் பணி ஓய்வு பெறும் போது அவர்களை சிறப்பான முறையில் மரியாதை செய்தும் வழியனுப்புவது மிக அவசியம். அதற்கான வழிமுறையை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

கௌரவிக்கும் நிகழ்வுகள்

துப்புரவுப் பணியாளர்களை பணி ஓய்வின் போது கௌரவிக்கும் நிழ்வுகள் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் நடைபெற்றிருக்கிறது. அவைகள் பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளிவந்துள்ளன. என்ன காரணத்திற்காக பொதுச் சமூகம் துப்புரவுப் பணியாளர்களை அவர்களின் பணி ஓய்வின் போது கொண்டாட்டமாக முன்னொடுத்தார்கள் என்பது உள்பட இவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

நிகழ்வு - 01

சிவகாசியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரின் மனைவி மரகதம் (வயது 60). சிவகாசி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். மாநகராட்சியில் மண்டல எண்-3க்கு உட்பட்ட பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப் பணியில் மரகதம் ஈடுபட்டு வந்தவர். வயது முதிர்வு காரணமாக, அவருக்கு அடிக்கடி கால் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்பட, மருத்துவர்களின் அறிவுரைப்படி ஊன்றுகோல் பயன்படுத்தியபடியே தினசரி தன் பணியை கடமையாக செய்து வந்திருக்கிறார்.maragatham sivakasiஇந்த நிலையில், 60 வயது பூர்த்தி அடைந்த மரகதத்திற்கு 2023 ஜுன் மாதம் பணி ஓய்வு வழங்கப்பட்டது. உடல் நலமின்மையிலும் கூட மாநகராட்சிக்காக தன் உழைப்பைக் கொடுத்து கடமைகளை சரியாகச் செய்த மரகதத்தை நேரில் அழைத்துப் பாராட்டி கௌரவிக்க மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் முடிவு செய்திருக்கிறார். அதன்படி அன்று மாலை, மாநகராட்சி அலுவலகத்துக்கு தன் குடும்பத்தினருடன் மரகதத்தை வரவழைத்து, ஆணையாளர் சங்கரன் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தவர், தொடர்ந்து மரகதத்தை உரிய கௌரவத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பொருட்டு, அலுவலகத்தின் நுழைவுவாயில் வரைக்கும் மரகதத்தை தன்னுடனே அழைத்து வந்த ஆணையாளர் சங்கரன், தன்னுடைய பயன்பாட்டுக்காக அரசு வழங்கியிருக்கும் சொகுசு காரில் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார். இதற்காக காரின் கதவுகளை திறந்துவிட்ட ஆணையாளர், அதன் முன்னிருக்கையில் மரகதத்தை அமரச் செய்து அழகு பார்த்திருக்கிறார். பின்னர், மரகதத்தின் வீடு வரைக்கும் காரிலேயே அவரையும், அவரது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்று இறக்கி விடவும் பணியாளருக்கு அறிவுரை வழங்கினார்.

மாநகராட்சி ஆணையாளரின் இந்தச் செயலால் நெகிழ்ந்துபோன மரகதம் கைகள் கூப்பி அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். சிவகாசி மாநகராட்சியில் வேலை செய்து ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளரை கௌரவத்துடன் வீட்டிற்கு வழியனுப்பி வைத்த சம்பவம் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

ஆணையாளரின் சொகுசு காரில் ஏற்றிச் சென்று மரகதம் என்ற துப்புரவுப் பணியாளரை அவரது வீட்டில் கொண்டுப் போய் விட்டு வந்திருப்பது, அந்தப் பணியாளரை கௌரவிக்கும் விதமாகவே பலரும் பார்த்திருக்கின்றனர். அவர்கள் பணியின் போது அந்தக் காரை தொட்டிருக்க வேண்டிய அவசியம் கூட இருந்திருக்காது. துப்புரவுப் பணியாளரும் ஒரு மாநகராட்சிப் பணியாளர்தான் என்ற சிந்தனைதான் அத்தகைய கௌரவமான செயலை செய்வதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கும்.

