தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக புதிதாக பதவியேற்றுள்ள திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் முன்னணி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் பதவியேற்றவுடன் அரசுக் காப்பீட்டைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கான சிகிச்சை பெறலாம் என்ற அறிவிப்பும் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்குவதாக செய்த அறிவிப்பும் தமிழ்நாட்டு அதிகாரிகளையே முதல்வரின் ஆலோசகராகவும் தலைமைச் செயலாளராகவும் நியமனம் செய்ததும் கொரோனா பெருந்தொற்றை எதிர் கொள்வதற்கான தங்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் நம்பிக்கை தருவதாக உள்ளது. தங்களுடைய இந்த முயற்சிகளுக்கு தமிழர் முன்னணி சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்.
கொரோனா பெருந்தொற்று உலகை அச்சுறுத்தி வருகின்ற இவ்வேளையில் அதை எதிர் கொள்வதற்கான மருத்துவம் குறித்து நமது பார்வையில் மாற்றங்கள் தேவைப்படுகின்றது.
நமது நடைமுறையைப் பொருத்தவரை மருத்துவக் கல்வி மருத்துவம், மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீடு, தடுப்பு மருந்துகள் என அனைத்தும் அலோபதி வழி குறித்து சிந்திப்பதாகவே உள்ளது.
மருத்துவம் என்றாலே அலோபதி மருத்துவம் என்பதாக மட்டுமே சிந்திக்கிறோம். இது மிகையான சித்தரிப்பு இல்லை. அரசு மருத்துவமனை என்பது அலோபதி மருத்துவமனையாக மட்டுமே உள்ளது.
சித்தம், ஆயூர்வேதம், ஓமியோபதி, யூனானி, வர்மம், அலோபதி என பல்வேறு மருத்துவ முறைகள் நோய் தீர்க்கும் மருத்துவ முறைகளாக மக்களால் பயன்படுத்தப்படும் போது ஒரு மருத்துவ முறையை மட்டும் பிடித்துக் கொள்வது என்பது மக்களின் பிணி தீர்க்கும் கடமையை முழுமையாக நிறைவேற்றப் பயன்படாது. ஒரு மருத்துவ முறைக்கு மட்டும் அளிக்கும் ஆதரவுக்கு மாறாக நோய் தீர்க்கும் மருந்துகளுக்கு ஆதரவு என்ற நிலையே நமக்குத் தேவை.
தமிழ் மருத்துவமாகவும் மக்கள் மருத்துவமாகவும் உள்ள சித்த மருத்துவம் அரசின் போதிய ஆதரவு இன்றி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
கொடிய கொரோனாத் தொற்றை தமிழ் மருத்துவத்தால் எதிர்கொள்ள முடியும் என சித்த மருத்துவர்கள் அறைகூவி அழைத்தாலும் அரசின் மருத்துவம் குறித்த பார்வை காரணமாக அவை புறக்கணிக்கப்படுகின்றன.
இக்கொடிய கொரோனா காலத்தில் பெருங்குழுமங்கள் வணிகமாக முன்நிறுத்தும் அலோபதி முறைகளை மட்டும் முன்னெடுத்துச் செல்வது முழுப்பயன் தராது.
நமக்குத் தேவை மக்களின் பிணி தீர்க்கக்கூடிய மருத்துவம். அது அலோபதி, சித்தம், ஓமியோபதி, யூனானி, வர்மம், ஆயூர்வேதம் என அனைத்து வகைப்பட்ட மருத்துவ முறைகளும் ஒருங்கிணைக்கபட்ட ஒருங்கிணைந்த மருத்துவ பார்வையே.
அதிலும் நமது மண்ணின் மருத்துவமான தமிழ் (சித்த) மருத்துவம் கொரோனா அச்சுறுத்தும் காலத்தில் பிணியை நீக்கி மக்களைக் காக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கின்றது.
தமிழ் மருத்துவத்தால் கொரோனாவை எதிர்கொள்ள முடியும் என்பதை நிரூபிக்க தமிழ் மருத்துவர்கள் நீதிமன்றம் சென்றார்கள் சிறை சென்றார்கள். தனி மருத்துவர்களாக, மருத்துவமனைகளாக பல முன்னுதாரங்களை உருவாக்கினார்கள்.
தேசிய சித்த மருத்துவ நிறுவனம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி போன்ற சித்த மருத்துவ நிறுவனங்கள் குறைந்த நாட்களிலேயே கொரொனாவை குணப்படுத்த முடியும் என்பதை செய்து காண்பித்தார்கள்.
அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக கபசுர குடிநீர் கொரொனாவுக்கான மருந்தாக பயன்படுகிறது என்பதை இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அண்மையில் அறிவித்து உள்ளது. தற்போதையா கொரொனா அலையை எதிர்கொள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மீண்டும் தன் சேவையைத் தொடங்கி உள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு தனது மருத்துவப் பார்வையை ஒருங்கிணைந்த மருத்துவம் என்று மாற்றி அமைத்துக் கொள்வதோடு அனைத்து அரசு மருத்துவமனைகளையும் ஒருங்கிணைந்த மருத்து முறைகளைக் கொண்ட மருத்துவமனைகளாக மாற்றியமைக்கும் வேலைகளை கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் இருந்து தொடங்க வேண்டும்.
- செயப்பிரகாசு நாராயணன், தலைவர், தமிழர் முன்னணி