இவற்றில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் மரகதம் என்ற துப்புரவுப் பணியாளர் தனக்கு உடல் நலமின்மையிலும் மாநகராட்சிக்காக தன் உழைப்பைக் கொடுத்து கடமைகளை சரியாகச் செய்த காரணத்திற்காகவே மரகதத்தை நேரில் அழைத்துப் பாராட்டி கௌரவித்திருக்கிறார்கள் போலும். மற்ற பணியாளர்களைப் போன்று துப்புரவுப் பணியார்களுக்கு மருத்துவ விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அப்படியே அவசியம் ஏற்பட்டு விடுப்பு எடுத்துவிட நேர்ந்தாலும் அதற்கான அனுமதி பெறும் விவகாரங்களுக்காக அவர்கள் விடுப்பு எடுப்பதையை தவிர்த்து விடலாம் என்று நினைக்கவும் தோன்றும். அத்தனை கெடுபிடிகள் கடைநிலை ஊழியர்களிடம் எப்போதும் அரசு நிர்வாகம் காட்டத்தான் செய்கிறது.

நிகழ்வு – 02

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது மேலசொக்கநாதபுரம். இங்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை வீரன் என்பவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவரது பணிக்காலம் முடிவடைந்த நிலையில், பேரூராட்சித் தலைவர் கண்ணன் காளிராமசாமி மற்றும் செயல் அலுவலர் இளங்கோவன் தலைமையில் அவருக்குப் பணி நிறைவு பாராட்டு விழா நடந்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் பணி நிறைவு பெற்ற மதுரை வீரனுக்கும், அவரது துணைவியாருக்கும் ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அவருக்குப் பணி நிறைவுச் சான்றிதழை வழங்கியதுடன், சேர்மன் இருக்கையில் அமர வைத்து சிறப்பு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, நிர்வாகம் மற்றும் உடன் பணியாற்றியவர்கள் சார்பில் நினைவு பரிசுகள் அளிக்கப்பட்டது.

பெரும்பாலும் துப்புரவுப் பணியாளர் என்றால் அவர்களை நடத்தும் விதம் குறித்து நம்மில் பலரும் அறிந்திருப்போம். இத்தகைய சூழலில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிய மதுரை வீரனுக்கு மட்டுமில்லாமல் அவருடைய மனைவிக்கும் சக மரியாதை செய்திருக்கிறார்கள் பேருராட்சி நிர்வாகம் சார்பில். பெரும்பாலும் போடிநாயக்கனூர் பகுதியில் ஏலக்காய் மாலை என்பது மிகவும் கௌரவ அங்கத்தினருக்கும், கடவுள் வழிபாட்டின் போதும் அணிவது உண்டு. அத்தகைய மாலையை துப்புரவுப் பணியாளரான மதுரை வீரன் அவர்களின் பணி ஓய்வின் போது அணிவித்திருப்பது அவருக்கு நல்லதொரு மரியாதை அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியதுதான்.

அதைவிட முக்கியமானது, இன்னும் எத்தனையோ தலித் சமூகத்தை சார்ந்தவர்கள் பஞ்சாயத்து தலைவர்களாக தேர்ந்தெடுத்தப் பிறகும் அவர்களுக்குரிய இருக்கையில் உட்கார முடியாமல் சாதிய சமூகம் தடுத்தும், மிரட்டியும் வருகிறது. இத்தகைய சூழலில் துப்புரவுப் பணியாளரை பேருராட்சி சேர்மன் இருக்கையில் அமரச் செய்து மரியாதை செய்ததை உரிய அங்கீகாரமாகத்தான் பார்க்க வேண்டியதுள்ளது.

நிகழ்வு – 03

பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் பட்டுக்கோட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்தவர். தனக்கு ஒதுக்கப்பட்ட தெருக்களை எப்போதும் சுத்தமாக பராமரித்ததால் மகாலிங்கத்தை அப்பகுதியினர் ’மிஸ்டர் கிளீன்’ என்றே அழைத்துள்ளனர். கிட்டத்தட்ட 36 வருடங்கள் அர்ப்பணிப்போடு பணி செய்தவர் தற்போது ஓய்வு பெற, அவருக்குத் தலையில் கிரீடம், கழுத்தில் சந்தனமாலை அணிவித்து மரியாதை செய்து வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்று நெகிழ வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

இதுகுறித்து கண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ’’கண்டியன் தெரு, மணியார்புரம், மதுக்கூர் சாலை உள்ளிட்ட ஐந்து தெருக்கள் மகாலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. மகாலிங்கம் அந்தத் தெருக்களில் கிடக்கும் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்வார். ஒருநாள் கூட இதை செய்யத் தவறியதில்லை. எந்த வேலை செய்தாலும் அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும் எனச் சொல்வார்கள். அதற்கு சிறந்த உதாரணம் மகாலிங்கம்.mahalingam pattukottaiயார் என்ன சொன்னாலும் முகம் சுழிக்காமல் அந்த இடத்தை சுத்தம் செய்வார். எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகுவார். யாருக்குத் துயர் வந்தாலும் ஓடிப்போய் முதல் ஆளாக நிற்பார். பொருளாதார ரீதியாக அவரால் உதவ முடியவில்ல என்றாலும், உடல் உழைப்பைக் கொடுத்து ஆறுதலாய் தாங்கிப் பிடிப்பார். தெருக்களில் என்ன பொருள் கிடந்தாலும் அதை உரியவரிடம் சேர்த்து விடுவார். மனித நேயத்தோடு, நேர்மையை கடைப்பிடித்தவர் மகாலிங்கம். அவர் ஓய்வு பெறுகிறார் என்றதுமே நாங்க கலங்கி விட்டோம் என்கின்றனர் அப்பகுதியை சார்ந்தவர்கள்.

36 வருடங்களாக எங்களில் ஒருவராக இருந்த மகாலிங்கம் ஓய்வு பெறுவதை கொண்டாட நினைத்தோம். இதுதான் அவர் உழைப்புக்கு மரியாதை செய்வதற்கு சரியான வாய்ப்பு என்பதால், தெருவாசிகள் சேர்ந்து அதற்கான ஏற்பாட்டை செய்தோம். இதற்கு ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை செய்தனர். பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு ஃப்ளக்ஸ் போர்டு வைத்தோம். ஸ்ரீஆகாச காளியம்மன் கோவில் பகுதியில் ஒன்று கூடி மகாலிங்கத்தை அழைத்து வந்தோம்.

அவருக்கு கிரீடம் சூட்டினோம். சந்தன மாலை அணிவித்தோம். பலர் சால்வை போத்தி நிதியுதவி அளித்துப் பாராட்டினர். பின்னர், மகாலிங்கத்தை வாகனத்தில் ஏற்றி நிற்க வைத்தோம். வாகனத்தின் முன்னே ஐம்பதுக்கும் மேற்பட்ட டூவீலர்களில் தெருவாசிகள் அணிவகுக்க, பேண்ட் வாத்தியங்கள் முழங்க, வீதி எங்கும் பட்டாசு வெடித்து, அவர் வேலை செய்த தெருக்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றோம். வாகனத்தில் கட்டியிருந்த ஸ்ப்பீக்கர் மூலம், மகாலிங்கத்தின் அர்ப்பணிப்பான பணியை அனைவருக்கும் தெரியப்படுத்தினோம். அப்போது அவர் கண்களில் ஆனந்த கண்ணீர். மகாலிங்கம் இனி வேலைக்கு வரமாட்டார் என்பதை நினைத்தபோது எங்களுக்குக் கசிந்த கண்களோடு அவருக்கு பிரியா விடை கொடுத்தோம்’’ என்றனர்.

இதுகுறித்து ’’எனக்கு வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாமே நான் வேலை செய்த தெருக்கள் தான். 36 வருடங்களாக நான் செய்த வேலைக்கு இப்போது இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கண்டியன் தெரு வாசிகள் காட்டிய அன்பும், அக்கறையும் என் வேலையை சிறப்பாக செய்வதற்கு உதவியது. தூய்மைப் பணியாளராக வந்தவனை உறவினராக அணைத்துக் கொண்டனர். இந்த நாள் எனக்கு கிடைத்த பொக்கிஷம்’’ என மகாலிங்கம் நெகிழ்ந்திருக்கிறார்.

துப்புரவுப் பணியாளர் ஒருவரை அப்பகுதி மக்கள் இத்தனை கொண்டாடுகிறார்கள் என்றால் கிட்டத்தட்ட 36 வருடமாக அவர் அந்தத் தெருவை சுத்தமாக வைத்திருந்திருக்கிறார் என்ற சுயநலமும் அப்பகுதி மக்களுக்கு இருந்திருக்க வேண்டும். அதோடு மகாலிங்கத்தை மற்ற துப்புரவுப் பணியாளர்களைப் போன்று ஒதுக்காமல் இயல்பாக நடத்தியிருப்பதன் விளைவாகத்தான் அவர் பணி ஓய்வு நிகழ்வின் போது நெகிழ்ந்து பேசியிருப்பதற்குக் காரணமாக இருக்கவும் வேண்டும்.

நிகழ்வு – 04

மதுரையைச் சார்ந்த ஒரு துப்புரவுப் பணியாளர் நீண்ட நாட்களாக அவர் பணியாற்றிய 72 வது வார்டில், ஒரு தெருவை சுத்தம் செய்யும் பணிக்கு ஒதுக்கப்பட்டிருந்தார். அவர் பணி ஓய்வு பெறும் நாளன்று அப்பகுதி மக்களிடம் வீடு வீடாக தன் வழக்கமான பணியினை முடித்த பின்னர் போய், இன்று முதல் தான் பணி ஓய்வு பெறுகிறேன் என்ற தகவலை அவர் சொன்னதும், அவர்கள் அதுகுறித்து ஏற்கனவே அறிந்திருந்ததால் மாலைகள், சால்வை என அவரவருக்கு ஏற்றவாறு மரியாதை செய்து கௌரவித்து இருக்கிறார்கள்.

கடைசியாக அவருக்கு செலுத்திய மாலைகள் கழுத்து நிறைய போடப்பட்டு, அவற்றை சுமந்தவாறு அந்தத் தெருவை கடந்து முடியுமிடத்தில் அப்பகுதி மக்கள் வந்து வழியனுப்பியிருக்கிறார்கள். அதன் பிறகு அவர் பணிபுரிந்த வார்டில் சிலர் கூடி நின்று ஒரு சால்வையைப் போர்த்தியதும், அவர் இன்றுடன் பணி நிறைவு பெற்றதற்கான சான்றிதழைக் கொடுத்து அனுப்பிவிட்டிருக்கிறார்கள்.

இத்தனை நாட்கள் வேலை செய்ததற்கு அந்தப் பகுதியை சார்ந்த மக்கள் என்னை மிகவும் பாராட்டி வாழ்த்தினார்கள் என்று உற்சாகம் பொங்க கூறுகிறார். இவற்றில் சகப் பணியாளர்கள் மட்டுமில்லாமல், அலுவல் பணியாளர்கள் வெறுமனே ஐந்து நிமிடத்தில் பாராட்டி சால்வைப் போர்த்தி அனுப்பி விட்டார்கள். ஆனால் நான் வேலை செய்த பகுதியை சார்ந்த மக்கள் என்னை இன்று கொண்டாடினார்கள் என்று நெகிந்து போனார். இத்தனை நாள் இந்த வார்டில் நான் வேலை செய்ததற்கு சாட்சியாக அவர்கள் கொடுத்த சான்றிதழ் மட்டும்தான் கொடுத்தார்கள். மாநகராட்சியில் பணமா இல்லை. அதிகாரிகள் நினைத்தால் பணி ஓய்வு பெறும் அன்றைய தினமே பணப்பலன்களை காசோலை போட்டுத் தரலாம். ஆனால் அப்படியெல்லாம் அவர்களுக்குக் கொடுக்க மனசு வராது. இனி இரண்டு வருடங்கள் வரை நாயாக அலைய விடுவார்கள். அந்தப் பணம் வருகிற வரைக்கும் மற்றவர்களை கையேந்தி நிற்கும் நிலைமை வரும். இல்லையென்றால் மற்றொரு வேலையைத் தேடிக் கொண்டு சமாளிக்க வேண்டும் என்று தனது உள்ளக் குமுறலைப் பகிர்ந்து கொண்டார். இதுதான் இன்றைக்குப் பெரும்பாலான துப்புரவுப் பணியாளர்களின் நிலைமையாக இருக்கிறது.

மக்கள் அங்கீகரிப்பதை பெருமையாக ஏற்கும் மனம்

அரசுத் துறைகளில் மற்ற எந்தத் துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பணி ஓய்வு பெறும் போது அவர்களுடன் பணியாற்றும் சகப் பணியாளர்கள், பணி ஓய்வு பெறும் நபரை சிறப்பித்து வழியனுப்புவார்கள். ஆனால் துப்புரவுப் பணியளார்களை பொறுத்தவரை அவர்கள் எந்தப் பகுதியில் இத்தனை நாளும் குப்பைகள் உள்ளிட்ட கழிவுகளை சேகரித்துக் கொண்டுப் போய் கொட்டினார்களோ? அந்தப் பகுதி மக்களின் நல்ல பணியாளன் என்ற சொல்லை பெரிய அங்கீகாரமாக ஏற்றுக் கொள்ளப் பழக்கப்பட்டு போயிருக்கிறார்கள். இத்தனை நாள் தன்னை என்னவெல்லாம் சொல்லி திட்டியிருப்பார்கள்? ஒருநாள் குப்பையை எடுக்கப் போகவிட்டாலும் அவர்கள் அந்த துப்புரவுப் பணியாளரை எத்தனை வசை பாடியிருப்பார்கள். அல்லது சிலர் அவர்களின் முன்னிலையிலேயே வசை பாடவும் செய்திருப்பார்கள். அவற்றையெல்லாம் கண்டும் காணாமலும் தங்களின் பணிகளை செவ்வனே செய்தும், பணி ஓய்வின் போது, தான் வேலை செய்த தெருவை மறக்க முடியாமல் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டேப் போகிற அளவுக்கு அவர்கள் ஒன்றிப் போயிருக்கிறார்கள். இவ்வளவுதான் இந்தப் பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வும் இருக்கிறது.

மற்ற அரசுப் பணியாளர்களைப் போல் அல்லாமல் இவர்கள் இழிதொழில் என்று கருதப்படும் துப்புரவுப் பணியை செய்தும், குப்பைகளை உருவாக்கிப் போட்ட அப்பகுதி மக்களிடம் பிரியாவிடை பெறுவதும், அவர்களின் பாராட்டுக்களை பெறுவதிலும் உச்சி குளிர்ந்து போய்விடும் அளவுக்குத்தான் அவர்கள் வெள்ளந்தியான மனிதர்களாக இருக்கிறார்கள். இதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் ஆளும் அதிகார வர்க்கத்தினர் அப்பாவித் தனமாக துப்புரவுப் பணிகளை நம்ம வேலை என்று மண்டைக்குள் ஏற்றி வைத்துக் கொண்டு இன்றும், அது நமது சமூகத்திற்கு செய்யும் பெரிய கடமையாக செய்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களை இச்சமூகமும், அரசும் அந்த நிலையிலேயே வைத்துக் கொள்ள வேண்டுமென நினைக்கிறதே தவிர, அவர்களை அத்தகைய நிலையிலிருந்து மீண்டெழ செய்ய வேண்டும் என்ற அக்கறை கொண்டவர்கள் வெகு வெகு சிலரே இன்றைக்கு இருக்கிறார்கள். அதற்காக பொது சமூகத்தினர் அப்பகுதியில் பணியாற்றிய துப்புரவுப் பணியாளரை பாராட்டுகிறார்கள் என்றால், அவர்களின் தெரு, வீதிகள் எல்லாம் அந்நபரால்தான் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டது என்ற நன்றிக் கடனாகத்தான் நாம் மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம்.

உண்மையான கௌரவிப்பு எதுவாக இருக்க முடியும்?

வெறுமனே துப்புரவுப் பணியாளர்களை கௌரவித்து கொண்டாடி வழியனுப்புவது மட்டும் அவசியமில்லை. அவர்களின் பணிக்காலத்திற்குப் பிறகு அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய சொற்ப பணபலன்களை பெற வருடக்கணக்கில் அவர்கள் நடையாக நடந்து திரிய வேண்டியதிருக்கிறது. அவர்கள் அப்பணத்தை பெற அலுவலர்களுக்கான கையுட்டு ஒருபக்கம், அதற்கான வழிமுறையை செய்து கொடுத்து வழிகாட்டும் சங்கங்ளுக்கு கணிசமான தொகை கைமாறுவதும் வழக்கமாக இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் துப்புரவுப் பணியாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் பணியாளர்களிடமிருந்து தொகையைப் பெற்றும் அரசு அதிகாரிகளுக்கு கையுட்டுக் கொடுத்த பிறகும் பல்வேறு அலைக்கழிப்புகளுக்குப் பின்னால்தான் அவர்களுக்குச் சேர வேண்டிய பணப்பலன் தொகையை பெறும் சூழல் பரவலாக உ ள்ளது.

உண்மையாகவே துப்புரவுப் பணியாளர்களை அவர்களின் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்று கிளம்பும் போது கௌரவமாக வழியனுப்ப வேண்டும் என்றால் அவர்களுக்குப் போர்த்தக்கூடிய சால்வைகள், மாலைகளோடு அவர்களின் பணிக்காலத்திற்குப் பிறகு கிடைக்கக் கூடிய பணபலன்களை அப்போதே கையில் கிடைக்கும் வகையில் காசோலையாக கொடுக்க ஏற்பாடு செய்வதும், அவர்களை பணிக்காலத்தில் மதிப்புடன் நடத்தாவிட்டாலும், அதன் பிறகாவது நொந்து கொள்ள செய்யாமல் உரிய பணபலன்களை கிடைக்கச் செய்வதும் உடனடியான தேவையும் கூட.

எத்தனையோ துப்புரவுப் பணியாளர்கள் தங்களின் பணிக்காலத்திற்குப் பிறகும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணபலன்களை பெற பரிதாபமாக அலையும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். அத்தகைய போக்கை தவிர்க்கவும், துப்புரவுப் பணியாளர்களை அவர்களின் ஓய்விற்குப் பிறகு கன்னியாமான முறையில் நடத்தப்பட வேண்டுமென நினைக்கும் பட்சத்தில் இவைகளை செய்து கொடுப்பதே சாலச் சிறந்ததாக இருக்கும்.

துப்புரவுப் பணியாளர்களை கௌரவிப்பது என்பது அவர்களின் பணி ஓய்விற்குப் பிறகு ஒருநாள் செய்தால் போதும் என்பதல்ல. அவர்களின் பணிக்காலத்தில் அவர்களை பொதுச் சமூகத்தினர் எத்தனை கன்னியமாக நடத்துகிறார்கள் என்பதையும் பொறுத்திருக்கிறது. துப்புரவுப் பணியாளர்களைப் பார்த்தாலே முகம் சுளிப்பதும், கொஞ்சம் நகர்ந்து போய் நிற்பதும் அவர்களை சக மனிதர்களாகப் பார்க்காத நிலையைத்தானே வெளிப்படுத்துகிறது?

அப்படியானால் துப்புரவுப் பணியாளர்களை நாம் பொய்யாகத்தானே, கௌரவிக்கிறோம் என்ற பெயரில் ஒரு நாடகத்தையே நடத்தி விடுகிறோம்?

மு.தமிழ்ச்செல்வன்